மத்திய அமைச்சரவை

கோவா முதலமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் மார்ச் 17, 2019-ல் பனாஜியில் காலமானார்

அவரது மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்

Posted On: 18 MAR 2019 11:08AM by PIB Chennai

கோவா முதலமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் பனாஜியில் நேற்று (17.03.2019) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திரு. பாரிக்கரின் நினைவாக அமைச்சரவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் கடைபிடிக்கவும், தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

திரு. மனோகர் பாரிக்கரின் நினைவாக பின்வரும் அனுதாப தீர்மானத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது:

கோவா முதலமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் பனாஜியில் நேற்று (17.03.2019) காலமானதால் அவரது மறைவுக்கு மத்திய அமைச்சரவை தனது ஆழ்ந்த துயரத்தை தெரிவித்துக் கொள்கிறது. சாமானியர்களின் முதலமைச்சர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு.பாரிக்கரின் மறைவால், நாடு ஒரு முதுபெரும், ஒப்பற்ற தலைவரை இழந்துள்ளது.

கோவாவின் மபுசாவில் டிசம்பர் 13, 1955-ல் பிறந்த திரு.பாரிக்கர், மர்கோவா லயோலா பள்ளியில் பயின்றார். பின்னர் 1978-ல் மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உலோகவியல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். அரசியல் பிரவேசத்திற்கு முன்பு திரு.பாரிக்கர், ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தில் இளம் வயதில் சேர்ந்தார்.  தமது பள்ளிப் படிப்பை நிறைவு செய்வதற்கு முன்பே ஆர்.எஸ்.எஸ்.சில்  முதன்மை பயிற்றுனராக உருவானார். ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்ததும், மபுசாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தமது பணியை மீண்டும் தொடர்ந்தார். அதில் தமது 26வது வயதில் சங்சலாக் பதவிக்கு உயர்ந்தார்.

பிஜேபியின் உறுப்பினரான திரு.பாரிக்கர், 1994-ல் கோவா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 24, 2000-மாவது ஆண்டில் அவர் முதல் முறையாக கோவா முதலமைச்சரானார். பிப்ரவரி 27, 2002 வரை இந்தப் பதவியை வகித்தார். ஜூன் 3-ந் தேதி 2002-ல் அவர் மீண்டும் கோவா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2-ந் தேதி பிப்ரவரி 2005 வரை பதவியில் இருந்தார். கோவா முதலமைச்சராக அவர் 3-வது முறையாக 9-ந் தேதி மார்ச் 2012-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8-ந் தேதி நவம்பர் 2014 வரை இந்தப் பதவியில் நீடித்தார். 9 நவம்பர் 2014-ல் திரு. பாரிக்கர் மத்திய பாதுகாப்பு அமைச்சரானார். மார்ச் 13, 2017 வரை இப்பதவியில் அவர் நீடித்தார். பின்னர் மார்ச் 14, 2017-ல் மீண்டும் கோவா முதலமைச்சராக அவர் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

திரு. பாரிக்கரின் எளிமையான வாழ்க்கை  மற்றும் சிறந்த நிர்வாகியான அவரது திறமைகள் என்றென்றும் நினைவுக் கூறத்தக்கவை. நவீன கோவாவை வடிவமைப்பதிலும் இந்தியாவின் முப்படையை நவீனமாக்குவதிலும் முன்னாள் படை வீரர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதிலும் அவர் ஆற்றிய பணிகள் என்றுமே மறக்க முடியாதவை.

புகழ் பெற்ற முன்னாள் மாணவருக்கான விருது திரு.பாரிக்கருக்கு மும்பை ஐஐடியில் 2001-ல் வழங்கப்பட்டது. கோவா தேசிய தொழில்நுட்ப கழகத்தின் கவுர டாக்டர் விருதும், டாக்டர் எஸ்.பி. முகர்ஜி விருதும் 2018-ல் திரு. பாரிக்கருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

திரு. பாரிக்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கோவா மக்களுக்கும், அரசு சார்பிலும், நாட்டின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை அமைச்சரவை தெரிவித்துக் கொள்கிறது.

*****



(Release ID: 1569170) Visitor Counter : 116