பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படையின் ஆயத்த நிலை பற்றி விவாதிக்க கடற்படை தளபதிகள் கொச்சியில் கூடுகின்றனர்
Posted On:
17 MAR 2019 2:24PM by PIB Chennai
இந்திய கடற்படையின் மிகப் பெரிய போர் ஒத்திகையான TROPEX 19 எனப்படும் செயற்கள அளவிலான ஆயத்த நிலை பற்றிய கூட்டத்திற்கு தலைமை வகிப்பதற்காக கடற்படை தலைமை தளபதி அட்மிரல் சுனில் லம்பா நாளை (18.03.2019) கொச்சி செல்கிறார். 7 ஜனவரி 2019 அன்று தொடங்கிய இந்த ஒத்திகை 10 மார்ச் 2019 உடன் நிறைவடைவதாக இருந்தது. ஆனால் 14 பிப்ரவரி 2019 அன்று புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வாகனம் மீது ஜெய்ஷ்-இ –முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக, இந்திய கடற்படை வட அரபிக் கடல் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றம் காரணமாக, போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா, அனு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற வகை போர் கப்பல்கள், நீர்மூழ்கிகள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட கடற்படையின் முக்கிய போர் தளவாடங்கள், வழக்கமான பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நமது கடல் எல்லை வழியாக, பாகிஸ்தான் ஏதாவது அத்துமீறலில் ஈடுபட்டால், அதனை தடுக்கவும், எதிர்த்து போரிட்டு முறியடிக்கவும் தயாராக இருக்குமாறு 28 பிப்ரவரி 2019 அன்று நடைபெற்ற முப்படைகளின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போதும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டது.
எனவே இந்திய கடற்படையின் 60 கப்பல்கள், இந்திய கடலோர காவல் படையின் 12 கப்பல்கள் மற்றும் 60 விமானங்கள், TROPEX 19 ஒத்திகையில் பங்கேற்றுள்ளன. பணித்தன்மையை மாற்றிக் கொள்வதற்கான “செயலாக்கம்”, “இயக்கம்” மற்றும் “சமநிலையில் வைத்திருத்தல்” ஆகியவை கடற்படையின் முக்கிய பண்பாக உள்ளது. TROPEX 19 -ற்காக பெரும் அளவிலான போர் ஆயத்த தளவாடங்கள் முப்படைகளின் தேவைக்கு ஏற்ப அருகிலேயே தயார் நிலையில் இருந்ததால், இந்திய கடற்படை விரைவாக செயல்பட வழிவகுத்தது. 3 பரிமாணங்களிலும், இந்திய கடற்படை உச்சகட்ட வல்லமையுடன் இருந்ததால், பாகிஸ்தான் கடற்படை மேக்ரன் கடற்கரை அருகில் வரை மட்டுமே நிறுத்தப்பட்டிருந்ததுடன் ஆழ்கடலுக்குள் நுழையவில்லை.
முன்னதாக அந்தமான் நிகோபார் தீவுகளில், ராணுவம் மற்றும் விமானப்படை பங்களிப்புடன் முப்படைகளின் நில-நீர் ஒத்திகையான TROPEX 19 மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து மாபெரும் கடலோர பாதுகாப்பு ஒத்திகையான கடல் கண்காணிப்பு (sca vigil) 22 மற்றும் 23 ஜனவரி 2019-ல் நடைபெற்றது. இதில் நாட்டின் 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அனைத்து கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளும் இதில் பங்கேற்றன. புவியியல் ரீதியாக TROPEX தான் இதுவரை நடத்தப்பட்ட ஒத்திகைகளில் அதிக அளவிலான போர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் பங்கேற்ற ஒத்திகை ஆகும்.
நாளை நடைபெறும் TROPEX 19 ஆய்வுக் கூட்டத்தில் கடற்படை தலைமை தளபதி மற்றும் கடற்படையின் செயல்பாட்டு பிரிவில் பணியாற்றும் அனைத்து கமாண்டர்களும் பங்கேற்று இந்த போர் ஒத்திகை ஆய்வு செய்வதுடன், இந்திய கடற்படையின் செயல்பாட்டு ஆயத்த நிலை குறித்தும் மதிப்பிட உள்ளனர். இந்திய கடற்படையின் போர் தளவாட பயன்பாட்டு கொள்கை மற்றும் போர் திறமை குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஒத்திகையிலிருந்து அறிந்து கொள்ளப்படும் கருத்துக்கள், கடற்படையின் கட்டமைப்பு தேவைகளை துல்லியமாக மதிப்பீடு செய்து தேவையான கப்பல்கள், விமானங்கள் வாங்கவும், அத்தியாவசிய பயிற்சிகளை மேற்கொள்ளவும் உதவும்.
(Release ID: 1568946)
|