பிரதமர் அலுவலகம்

பெட்ரோடெக் 2019 நிகழ்வைத் தொடங்கி வைத்தார் பிரதமர்; சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி முக்கிய உந்துசக்தியாக திகழ்கிறது என கருத்துரை

எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு வெளிப்படையான, நெகிழ்வான சந்தைகளோடு பொறுப்பான விலையும் தேவைப்படுகிறது என பிரதமர் கருத்து

எரிசக்திக்கான நீதியின் அடிப்படையிலான காலம் உருவாவதற்கு இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என பிரதமர் கருத்து
நீலச் சுடர் புரட்சி வரவிருக்கிறது; 90 சதவீத மக்கள் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர் என பிரதமர் கருத்து

Posted On: 11 FEB 2019 2:02PM by PIB Chennai

உத்திரப்பிரதேச மாநிலம் க்ரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மையத்தில் ஹைட்ரோகார்பனுக்கான இந்தியாவின் முன்னோடி நிகழ்வான 2019-ம் ஆண்டிற்கான பெட்ரோடெக் 13வது நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

தனது தொடக்கவுரையில் எரிசக்தியானது சமூகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக விளங்குவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். “பொருத்தமான விலை, நிலையான, நீடித்த எரிசக்தி விநியோகம் என்பது பொருளாதாரத்தின் துரித வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும். பொருளாதாரப் பயன்களை சமூகத்தின் நலிந்த, ஒதுக்கப்பட்ட பிரிவினரும் பெறுவதற்கும் அது உதவுகிறது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஷேல் வகைப்பட்ட எண்ணெய் துரப்பணப் பணிகளில் அமெரிக்கா உலகின் மிகப்பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளராக மாறிய பிறகு மேற்கத்திய நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் இடையே எரிசக்தி நுகர்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். எனினும் மலிவான, மறுசுழற்சி வகைப்பட்ட எரிசக்தி, தொழில்நுட்பங்கள் மற்றும் எண்ம பயன்பாடுகள் ஆகியவற்றுக்கிடையே நெருக்கத்திற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில் அது நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் பலவற்றையும் வென்றடைவதையும் விரைவுபடுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 “… உற்பத்தியாளர்கள், நுகர்வோர் ஆகிய இருவரின் நலன்களையும் ஈடுகட்டும் வகையில் பொறுப்பான விலையை நோக்கி நகர வேண்டும். எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய இரண்டிற்குமான நெகிழ்வான, வெளிப்படையான சந்தையை நோக்கியும் நாம் நகர வேண்டியுள்ளது. அதன்பிறகு மனிதகுலத்தின் எரிசக்திக்கான தேவைகளை நம்மால் முழுமையாக நிறைவேற்ற முடியும் என்பதே இந்த நேரத்தில் தேவையாக உள்ளது” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றத்தின் சவால்களை சமாளிக்க கரம் கோர்க்க வேண்டியிருப்பதை உலக இனத்திற்கு நினைவூட்டிய அவர், பாரீஸ் நகரில் நடைபெற்ற சிஓபி-21 கூட்டத்தில் நாமே இறுதிப்படுத்தியிருந்த இலக்குகளை அதன் மூலமே நிறைவேற்ற இயலும் என்று குறிப்பிட்டார். இதுகுறித்த தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இந்தியா மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எரிசக்தித் துறை மற்றும் எதிர்காலத்திற்கான தொலைநோக்கு ஆகியவற்றுக்கான அவரது பங்களிப்பிற்காக மேதகு டாக்டர் சுல்தான் அல் ஜாபர்-ஐ பிரதமர் பாராட்டினார். தொழில்துறையின் நான்காவது தலைமுறை செயல்வடிவமானது புதிய தொழில்நுட்பம், செயல்முறைகள் ஆகியவற்றின் மூலம் தொழில் துறை செயல்படும் விதத்தை மாற்றியமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். செயல்திறனை மேம்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும், உற்பத்திச் செலவைக் குறைக்கவும் நவீன தொழில்நுட்பத்தை நமது நிறுவனங்கள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 “பெருமளவிலான எரிசக்தி பெறும் காலத்திற்குள் நாம் நுழைந்து வந்த போதிலும், உலகம் முழுவதிலும் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் மின்சார வசதியைப் பெறாதவர்களாக உள்ளனர்; மேலும் பலர் தூய்மையான சமையல் எரிபொருள் கிடைக்க வாய்ப்பில்லாதவர்களாக உள்ளனர்” என்ற நிலையில் தூய்மையான, எளிதாகப் பெறத்தக்க, நீடித்த, சம அளவிலான எரிசக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். எரிசக்தியைப் பெறுவதில் உள்ள இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது உலகத்தில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது; 2030-ம் ஆண்டு காலப்பகுதியில் அது உலகத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாறக் கூடும் என்பதோடு உலகத்தின் அதிகமான எரிசக்தியை நுகரும் நாடுகளில் மூன்றாவதாக அது திகழக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். 2040-ம் ஆண்டு வாக்கில் எரிசக்திக்கான தேவையானது இரண்டு மடங்காக உயரவிருக்கும் நிலையில் எரிசக்தி தொடர்பான நிறுவனங்களுக்கு கவர்ச்சிகரமான சந்தையாக இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

2016 டிசம்பரில் நடைபெற்ற பெட்ரோடெக் மாநாட்டில் எரிசக்தி குறித்த இந்தியாவின் எதிர்காலத்தின் நான்கு தூண்களான எரிசக்தி கிடைப்பதற்கான வசதி, திறமையான எரிசக்தி, நீடித்த எரிசக்தி, பாதுகாப்பான எரிசக்தி ஆகியவை குறித்து தான் குறிப்பிட்டதை பிரதமர் இத்தருணத்தில் நினைவுகூர்ந்தார். நியாயமான எரிசக்தி என்பதும் கூட முக்கியமான இலக்காக உள்ளது; அது இந்தியாவின் மிக முக்கியமான முன்னுரிமை அம்சமாக உள்ளது.  “இந்த வகையில் பல கொள்கைகளை நாங்கள் உருவாக்கி, செயல்படுத்தியுள்ளோம். இந்த முயற்சிகளின் பயன்கள் இப்போது வெளிப்படத் தொடங்கியுள்ளன. நமது கிராமப்புறப் பகுதிகள் அனைத்தையும் மின்சாரம் சென்றடைந்துள்ளது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். மக்கள் தங்களது கூட்டு சக்தியில் நம்பிக்கை வைத்தால் மட்டுமே நியாயமான எரிசக்தி என்பது இருக்கும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

 “ நீலச் சுடர் புரட்சி இப்போது நடைபெற்று வருகிறது என்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நாட்டு மக்களில் 55 சதவீதம் பேருக்கு மட்டுமே கிடைத்து  வந்த சமையல் எரிவாயு வசதி இப்போது 90 சதவீதம் பேரை எட்டியுள்ளது” என்று குறிப்பிட்ட பிரதமர் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை மிக முக்கியமான சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். உலகத்தின் நான்காவது மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பெற்ற நாடாக இப்போது இந்தியா உள்ளது. இது 2030-ம் ஆண்டிற்குள் 200 மில்லியன் மெட்ரிக் டன்களாக மேலும் வளரவுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எரிவாயு அடிப்படையிலான ஒரு பொருளாதாரத்தை நோக்கி இந்தியா மிக வேகமாக நடைபோட்டு வருகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். 16,000 கிலோமீட்டருக்கும் மேலான நீளமுள்ள எரிவாயுக் குழாய் வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் 11,000 கிலோமீட்டர் நீள குழாய் வசதி தற்போது கட்டப்பட்டு வருகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். நகர அளவிலான எரிவாயு விநியோகத்திற்கான பத்தாவது சுற்று ஏலம் 400 மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது என்றும் நமது மக்கள் தொகையில் 70 சதவீத மக்களுக்கு நகர அளவிலான எரிவாயு விநியோகம் விரிவுபடுத்தப்படுகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த 2019-ம் ஆண்டின் பெட்ரோடெக் நிகழ்வில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் பங்கேற்றுள்ளன. எரிசக்தித் துறை எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு தீர்வுகாண விவாதத்திற்கான ஒரு மேடையாக இந்த பெட்ரோடெக் நிகழ்வு கடந்த கால் நூற்றாண்டாக இருந்து வருகிறது. எரிசக்தி துறையின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதற்கான பொருத்தமான களத்தையும் பெட்ரோடெக் வழங்குகிறது. உலக அளவிலான மாற்றங்கள், மாறுதல்கள், கொள்கைகள், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவை சந்தையின் நிலைத்தன்மைக்கும் இத்துறையில் எதிர்கால முதலீடுகளுக்கும் எவ்வாறு உதவி செய்கின்றன என்பதை பிரதிபலிக்கும் மேடையாகவும் இது அமைகிறது.

*****



(Release ID: 1563949) Visitor Counter : 203