பிரதமர் அலுவலகம்

‘துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு 2019-ல்’ பங்கேற்க பிரதமர் நாளை குஜராத் பயணம்

காந்தி நகரில் துடிப்புமிக்க குஜராத் உலக வர்த்தக காட்சி தொடங்கி வைக்கப்பட உள்ளது
அகமதாபாதில் அதிநவீன சர்தார் வல்லபாய் படேல் மருத்துவ விஞ்ஞான நிறுவனம் திறந்து வைக்கப்பட உள்ளது
அகமதாபாத் விற்பனை விழா 2019-ஐ பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
9-வது துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு வரும் 18-ம் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்படுகிறது
2019 ஜனவரி 19-ம் தேதி பிரதமர் ஹாசிரா, சில்வாசா, மும்பை ஆகிய இடங்களுக்குப் பயணம்

Posted On: 16 JAN 2019 7:19PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் தமது 3 நாள் பயணத்தை நாளை  (17.01.2019) தொடங்குகிறார். இப்பயணத்தின் போது அவர் காந்திநகர், அகமதாபாத், ஹாசிரா ஆகிய இடங்களுக்குச் செல்கிறார்.

   தனது முதல் நிகழ்ச்சியாக நாளை காந்தி நகரில் மகாத்மா மந்திர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் துடிப்புள்ள குஜராத் உலக வர்த்தக காட்சியை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.  இந்த காட்சியில் 25-க்கும் மேற்பட்ட  தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகத் துறையினர் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர்.

   மாலையில், பிரதமர் அகமதாபாதில் சர்தார் வல்லபாய் படேல் மருத்துவ விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைக்கிறார். இந்த நிறுவனம் அதிநவீன அதி சிறப்பு பொது மருத்துவமனையாகும். அகமதாபாத் மாநகராட்சியால்  கட்டப்பட்ட இந்த மருத்துவமனை வான்வழி ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளையும்  கொண்டது. இந்த 78 மீட்டர் உயர கட்டிடம் உயர்ந்த திறன், அளவு மற்றும் விரைவுக்கு உதாரணமாக திகழ்கிறது.

  டிஜிட்டல் இந்தியா உணர்வுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை முற்றிலும் காகிதம் ஆவணம் இல்லாத மருத்துவமனையாக செயல்படும்.  சாதாரண மனிதனுக்கு மருத்துவ சேவை வழங்கும் இந்த மருத்துவமனை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் தொலைநோக்கை அடைய உதவிகரமாக இருக்கும்.

    இந்த மருத்துவமனையில் உள்ள வசதிகளை ஆய்வு செய்யும் பிரதமர் , அங்கு பொதுக் கூட்டம் ஒன்றிலும் உரையாற்றுகிறார்.

  பின்னர் அன்று மாலை அகமதாபாத் விற்பனை விழா 2019-ஐ பிரதமர் துவக்கி வைக்கிறார்.  துடிப்புள்ள குஜராத் உச்சிமாநாட்டுடன் இணைந்து இந்த விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் துடிப்புள்ள குஜராத் அகமதாபாத் விற்பனை விழா’வின் சின்னத்தையும் திறந்து வைக்கிறார். அகமதாபாத் விற்பனை விழா 2019 இந்த வகையில் நாட்டிலேயே முதலாவதாக நடத்தப்படும் நிகழ்ச்சியாகும்.   நகர்ப்புற வர்த்தகர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு இந்த விழா நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.

  இந்த நிகழ்ச்சியின் போது, பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதமர் உரையாற்றுகிறார்.

  அடுத்த நாள் அதாவது 18.01.2019 அன்று காந்திநகரில், மகாத்மா மந்திர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் 9-வது துடிப்புள்ள குஜராத் உச்சிமாநாட்டை  பிரதமர் தொடங்கி வைக்கிறார். 2003-ஆம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது துடிப்புள்ள குஜராத் உச்சிமாநாடு பற்றிய கருத்து உதித்தது. குஜராத் மாநிலத்தை விரும்பத்தக்க முதலீட்டு இடமாக மாற்றியமைப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டது.  உலக சமூகப் பொருளாதார மேம்பாடு, அறிவுப் பகிர்வு, திறம்பட்ட கூட்டாண்மையை உருவாக்குதல் போன்ற தலைப்புகளில் இந்த உச்சிமாநாடு விவாத மேடையாகப் பயன்படும்.

    2019 ஜனவரி 19-ம் நாள் ஹாசிராவுக்கு செல்லும் பிரதமர் ஹாசிரா துப்பாக்கித் தொழிற்சாலை அமைக்கப்பட்டதன் நினைவாக நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

  ஹாசிராவிலிருந்து பிரதமர் தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேச தலைநகர் சில்வாசாவுக்கு செல்கிறார். அங்கு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் : மேலும் பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

  தமது பயணத்தின் இறுதிக் கட்டமாக பிரதமர், ஜனவரி 19-ம் தேதியன்று மும்பை செல்கிறார். அங்கு இந்திய சினிமாவின் தேசிய அருங்காட்சியகத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.



(Release ID: 1560299) Visitor Counter : 206