சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஆண்டறிக்கை: 2018
Posted On:
11 JAN 2019 12:05PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத்
மத்திய நிதியுதவியுடன் கூடிய ஆயுஷ்மான் பாரத் திட்டம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் தொடங்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் மற்றும் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம் ஆகிய இரண்டு மாபெரும் திட்டங்களை ஒன்றிணைத்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆயுஷ்மான் பாரத் – சுகாதாரம் & நலவாழ்வு மையங்கள்
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், சுகாதாரம் & நலவாழ்வு மையங்கள் மூலம், தொடக்கநிலை சுகாதார சேவைகள் விரிவான அளவிற்கு வழங்கப்படுகிறது. இது மக்களையும், சமுதாயத்தையும் மையப்படுத்திய சுகாதார சேவைகளை வழங்குவதுடன், சுகாதார சேவைகளை பொறுப்புடனும், எளிதில் கிடைக்கும் வகையிலும், அனைவருக்கும் சமமான சேவை கிடைப்பதையும் உறுதி செய்கிறது.
ஆயுஷ்மான் பாரத் – சுகாதாரம் & நலவாழ்வு மையங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளின் விவரம்:
- பேறுகால மற்றும் குழந்தை பிறப்பு கவனிப்பு
- பச்சிளங்குழந்தை மற்றும் சிசு ஆரோக்கிய சேவைகள்
- குழந்தைப்பருவ மற்றும் வளர் இளம் சுகாதார சேவைகள்
- குடும்பக் கட்டுப்பாடு, கருத்தடை சேவைகள் மற்றும் இதர கர்ப்ப கால சுகாதார சேவைகள்
- தேசிய சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்புத் திட்டங்கள்
- பொதுவான தொற்றுநோய் தடுப்பு மற்றும் நீண்டகாலமாக சாதாரண நோயால் பாதிக்கப்பட்ட புறநோயாளிகள் கவனிப்பு மற்றும் சிறு வியாதிகள் கவனிப்பு
- தொற்றா நோய்களைக் கண்டறிதல், தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்
- பொதுவான கண் மற்றும் காது, மூக்கு, தொண்டை குறைபாடுகளுக்கான சிகிச்சை
- அடிப்படை வாய் குறைபாடுகள்
- மூத்த குடிமக்கள் மற்றும் வலி நிவாரண சிகிச்சைகள்
- அவசரகால மருத்துவ சேவை
- மனநல குறைபாடுகளை கண்டறிதல் மற்றும் அடிப்படை சிகிச்சை
ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம்
ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம், 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு (சுமார் 50 கோடி பயனாளிகள்), ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான இரண்டாம் நிலை மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் 2018 செப்டம்பர் 23-ல் தொடங்கப்பட்டது.
- திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கை: 16,112
- அனுமதிக்கப்பட்ட பயனாளிகள்: 6,81,825
- வழங்கப்பட்ட ஈ - அட்டைகள்: 39,48,496
- தேசிய அளவில் இத்திட்டத்தை செயல்படுத்த, சங்கங்களைப் போன்ற தேசிய சுகாதார முகமை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அனைத்து பொறுப்புகளும், இந்த தேசிய சுகாதார முகமையை சாரும். இந்த முகமை 11.05.2018 முதல் செயல்பட்டு வருகிறது.
- இத்திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை www.abnhpm.gov.in. என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
ஆஷா திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- 10,63,670 ஆஷாக்கள் மற்றும் ஆஷா ஏற்பாட்டாளர்கள் பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
- 95,73,032 ஆஷாக்கள் மற்றும் ஆஷா ஏற்பாட்டாளர்கள் பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
- 10,22,265 ஆஷாக்கள் தொடர் செயல்பாடுகளுக்காக மாதந்தோறும் இனி குறைந்தபட்சம் ரூ.2000 பெறுவர்.
- 41,405 ஆஷா ஏற்பாட்டாளர்களுக்கு கூடுதல் கண்காணிப்பு கட்டணங்கள் வழங்கப்படும்.
தேசிய சுகாதாரக் கொள்கை 2017
நாட்டின் தேசிய சுகாதாரக் கொள்கை, 15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. பொது சுகாதார செலவுகளை, 2025 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% அளவிற்கு உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
இதுதவிர, இந்தக் கொள்கையின் வேறுசில முக்கிய அம்சங்கள் வருமாறு:
- உறுதியுடன் கூடிய அணுகுமுறை
- சுகாதார மையங்களுடன் இணைக்கப்பட்ட சுகாதார அட்டைகள்
- நோயாளி சார்ந்த அணுகுமுறை
- தரமான சிகிச்சை
இணை சுகாதார தொழில் மசோதா, 2018
இந்திய இணை சுகாதார கவுன்சில் ஒன்றை தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஏற்படுத்த இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த கவுன்சில் இணை சுகாதார வல்லுநர்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும்.
உலகளாவிய தடுப்பூசித் திட்டம்
இந்தியாவின் உலகளாவிய தடுப்பூசித் திட்டம், உலகிலேயே மிகப் பெரிய பொது சுகாதாரத் திட்டமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் பிறக்கும் 2.7 கோடி குழந்தைகள் மற்றும் 3 கோடி கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் 90 லட்சம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்திர தனுஷ் இயக்கம்
இந்திர தனுஷ் இயக்கம் மத்திய அரசால் 2014 டிசம்பரில் தொடங்கப்பட்டது. தடுப்பூசியே போடப்படாத அல்லது குறைந்த அளவில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளை காக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தூய்மையே சேவை
காயகல்ப் திட்டத்தின் சாதனைகளால் கிடைத்த ஊக்கம் காரணமாக, தனியார் மருத்துவமனைகளின் சுகாதார வசதிகளை மதிப்பீடு செய்ய, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை வழங்குவோருக்கான தேசிய தர நிர்ணய வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி, தனியார் மருத்துவ மனைகளால் மேற்கொள்ளப்பட்ட தலைசிறந்த சேவைகள் ஆண்டுதோறும் கண்டறியப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்படும்.
மருத்துவக் கல்வி
நாடு முழுவதும், அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ சேவையாற்றுவதற்காக பதிவு செய்வதற்கும் ஒரு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
மாநில அரசுகளால் நடத்தப்படும் 36 மருத்துவ கல்லூரிகளில் 2,615 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளுக்கு ரூ.1471.30 கோடி வழங்கப்பட்டுள்ளது.
குறுகிய கால சுகாதார படிப்புகளை வழங்குவதற்காக, இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், 10 வகையான படிப்புகளில், 2025-க்குள் 14 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும்.
தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
******
(Release ID: 1559789)
Visitor Counter : 2227