பிரதமர் அலுவலகம்

சிறந்த மற்றும் கூடுதல் உத்தரவாதம் அளிக்கும் வகையில் குடிநீர் வழங்கும் கங்காஜல் திட்டத்தை பிரதமர் ஆக்ராவில் தொடங்கி வைத்தார்

சுற்றுலாவுக்கு உகந்த பொலிவுறு நகரமாக ஆக்ரா உருவாக்கப்படுகிறது – ஆக்ரா பொலிவுறு நகரத்திற்கு ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் கட்டப்படவுள்ளது
ஆக்ராவில் எஸ்என் மருத்துவக்கல்லூரி தரமேம்பாட்டிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
பாஞ்ச்தாரா – தேசத்தின் முன்னேற்றத்திற்கான சாவியை 5 அம்ச வளர்ச்சித் திட்டங்கள் கொண்டிருக்கின்றன : பிரதமர்
ஆக்ராவிற்கு ரூ.2900 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டன

Posted On: 09 JAN 2019 7:30PM by PIB Chennai

ஆக்ராவில் சுற்றுலாவுக்கான அடிப்படை கட்டமைப்பின் மேம்பாட்டிற்கும் விரிவாக்கத்திற்கும் மிகப்பெரும் உந்துதலை அளிக்கும் வகையில் ஆக்ரா நகருக்கும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் ரூ.2900 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

ஆக்ராவுக்கு சிறந்த மற்றும் கூடுதல் உத்தரவாதம் அளிக்கும் வகையில் ரூ.2880 கோடி செலவு மதிப்பிலான கங்காஜல் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆக்ராவுக்கு வினாடிக்கு 140 கனஅடி கங்கை நீரைக் கொண்டு வருவது கங்காஜல் திட்டத்தின் நோக்கமாகும்.

ஆக்ரா பொலிவுறு நகரின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து நோக்கத்திற்காக ஆக்ரா நகர் முழுவதும் கண்காணிப்பதற்கு இந்த திட்டத்தின் மூலம் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும். ஆக்ராவை ரூ.285 கோடி செலவில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளித்து நவீன உலகத்தரம் வாய்ந்த பொலிவுறு நகரமாக மேம்படுத்த இந்தத் திட்டம் உதவும்.

ஆக்ராவில் உள்ள கோத்திமீனா பஜாரில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “கங்காஜல் போன்ற திட்டங்கள் சிசிடிவி கேமிராக்கள் போன்ற வசதிகள் ஆகியவற்றால் ஆக்ராவை பொலிவுறு நகரமாக்க நாம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்” என்றார். இந்த வசதிகள் சுற்றுலாப் பயணிகளையும் கவரும் என்று பிரதமர் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், ஆக்ராவில் எஸ்என் மருத்துவக்கல்லூரியின் தர மேம்பாட்டிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் ரூ.200 கோடி செலவு மதிப்பீட்டில் அந்த மகளிர் மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட மகப்பேறு பிரிவு உருவாக்கப்படும். சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு சுகாதாரம் மற்றும் பேறுகால கவனிப்பு கிடைக்கும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், தொடங்கப்பட்ட 100 நாட்களுக்குள் இந்தத் திட்டத்தின்கீழ் ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைந்திருப்பதாகக் கூறினார்.

பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பது சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள அடியாகும் என்று பிரதமர் கூறினார். மற்ற பிரிவில் உள்ள மாணவர்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்களை அரசு உருவாக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். “பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இடஒதுக்கீடு செய்திருப்பதற்கும் கூடுதலாக உயர்கல்வி, தொழில்நுட்பம், தொழில்முறை கல்வி நிறுவனங்களிலும் வாய்ப்பு வசதிகளை வழங்க நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம். உயர்கல்வி நிறுவனங்களில் பத்து சதவீத இடங்களையும், நாங்கள் கூடுதலாக்கியிருக்கிறோம். எந்த ஒருவரின் உரிமையையும் பறித்துக் கொள்ளும் நடைமுறையை நாம் பெற்றிருக்கவில்லை” என்று பிரதமர் கூறினார்.

“ஊழலுக்கு எதிராக நான்கரை ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு அளித்த ஆணையை முழு சக்தியோடு செயல்படுத்த நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இதன் காரணமாகத்தான் எனக்கு எதிராக சிலர் ஒன்றுசேர தொடங்கியிருக்கிறார்கள்” என்று பிரதமர் தெரிவித்தார். தமது அரசின் முன்னுரிமைகள் பற்றி அழுத்தமாக தெரிவித்த பிரதமர், தேசத்தின் முன்னேற்றத்திற்கான சாவியை பாஞ்ச்தாரா எனும் ஐந்து அம்ச வளர்ச்சி திட்டங்கள் கொண்டிருக்கின்றன என்றார். குழந்தைகளுக்குக் கல்வி, விவசாயிகளுக்கு பாசன நீர், இளைஞர்களுக்கு வாழ்வாதாரம், மூத்தோருக்கு மருந்துகள், அனைவருக்கும் குறைதீர்ப்பு என்பவை அந்த ஐந்து அம்சங்களாகும்.

அம்ருத் திட்டத்தின்கீழ் ஆக்ராவின் மேற்குப்பகுதியில் கழிவுநீர் வெளியேற்ற கட்டமைப்பு திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு துப்புரவு வசதியை மேம்படுத்த உதவும்.

                                    *****



(Release ID: 1559342) Visitor Counter : 179


Read this release in: English , Marathi , Bengali , Kannada