விண்வெளித்துறை

2018 சாதனைகள் விண்வெளித் துறை

Posted On: 28 DEC 2018 3:12PM by PIB Chennai

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் குறித்த அறிவிப்பு: நாட்டின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திர மோடி, விண்வெளிக்கு மனிதர்களுடன் கூடிய விண்கலத்தை 2022-ம் ஆண்டில் அனுப்ப இந்தியா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். இதனை செயல்படுத்தும் 4-வது நாடாக இந்தியா இருக்கும் என்றும் அவர் கூறினார். இதுவரை, விண்வெளிக்கு மனிதர்களை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே அனுப்பியுள்ளன. இந்தத் திட்டத்துக்கு தேவையான சில தொழில்நுட்பங்கள், விண்கல மீட்பு சோதனை (Space Capsule Recovery Experiment – SRE 2007), மனிதர்களுடன் கூடிய விண்கலத்தை  சுற்றுச்சூழலுக்குள் மீண்டும் நுழைவதற்கான சோதனை (Crew module Atmospheric Reentry Experiment - CARE 2014) மற்றும் விண்கல ஏவுதல் திட்டத்தை கைவிட்டு பாதுகாப்பாக தரையிறக்குதல் சோதனை (Pad Abort Test - 2018) போன்றவற்றின் மூலம், வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பங்கள், திட்டத்தின் நோக்கத்தை குறுகிய காலமான 4 ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற இஸ்ரோ-வுக்கு உதவும்.

 

இஸ்ரோ விண்ணில் செலுத்திய ராக்கெட்டுகள்

 

  1. ஜனவரி 12, 2018-ல் இஸ்ரோ-வின் துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் 42-வது ராக்கெட்-டான பிஎஸ்எல்வி-சி40 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோள்களுடன் 710 கிலோ எடை கொண்ட தொலைஉணர் செயற்கைக்கோளான  கார்ட்டோசாட்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  2. இந்தியாவின் புவிசுற்றுவட்ட செயற்கைக்கோள் ஏவு வாகனமான ஜிஎஸ்எல்வி-எஃப்08 (Geosynchronous Satellite Launch Vehicle - GSLV-F08) மூலம்,  மார்ச் 29, 2018-ல் புவி சுற்றுவட்டப் பாதைக்கு ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
  3. ஸ்ரீஹரிகோட்டா-வில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனமான பிஎஸ்எல்வி-சி41 மூலம், ஏப்ரல் 12, 2018-ல் 1,425 கிலோ எடைகொண்ட ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ வழிகாட்டி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  4. சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 2018 செப்டம்பர் 16-ல் துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனமான பிஎஸ்எல்வி-சி42 மூலம், நோவாசார் (NovaSAR) மற்றும் எஸ்1-4 (S1-4) ஆகிய 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
  5. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நவம்பர் 29, 2018-ல் இஸ்ரோவின் துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம் (பிஎஸ்எல்வி-சி43) மூலம், 31 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
  6. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து புவி சுற்றுவட்ட செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட ராக்கெட்டான மார்க் 3 (ஜிஎஸ்எல்வி மார்க்3-டி2) மூலம், 2018 நவம்பர் 14-ல் இந்தியாவின் ஜிசாட்-29 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  7. இஸ்ரோ-வின் அதிக எடைகொண்ட மற்றும் அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-11, பிரெஞ்ச்கயானாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து 2018 டிசம்பர் 5 அதிகாலையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  8. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 2018 டிசம்பர் 19-ல் இஸ்ரோ-வின் புவிசுற்றுவட்டப் பாதை செயற்கைக்கோள் ஏவு வாகனமான ஜிஎஸ்எல்வி-எஃப்11 மூலம், தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7ஏ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 6, 2018-ல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளை தொடர்ந்து தயாரிக்கும் திட்டத்துக்கு (6-வது கட்டம்) ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இந்தத் திட்டத்தின்கீழ், 30 பிஎஸ்எல்வி வாகனங்களுக்கு நிதியளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

சனியின் துணை கோள் அல்லது சூப்பர்-நெப்டியூன் அளவு கிரகம் கண்டுபிடிப்பு

 

அகமதாபாத்-தில் உள்ள இயற்பியல் ஆய்வு மையத்தின் பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையிலான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவினர், சனியின் துணை கோள் அல்லது சூப்பர் நெப்டியூன் அளவு கொண்ட கிரகத்தை கண்டுபிடித்தனர். (இது பூமியின் பருப்பொருளில் 27 மடங்கும், அளவில் 6 ஆரமும் கொண்டது). சூரியனைப் போன்ற நட்சத்திரத்தைப் போன்றது. இந்த கிரகம், EPIC 211945201b அல்லது K2-236b என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின்மூலம், நமது சூரிய குடும்பத்தைத் தாண்டி, நட்சத்திரத்தைப் போன்ற கிரகங்களை கண்டுபிடித்த குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

 

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு, விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதன்படி, விண்கலத்தை விண்ணிற்கு செலுத்தும்  திட்டத்தை கைவிட்டு, அதனை பாதுகாப்பாக தரையிறக்கும் பரிசோதனை (Pad Abort Test) வெற்றிகரமாக நடத்தப்பட்டது, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, விண்வெளிக்கு மனிதர்களுக்கு அனுப்பும் திட்டத்துக்கு அவசியமான, விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்கான அமைப்புக்கு தகுதிபெறும் வகையில், விண்கலத் திட்டத்தை கைவிட்டு பாதுகாப்பாக தரையிறக்கும் பரிசோதனை (Pad Abort Test), 2018 ஜூலை 5-ல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

 

இஸ்ரோ அமைப்புக்குள் தயாரிக்கப்பட்ட லித்தியம் ஐயன் செல் தொழில்நுட்பத்தை தகுதிவாய்ந்த இந்திய தொழில் நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்தல். இஸ்ரோ-வின் மிகப்பெரும் மையங்களில் ஒன்றான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், தாங்கள் தயாரித்த லித்தியம் ஐயன் செல் தொழில்நுட்பத்தை தகுதிவாய்ந்த இந்திய நிறுவனங்களுக்கு பரிமாறிக் கொள்ள முன்வந்தது. தனிப்பட்ட அடிப்படையில் அல்லாமல், நாட்டில் லித்தியம் அயன் செல் தயாரிப்பு ஆலைகளை அமைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இஸ்ரோ மற்றும் ஜம்மு-வில் உள்ள மத்திய பல்கலைக் கழகம் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

 

ஜம்மு-வில் உள்ள ஜம்மு மத்திய பல்கலைக் கழகத்தில், விண்வெளி அறிவியலுக்கான சதீஷ் தவான் மையத்தை அமைப்பதற்காக அந்த பல்கலைக் கழகத்துடன் 2018அக்டோபர் 11-ல் புரிந்துணர்வு உடன்படிக்கையை இஸ்ரோ மேற்கொண்டது.

 

மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இஸ்ரோ இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

 

உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தில் அவசரகால நடவடிக்கைகளுக்கான அதிநவீன ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்காக விண்வெளித்துறையின் இஸ்ரோ மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் இடையே, புதுதில்லியில் 2018 செப்டம்பர் 20-ல் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.

 

வெளிநாடுகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகள். 2018-ம் ஆண்டில் வெளிநாடுகளுடன் பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் குறித்து, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இவையாவன:

 

வளர்ச்சிக்கான விண்வெளி தொழில்நுட்பத்தை அமைதி நடவடிக்கைக்காக பயன்படுத்துவதில் ஒத்துழைப்பிற்காக இந்தியா, தஜிகிஸ்தான் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை.

 

பூமியின் சுற்றுச்சூழலைத் தாண்டி உள்ள விண்வெளியில் கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் ஒத்துழைப்புக்காகவும், விண்வெளியை அமைதி நோக்கத்துக்காக பயன்படுத்தவும் இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையே உடன்பாடு.

 

விண்வெளியில் பூமியின் சுற்றுச்சூழலைத் தாண்டி உள்ளவற்றை அமைதிவழியில் பயன்படுத்துவதற்காக இந்தியா, மொராக்கோ இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை.

 

விண்வெளி அறிவியல், தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளில் ஒத்துழைப்புக்காக இந்தியா, அல்ஜீரியா இடையே உடன்பாடு.

 

விண்வெளி ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் பயன்பாடுகள் துறைகளில் ஒத்துழைப்புக்காகவும், செயற்கைக்கோள் மற்றும் ஏவு வாகனங்களுக்கான தொலைக்கணிப்பு கண்காணிப்பு மற்றும் தொலைஉத்தரவு நிலைய செயல்பாடுகளில் ஒத்துழைப்புக்காகவும் இந்தியா மற்றும் புரூனி தருசலாம் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை.

 

பூமியின் சுற்றுச்சூழலுக்கு வெளியே உள்ள விண்வெளியை அமைதி நோக்கத்துக்கு பயன்படுத்துவதற்காகவும், புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும் ஒத்துழைப்பை மேற்கொள்ள இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை.

 

பூமியின் சுற்றுச்சூழலுக்கு வெளியே உள்ள விண்வெளியை அமைதி நோக்கத்துக்கு பயன்படுத்துவதற்காக இந்தியா மற்றும் ஓமன் இடையே மஸ்கட்-டில் பிப்ரவரி 2018-ல் புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா சார்பில் இஸ்ரோ-வும், ஓமன் சார்பில் அந்நாட்டு போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சகமும் கையெழுத்திட்டன.

******

 



(Release ID: 1558554) Visitor Counter : 2320


Read this release in: English , Bengali