கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

2018 ஆண்டு இறுதி அறிக்கை – கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

Posted On: 13 DEC 2018 7:27PM by PIB Chennai

கப்பல் அமைச்சகத்தை பொறுத்தவரை 2018 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். மாதிரி சலுகை ஒப்பந்தம், கட்டண நெறிமுறைகள் மாற்றம், எளிமையாக வர்த்தகம் புரிதல் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற முற்போக்கு கொள்கைகளால் உத்வேகம் பெற்று பெரிய துறைமுகங்கள் தங்களது செயல்பாடுகளை மேம்படுத்தி கடந்த 4 ஆண்டுகளில் திறனை அதிகரித்து செயல் திறன் குறியீடுகளையும் மேம்படுத்தி உள்ளது.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் 89 திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. ரூ.4.32 லட்சம் கோடி மதிப்பிலான 443 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் இந்த ஆண்டில் காணப்பட்டுள்ளன. வாரணாசியில் கங்கை ஆற்றில் பல்வழி முனையம் பிரதமர் திரு. நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் முதலாவது கண்டெய்னர் சரக்கு போக்குவரத்து கொல்கத்தாவில் இருந்து இந்த ஆற்றின் வழியாக வாரணாசி வந்தடைந்தது. பீகாரில் உள்ள கஹல்கோவன் என்ற இடத்திலிருந்து அசாமில் உள்ள பாண்டு வரை ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. கங்கை, பிரம்மபுத்திரா, இந்தோ-பங்களாதேஷ் ஒப்பந்த மார்க்கம் ஆகிய 3 உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் உருவாக்கப்பட்டு இவை சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கு மாதிரியாக உருவெடுத்து வருகின்றன.

கப்பல் பயணியர் சுற்றுலா போக்குவரத்து மற்றுமொரு முக்கிய மேம்பாட்டு பகுதியாகும். சென்னை துறைமுகத்தில் நவீனமயமாக்கப்பட்ட சர்வதேச பயணியர் கப்பல் முனையம் திறக்கப்பட்டது, மும்பை-கோவா பயணியர் கப்பல் சேவை தொடக்கம் போன்றவை இவற்றுக்கு உதாரணமாகும். விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் கடல்சார் போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டுமான சிறப்பு மையம் அமைத்தல், சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் அமைத்தல் மற்றும் அனைத்து பெரிய துறைமுகங்களிலும் சாகர்மாலா திட்டத்தின் கீழ் பல்துறை திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கும் முடிவு ஆகியனவும் இத் திட்டத்தின் அம்சங்களாகும்.

திறன் மற்றும் போக்குவரத்து

நாட்டின் உயர்ந்து வரும் வர்த்தக தேவைகளை எதிர்கொள்ள துறைமுகங்களின் அடிப்படை வசதி மேம்பாடு, திறன் உயர்வு ஆகியன முக்கிய கவனம் பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

கொள்கை திட்டங்கள்

திறன் விரிவாக்கம், மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டுத் திறன், உயர்ந்த நிலை அமலாக்க உபரி போன்றவற்றில் பெரிய துறைமுகங்களின் சாதனைகள், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கொள்கை முயற்சிகள் காரணமாக சாத்தியமாகி உள்ளன. இதன் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

  1. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்தவும், துறைமுக துறையை முதலீடுகளுக்கு உகந்ததாக மாற்றவும் மாதிரி சலுகை ஒப்பந்தம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத்துறை, தனியார்துறை கூட்டாண்மை திட்ட செயல்பாடுகளில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
  2. துறைமுகத்தை செயல்படுத்துவோர் தங்களது கட்டணங்களை சந்தைக் கட்டணங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்வதற்கான நெகிழ்ச்சித்தன்மையை வழங்க கட்டண நெறிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
  3. துறைமுகத் துறையில் பொதுத்துறை, தனியார் துறை கூட்டாண்மை திட்டங்களில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
  4. தற்போதுள்ள 1963-ம் ஆண்டின் பெரிய துறைமுக பொறுப்புக் கழகங்கள் சட்டத்திற்கு பதிலாக புதிய பெரிய துறைமுகங்கள் ஆணைய மசோதா கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் நிறுவன அமைப்புகளுக்கு சுயாட்சியும், நவீனமயமாக்கலும் கிடைக்கும்.  இந்த மசோதா மக்களவையில் 16.12.2016 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இது மக்களவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

எளிதாக வர்த்தகம் புரிதல்

     எளிதாக வர்த்தகம் புரிதல் குறித்த உலக வங்கியின் 2019 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்தியா 23 நிலைகள் உயர்ந்து 100-லிருந்து 77 ஆக முன்னேறியுள்ளது. இது உலக தரத்திற்கு இணையான முன்னேற்றத்தை குறிக்கிறது. எளிதாக வர்த்தகம் புரிவதை ஊக்குவிக்கும் வகையில் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கால தாமதத்தை குறைக்க வழிவகைகளை கண்டறிந்துள்ளது. பரிவர்த்தனை கட்டணங்களை குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. கையால் நிரப்பப்படும் படிவங்களை அகற்றுதல், பங்கேற்கும் அரசு முகமைகளின் சோதனைக் கூடங்களுக்கு இடவசதி அளித்தல், துறைமுகத்தில் நேரடி பட்டுவாடா, சரக்கு பெட்டக ஆய்வுக் கருவியை நிறுவுதல், மின்னணு பட்டுவாடா ஆணைகள், ஆர்.எப்.ஐ.டி. அடிப்படையிலான தானியங்கி கேட் அமைக்கும் முறை போன்றவை இந்த நடவடிக்கையில் அடங்கும். இந்த திட்டங்கள் அனைத்தும் ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதர பெரிய துறைமுகங்களிலும் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

     அனைத்து புதிய துறைமுகங்களிலும் வலைத்தள அடிப்படையிலான துறைமுக சமுதாய அமைப்பு செயல்பட தொடங்கி உள்ளது. அக்கறையுள்ள பல்வேறு தரப்பினரான சுங்கத் துறையினர், கப்பல் நிறுவனங்கள், முகவர்கள், அளவையாளர்கள், சுமை தூக்குவோர், வங்கிகள், சரக்கு பெட்டக நிலையங்கள், அரசு கட்டுப்பாட்டு அமைப்புகள், சுங்கவரி முகவர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், ரயில்வேக்கள் ஆகியன இந்த அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தற்போதைய இதற்கான கணினி அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

2018-ல் முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனைகள்

ஜேஎன்பிடி

ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழகத்தின் 4-வது சரக்கு பெட்டக முனையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். இந்த திட்டம் இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகம் சார்ந்த அன்னிய நேரடி முதலீட்டு திட்டமாகும். இத்திட்டம் ரூ.7935 கோடி சம்பந்தப்பட்டது ஆகும். இதனையடுத்து இத் துறைமுகத்தின் சரக்கு பெட்டக கையாளும் திறன் 5.15 மில்லியன் டி.இ.யூ-விலிருந்து 7.55 மில்லியன் டி.இ.யூ.வாக உயர்கிறது.

பராதீப் துறைமுக பொறுப்புக் கழகம்

  • 2017-18-ன் போது 100 மெட்ரிக் டன் சரக்கை கையாண்ட இலக்கினை அடைந்த தீன்தயாள் துறைமுகத்திற்கு அடுத்தபடியான 2-வது பெரிய துறைமுகம் இது.
  • 20 மணி நேரத்தில் 27 கப்பல்களின் இயக்கத்தை வெற்றிகரமாக முடித்து வைத்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை 2018 அக்டோபர் 13 அன்று காலை 6 மணிக்கு தொடங்கி 2018 அக்டோபர் 14-ந் தேதி பகல் 2 மணிக்கு முடிவடைந்தது.
  • 2018 அக்டோபர் 29-ந் தேதி இத்துறைமுகத்தில் மத்திய தரை மூரிங் முறையின்படி எம்.டி.டெல்பைன் என்ற கப்பலில் இருந்து துறை பயன்பாடு ஏதுமின்றி எண்ணெய் இறக்கும் நடைமுறை இந்தியாவில் முதல் முறையாக 2018 அக்டோபர் 29-ந் தேதி மேற்கொள்ளப்பட்டது.

வ.உ.சி. துறைமுகம்

இந்த துறைமுகத்தில் கிடைக்கும் ஆழம் குறைவாக இருப்பதால் இரவு நேர கப்பல் போக்குவரத்து இங்கு நடைபெறுவதில்லை. இத் துறைமுகத்தில் 2018 ஏப்ரலில் கடலோர பெர்த் அமைக்கப்பட்டது. இதன் நீர்வழி முனையில் மணல் வாரப்பட்டு இந்தப் பணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து விளக்கு வழி ஏற்பாடு காரணமாக 2018 ஜூன் முதல் இரவு நேர பணிகளும் குறைந்த ஆழத்திலும் நடைபெற்று வருகின்றன.

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் 2018 ஜூலை 13-ந் தேதி ரூ.1062 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. ரூ.679 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இரும்புத் தாது கையாளும் வசதி, நெடுஞ்சாலை 7 பகுதியிலிருந்து துறைமுக இணைப்புச்சாலை வரை பிரிப்பு மேம்பால கட்டுமானம், ஸ்ரீலானாகர் என்ற இடத்திலிருந்து அனகாபள்ளி-சப்பாவரம் வரையில் 12.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை இணைப்பு ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.

கொல்கத்தா

கொல்கத்தா துறைமுக பொறுப்புக் கழகத்தில் முதல் முறையாக 1,64,928 மெட்ரிக் டன் நிலக்கரி ஏற்றி வந்த மிகப்பெரும் எம்.வி.சம்ஜான் சாலிடாரிட்டி என்ற கப்பல் 17.10.2018 அன்று சான்ட்ஹெட்ஸ் கடல் பகுதிக்கு வந்தடைந்தது. இந்த கப்பலில் இருந்து மிதக்கும் கிரேன்கள் மூலம் 1 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி இறக்கப்பட்டது. இறக்கப்பட்ட நிலக்கரி அனைத்தும் ஹால்டியாவில் உள்ள மிதக்கும் ஜெட்டிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டது.

சாகர்மாலா திட்டங்கள்

சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.8.8 லட்சம் கோடி செலவிலான 605-க்கும் அதிகமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 89 திட்டங்கள் ரூ.0.14 லட்சம் கோடியில் முடிவடைந்துள்ளன. ரூ.4.32 லட்சம் கோடி மதிப்பிலான 443 திட்டங்களின் செயல்பாடு பல்வேறு நிலைகளில் உள்ளது. சாகர்மாலா திட்டம் துறைமுகங்களின் மேம்பாட்டை நோக்கமாக கொண்டது. ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கும், உள்நாட்டு வர்த்தகர்களுக்கும் போக்குவரத்து செலவினத்தை குறைப்பதும் இதன் நோக்கமாகும்.

துறைமுக திறன் இலக்கு

கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மாநில அரசுகளின் முதலீடு மொத்த துறைமுக திறனை 3500 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்த்துவதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 2025 வாக்கில் ஆண்டுக்கு 2500 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கு போக்குவரத்து சாத்தியமாகும். இதனை கருத்தில் கொண்டு துறைமுக நவீனமயமாக்கலுக்கு 249 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 107 திட்டங்கள் துறைமுக திறன் விரிவாக்கம் சார்ந்தவை. 12 பெரிய துறைமுகங்களின் பெரிய திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு 794 மில்லியன் மெட்ரிக் டன் திறன் அடுத்த 20 ஆண்டுகளில் சேர்க்கப்படும்.

பெரிய துறைமுகங்களின் திறனை மறுமதிப்பீடு செய்தல்

2014 பெரும் துறைமுகங்கள் கொள்கையின்படி பெரிய அளவிலான உலர் துறைகளை கணக்கீடு செய்வதற்கான நெறிமுறைகள் குறித்த நடைமுறை இறுதியாக்கப்பட்டுள்ளது. நமது துறைமுக திறன்களை உலகத்தரத்துடன் ஒப்பிட்டு குறியீட்டு அளவை நிர்ணயிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பெரிய துறைமுகங்களின் திறன்கள் மறுமதிப்பீடு செய்யப்படும். பெரிய துறைமுகங்களின் அறிவிக்கப்பட்ட திறன் 31.03.2017 நிலவரப்படி ஆண்டுக்கு 1066 மில்லியன் டன்களாகும். மறுமதிப்பீடு பணிகள் முடிவடைந்த பிறகு துறைமுகங்களின் திறன் மற்றும் எதிர்பார்க்கும் செயல்பாடுகள் 31.03.2017-ல் முறையே ஆண்டுக்கு 1359 மில்லியன் டன் மற்றும் ஆண்டுக்கு 989 மில்லியன் டன்னாக இருக்கும்.

துறைமுக நவீனமயமாக்கல்

12 பெரிய துறைமுகங்களுக்கான முக்கிய செயல்பாட்டு குறியீடுகளின் திறன் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு உலகளவிலான அளவுகள் உன்னதி திட்டத்தின் கீழ்  கடைபிடிக்கப்படுகின்றன. மேலும் கூடுதலாக ஆண்டுக்கு 100 மெட்ரிக் டன் திறனை வெளிக்கொணர 12 பெரிய துறைமுகங்களில் சுமார் 116 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 91 திட்டங்கள் ஆண்டுக்கு 80 மெட்ரிக் மில்லியன் டன் திறனை வெளிக்கொணர செயல்படுத்தப்பட்டுள்ளன.

புதிய துறைமுகங்கள் அமைத்தல்

பெரிய துறைமுகங்களின் திறன் விரிவாக்க திட்டங்களுக்கு கூடுதலாக 6 புதிய துறைமுக திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் வாதவான், தமிழ்நாட்டில் இணையம் மற்றும் சீர்காழி மேற்கு வங்காளத்தில் தாஜ்பூர், ஒரிசாவில் பாராதீப் வெளி துறைமுகம், கர்நாடகாவில் பெலிகெரி ஆகிய இந்த துறைமுகங்கள் ஒட்டு மொத்த சரக்கு கையாளும் திறனை உயர்த்த உதவும்.

துறைமுக சாலை வசதி மேம்பாடு

ரெயில் மற்றும் சாலை இணைப்புத் திட்டங்கள் துறைமுகங்களை உள்நாட்டுடன் இணைக்க பெரிதும் உதவுகின்றன.

ரெயில்

இந்திய துறைமுக ரெயில் கழகம் ரூ. 18,253 கோடி மதிப்பிலான 32 பணிகளை மேற்கொண்டுள்ளது. 9 பெரிய துறைமுகங்களுக்கான இந்தப் பணிகளில் ரூ.175 கோடி மதிப்பிலான 8 பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் ரூ.24,877 கோடி மதிப்பிலான 23 ரெயில் இணைப்புத் திட்டங்கள் சாகர்மாலா திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு ரெயில்வே அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் ரூ.2,491 கோடி மதிப்பிலான 7 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்தூர் – மன்மாத் ரெயில் பாதை

362 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்தூர் – மன்மாத் புதிய ரெயில் பாதை திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழகம், ரெயில்வே அமைச்சகம், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச அரசுகள் ஆகியவற்றின் இடையே 28.08.2018 அன்று கையெழுத்தானது.

சாலை

112 சாலை இணைப்புத் திட்டங்கள் பல்வேறு முகமைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் ரூ.22,158 கோடி மதிப்பிலான 54 திட்டங்கள் பாரத்மாலா திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. 102 திட்டங்கள் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் இந்திய நெடுஞ்சாலைகள் ஆணையத்தினால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள 10 சாலை திட்டங்களை மாநில பொதுப்பணித்துறை, துறைமுக ஆணையங்கள் மற்றும் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை செயல்படுத்தி வருகின்றன. மொத்தம் ரூ.268 கோடி மதிப்பிலான 5 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ரூ.1,80,347 கோடி மதிப்பிலான 94 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

துறைமுகம் தலைமையிலான தொழில்மயம்

அனைத்து கடல்சார் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியன 14 கடலோர பொருளாதார மண்டலங்கள் (சி.இ.இசட்) திட்டத்தில் இணைந்துள்ளன. சி.இ.இசட் நெடுநோக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 4 முன்னோடி சி.இ.இசட் திட்டங்களான குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் ஆகியவற்றின் முதல்கட்ட மேம்பாட்டுக்கான விரிவான முக்கிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சி.இ.எஸ். மேம்பாட்டுக்கான கொள்கை கட்டமைப்பு இறுதி செய்யப்பட்டு வருகிறது. சி.இ.இசட் மேம்பாட்டுக்கான அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவின் பரிந்துரையின் பேரில் இது இறுதி செய்யப்பட்டு வருகிறது.  நிதி ஆயோக்கின் முதன்மை நிர்வாக அலுவலர் கண்காணிப்பின் கீழ் பணிகள் நடைபெறுகின்றன.

கடலோர கப்பல் போக்குவரத்து

      கரையோர வாணிபத்தில் வரம்பு தளர்த்துதல்

சாகர்மாலா திட்டத்தின் நோக்கத்திற்கு உட்பட்டு வர்த்தகம், எளிமையான வர்த்தக நடைமுறை மற்றும் இந்திய கடலோர கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை மேம்படுத்த 1958 வர்த்தக கப்பல் சட்டத்தின் 406 மற்றும் 407 பிரிவுகளின்படி கரையோர வணிகத்தில் வரம்பு தளர்த்துதல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது உரங்கள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், மீன் பொருட்கள், தோட்டக்கலை பொருட்கள், விலங்கு உற்பத்தி பொருட்கள் மற்றும் பெட்டகங்கள் ஆகியவை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்த்துதல் குறித்த தொழில் துறையினரின் கருத்து அடிப்படையில் 2018 செப்டம்பரில் விளக்கமளிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி கப்பலில் உள்ள மொத்த கொள்ளளவில் 50 சதவீதம் வரை உரங்களை கொண்டு செல்வதற்கு உரிய சலுகைகள் வழங்கப்படும் என்றும் இது இந்திய துறைமுகங்களில் கரையோர போக்குவரத்துக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

ஜல்மார்க் வளர்ச்சித் திட்டம் (ஜே.எம்.வி.பி.)

ஜல்மார்க் வளர்ச்சித் திட்டத்தை ரூ.5369 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு 03.01.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. உலக வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தேசிய நீர்வழி எண்-1-ஐ மேம்படுத்துவதன் மூலமாக இரண்டாயிரம் டன் எடையை ஏற்றிச் செல்லவல்ல கப்பல்களை  இதன்வழியாக செலுத்த முடியும். பலமுனை மாதிரி முனையங்கள், ஜெட்டீஸ் நதி தகவல் அமைப்பு, வழித்தடம், கப்பல் போக்குவரத்து தடம், நதி பயிற்சி மற்றும் துப்புரவு பணிகள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் இந்த திட்டத்தில் அடங்கும். மார்ச் 2023 ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் ஒப்பந்தம் மற்றும் திட்ட ஒப்பந்தம் ஆகியவற்றை பொறுத்தவரை ஜ.பி.ஆர்.டி. கடன் 375 மில்லியன் அமெரிக்க டாலராகும். இதற்கான ஒப்பந்தங்கள் 02.02.2018 அன்று கையெழுத்திடப்பட்டது. 23.03.2018 முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் பல்வேறு அம்சங்களின் செயல்பாடு பற்றிய விவரங்கள் வருமாறு:

  1. கடல்வழி மேம்பாடு

பராகா மற்றும் கஹல்கான் (146 கி.மீ) ஆகியவற்றுக்கு இடையே கடல் ஆழத்தை அதிகரிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதே போன்று சுல்தான்கஞ்ஜ் மற்றும் மகேந்திரபூர் இடையே (24 கி.மீ.) மற்றும் மகேந்திரபூர் – பார்த் இடையே (71 கி.மீ.) ஆகியவற்றுக்கு இடையே கடல் ஆழத்தை அதிகப்படுத்துவதற்கான மதிப்பீடு பற்றிய ஒப்பந்தங்கள் நடைபெற்று வருகின்றன.

  1. பலமுனை மாதிரி முனையம் - வாரணாசி

தற்போதைய திறன் கொண்ட 1.26 எம்.டி.பி.ஏ.வுடன் ரூ.206 கோடி செலவில் பலமுனை மாதிரி முனையத்தை பிரதமர் 12.11.2018 அன்று தொடங்கி வைத்தார். கங்கை ஆற்றின் மீதான முதலாவது பலமுனை மாதிரி முனையமாகும் இது. இதன் மூலம் 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் மற்றும் 2000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  1. பலமுனை மாதிரி முனையம் - சாகிப்கஞ்ச்

இந்த முனையம் ரூ.280.90 கோடி செலவில் கட்டுமானப் பணி தொடங்கி வரும் ஜூன் 19-ந் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 54.81 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

  1. பலமுனை மாதிரி முனையம் – ஹால்டியா

ரூ.517.36 கோடி செலவிலான இந்த முனைய கட்டுமானப் பணிகள் 30.06.2017 அன்று தொடங்கி வரும் டிசம்பர் 2019-ல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 22.43 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

  1. புதிய கடல்வழி முனையம், பராகா

ரூ.5359.19 கோடி செலவில் இதன் திட்டப் பணிகள் 24.11.2016 அன்று தொடங்கப்பட்டு ஏப்ரல் 2019-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 27.97 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

கங்கைக்கான நவீன கப்பல் வடிவமைப்புகள்

     ஆழம் அதிகமற்ற கங்கை நதியில் செலுத்தக்கூடிய வகையிலான

தட்டையான அடிப்பாகம் கொண்ட 13 நவீன பெரிய கப்பல்களுக்கான வடிவமைப்புகளை இந்திய உள்நாட்டு  நீர்வழி  ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி அன்று வெளியிட்டது.  கங்கை நதியின் வடிவமைப்பு, நீர் அழுத்தம், வளைவுகள் மற்றும் நீரோட்டம் உள்ளிட்ட அந்த நதிக்கென்றே உள்ள குணாதியங்களின் அடிப்படையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  இத்தகைய முயற்சிகள் உள்நாட்டில் கப்பல் கட்டுமானத் தொழிலுக்கு உத்வேகத்தையும், உள்நாட்டு கப்பல்களின் வடிவமைப்புக் குறித்த அறிவையும், சரக்கு மற்றும் பயணிகள்  போக்குவரத்தை தேசிய நீர்வழிச்சாலை எண் -1-ல் அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். 

 

ஜ.டபிள்யு.ஏ.ஜ. இணையதளத்தில் இதனை இலவசமாக பார்க்கலாம். இந்த புதிய வடிவமைப்புகள், வெளிநாட்டு கப்பல் வடிவமைப்பு நிறுவனங்களை  இந்திய கப்பல் கட்டுமான நிபுணர்கள் சார்ந்திருப்பதை தவிர்க்கும். இதன் மூலம் கப்பல் கட்டுமான செலவில் 30 முதல் 50 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும்.

அந்தமான் லட்சத்தீவு மற்றும் துறைமுகப் பணி நிறுவனம்

அந்தமான் லட்சத்தீவு துறைமுகப் பணி நிறுவனத்திடம் (ஏ.எல்.எச்.டபிள்யு.) அந்தமான் மற்றும் நிகோபார் லட்சத்தீவுகளில் அரசின் துறைமுகங்கள் கட்டுமானப் பணிகள் மற்றும் அதனை சார்ந்த வசதிகளுக்கான பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பின்வரும் திட்டப் பணிகள் 2018-ல் அந்தமான் நிகோபார் லட்சத்தீவுகளில் மேற்கொள்ளப்பட்டன:-

  • ஹட்பே எனும் இடத்தில் கடல் அலைகளின் தாக்கத்தை தடுப்பதற்காக கட்டப்பட்டிருக்கும் தடுப்புச் சுவர் சேதமடைந்திருப்பதை தொடர்ந்து அவை சீரமைப்பது. லிட்டில்  அந்தமான் பகுதியில் ரூ.14.66 கோடி செலவில் இந்த திட்டம் வரும் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும்.
  • லட்சத்தீவில் கல்பேனி தீவில் சேதப்படுத்தப்பட்ட தடுப்புச் சுவர் பகுதியை சீரமைக்கும் பணி ரூ.34.56 கோடி செலவில் ஜூன் 2020-ல் நிறைவடையும்.
  • அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் கார் நிகோபாரில் முஸ் பகுதியில் கடல் சுவர் மற்றும் கடற்கரை பாதுகாப்பு கட்டுமானப் பணி 49.19 கோடி ரூபாய் செலவில் டிசம்பர் 2020-ல் நிறைவடையும்.

 

******

 

 

 

வி.கீ/சி.ஜே./நெய்னா/ரேவதி
 


(Release ID: 1556244) Visitor Counter : 953