சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் – நடப்பாண்டு சாதனைகள்
Posted On:
14 DEC 2018 10:24AM by PIB Chennai
சிறுபான்மையின சமுதாயங்களைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி மூலமான அதிகாரம் அளித்தலை உறுதி செய்ய, நாட்டின் 308 மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் வழங்கும் இயக்க திட்டத்தை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் தொடங்கி உள்ளது. சிறுபான்மையின பெண்களின் கல்வி அதிகாரமளித்தல், வேலைவாய்ப்பு அடிப்படையிலான திறன் மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு பிரதமர் மக்கள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், விடுதிகள், தொழிலியல் பயிற்சி நிறுவனங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகியவற்றை அமைத்து வருகின்றது. நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்த வசதிகள் ஏதுமற்ற பிற்படுத்தப்பட்ட, உதாசீனப்படுத்தப்பட்ட பகுதிகளில் இந்த வசதிகளை மத்திய அரசு செய்து வருகிறது.
இன்றைய நிலையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சிறுபான்மையினரை மேம்பாட்டின் முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டு வந்து உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டது. “அறிவோம், சம்பாதிப்போம்”, “பயிற்சியாளர்”, “ஏழ்மை அகற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம்”, “புதிய வீடு”, “புதிய ஒளி”, “பேகம் ஹசரத் மஹல் பெண்கள் கல்வி உதவித் தொகை”, போன்ற திட்டங்கள் சிறுபான்மையினரின், குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளித்தலை உறுதி செய்கின்றன. 6 லட்சத்திற்கும் அதிகமான சிறுபான்மை வகுப்புகளைச் சேர்ந்த நபர்களுக்கு, இந்த திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் பிரதமரின் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு கல்லூரிகள் 16, பள்ளிக் கட்டிடங்கள் 1992, கூடுதல் வகுப்பறைகள் 37,123, விடுதிகள் 1147, தொழிலியல் பயிற்சி நிறுவனங்கள் 173, பாலிடெக்னிக்குகள் – 48, அங்கன்வாடி மையங்கள் 38,753, பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மூலமான வீடுகள் 3,48,624, சத்பவானா மண்டபங்கள் 323, உறைவிடப் பள்ளிகள் 73, சந்தைக் கூடங்கள் 494, குடிநீர் வசதிகள் 17,397 ஆகியவற்றை சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் நலிந்த பிரிவினர், சிறுபான்மையினர் குறிப்பாக பெண்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மேம்பாடு ஏற்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில், சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை நாட்டின் சிறுபான்மையினர் நலனுக்கென மேற்கொண்டது. திறன் மேம்பாடு, கல்வி, ஹஜ், வக்ஃபு, தர்கா ஆஜ்மீர், பிரதமர் மக்கள் மேம்பாட்டுத் திட்டம் (பல பகுதி மேம்பாட்டுத் திட்டம் என முன்பு பெயரிடப்பட்ட திட்டம்), சமய சார்பின்மை மற்றும் அதிகாரமளித்தல், மகாத்மா காந்தியடிகளின் போதனைகள் அடிப்படையிலான தூய்மை இயக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
- திறன் மேம்பாடு
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதன்மை கைவினைஞர்களுக்கான கண்காட்சிகளை நடத்தியது. புதுதில்லி பாபா கடக் சிங் மார்க் (2018 பிப்ரவரி 11 முதலும்), புதுச்சேரி (2017 மற்றும் 2018) உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த காட்சிகள் நடைபெற்றன. கண்ணியத்துடனான மேம்பாடு என்பதுவே இந்தக் கண்காட்சிகளின் அடிப்படை கருத்தாக இருந்தது. புதுதில்லியில் 2018 பிப்ரவரி 10 முதல் 18-ந் தேதி வரை நடைபெற்ற கைவினைஞர் கண்காட்சி நாடெங்கிலும் உள்ள முதன்மை கைவினைஞர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகளை அளித்தது.
கடந்த ஓராண்டில் நாடெங்கும் நடைபெற்ற கைவினைஞர்கள் கண்காட்சி மூலம் 1,50,000-க்கும் அதிகமான கைவினைஞர்கள் மற்றும் அவர்களுடன் தொழில் முறையில் தொடர்புள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் செய்து தரப்பட்டன.
- கல்வி
வடகிழக்கு மாகாணங்கள் உட்பட நாடெங்கிலும் “சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் விண்ணப்பத்தாரர்களுக்கான இலவச பயிற்சி மற்றும் அது சார்ந்த திட்டத்தை” சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் அமல்படுத்தியது. இத் திட்டத்தின் கீழ் அறிவிக்கைக்கு உட்பட்ட 6 சிறுபான்மையின சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் தொழில்நுட்ப, தொழில் படிப்புகள் மற்றும் குழு ‘A’, ‘B’, ‘C’ பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் பதவிகளுக்கான தேர்வுகள் போன்றவற்றுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மதரசா கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களை முக்கிய நீரோட்ட கல்வி அமைப்புடன் இணைப்பதற்கான பயிற்சி திட்டத்தை இந்த அமைச்சகம் 2018 மார்ச் 27-ந் தேதி தொடங்கியது.
2018 செப்டம்பர் 13-ந் தேதி புதுதில்லியில் நாட்டின் முதலாவது “தேசிய கல்வி உதவித் தொகை வலைத்தள மொபைல் செயலி” (என்.எஸ்.பி. மொபைல் செயலி) என்ற செயலியை இந்த அமைச்சகம் தொடங்கி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தின் கொஹ்ராபிப்பிலி–யில் மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் முதலாவது உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்திற்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. முக்தாஸ் அப்பாஸ் நக்வி 2018 அக்டோபர் முதல் தேதியன்று அடிக்கல் நாட்டினார். இந்த உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனம், சிறுபான்மையினர் உட்பட ஏழை, நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு குறைந்த செலவிலான தரமான கல்வியை எளிதில் கிடைக்கச் செய்வதில், முக்கிய திருப்பமாக செயல்பட உள்ளது.இந்த நிறுவனம் 2020 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்.
- ஹஜ்
2018 ஹஜ் இந்த முறை 100 சதவீதம் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக சுமார் 1300 இஸ்லாமியப் பெண்கள் இந்தியாவிலிருந்து மெஹரம் (ஆண் துணை) இன்றி இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டனர். சவுதி அரேபியாவில் இத்தகைய பெண் ஹஜ் யாத்ரீகர்களுக்கு தனியாக தங்கும் இடமும், போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இந்த பெண் ஹஜ் பயணிகளுக்கு உதவ சவுதி அரேபியா நாடு, 100-க்கும் மேற்பட்ட மகளிர் ஹஜ் உதவியாளர்களை முதல் முறையாக நியமித்தது.
இந்த ஆண்டு 2-வது முறையாக இந்தியாவின் ஹஜ் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதல் முறையாக சாதனை எண்ணிக்கையிலான ஒரு லட்சத்து 75 ஆயிரத்து இருபத்தி ஐந்து ஹஜ் யாத்ரீகர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டனர், அதுவும் ஹஜ் மானியம் ஏதுமின்றி. பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த ஆண்டு தொடர்ந்து 2-வது முறையாக இந்தியாவின் ஹஜ் பயணிகள் எண்ணிக்கையை அதிகரித்ததில் வெற்றி கண்டது.
- வக்ஃபு
வக்ஃபு சொத்துக்களை நிர்வாகம் செய்யும் போது சமுதாய மேம்பாட்டுக்கு குறிப்பாக பெண்களின் கல்வி அதிகாரமளித்தலுக்கு இந்தச் சொத்துக்கள் பயன்படுவதை உறுதி செய்யும் வகையில் சிறப்பாக பணியாற்றும் “முத்தவலிகள்” எனப்படும் நிர்வாகிகளுக்கு சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் பரிசு வழங்க முடிவு செய்துள்ளது. மத்திய வக்ஃபு சபை, மாநில வக்ஃபு வாரியங்களுக்கு தங்களது ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்குவதற்கு நிதியுதவி வழங்குகிறது. இதனால் மாநில வக்ஃபு வாரியங்கள் தங்களது பணிகளை குறித்த காலக்கெடுவில் நிறைவு செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலை தளத்தைப் பார்க்கவும்
******
(Release ID: 1555965)
Visitor Counter : 940