குடியரசுத் தலைவர் செயலகம்
அரசியல் சட்ட தின கொண்டாட்டங்களை குடியரசுத் தலைவர் தொடங்கிவைத்தார்; சமூக நீதி சிந்தனை, மாசு மற்றும் சுகாதாரம் போன்ற தற்கால பிரச்சினைகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட வேண்டும்
இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2018 1:44PM by PIB Chennai
இந்தியாவின் அரசியல் சாசனம் 1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறிக்கும் விதமாக, உச்சநீதிமன்றம் சார்பில் புதுதில்லியில் இன்று (நவம்பர் 26, 2018) நடைபெற்ற அரசியல் சட்ட தின விழாவை குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது அரசியல் சாசனம் சுதந்திர இந்தியாவின் நவீன வேதம் போன்றது என்றார். இதுதான் நமது உயரிய சொற்களஞ்சியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இது இந்தியர்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கக் கூடிய உயிரோட்டமுள்ள ஆவணம் என்றும் அவர் கூறினார்.
அரசியல் சட்ட நிர்ணய சபையில் இடம்பெற்றிருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் பிற உறுப்பினர்கள், பரந்த மனப்பான்மையுடன் அரசியல் சட்டத்தை வகுத்திருப்பதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். அரசியல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும், புதிய அம்சங்கள் இடம்பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டிருப்பதையும் திரு. ராம் நாத் கோவிந்த் சுட்டிக்காட்டினார். அனைத்திற்கும் மேலாக, எதிர்கால சந்ததியினரின் ஞானத்தின் மீது நம்பிக்கை வைத்து, சுதந்திரம் மற்றும் விடுதலை, நீதி மற்றும் சகோதரத்துவம், நேர்மை மற்றும் சமத்துவத்தை விரிவுபடுத்துவதற்கான அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் சட்ட அம்சங்களை காலத்திற்கேற்ப ஆக்கப்பூர்வமான வகையில் மறு உருவகம் செய்து கொள்வதற்கான நடைமுறைகளையும் அம்பேத்கர் உள்ளிட்டோர் சேர்த்திருப்பதாக அவர் கூறினார். இந்தக் கருத்தை நாம் முழுமையாக பின்பற்றுவோமேயானால், நமது அரசியல் சாசனம் எந்தக் கால கட்டத்திலும் இந்தியாவிற்கு பலனளிப்பதாக இருக்கும் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் குடிமக்கள்தான், அரசியல் சட்டத்தின் உச்சக்கட்ட பாதுகாவலர்கள் என்றும் திரு. ராம் நாத் கோவிந்த் குறிப்பிட்டார். அரசியல் சாசனம் நாட்டின் குடிமக்களுக்கு அதிகாரங்கள் வழங்கியுள்ள வேளையில், குடிமக்களும் அரசியல் சட்டத்தை முறையாகப் பின்பற்றி, அர்த்தமுள்ள வகையில் அதனை பேணிப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள நீதி என்பது, சமுதாயத்தின் பரினாம வளர்ச்சி மற்றும் மாறிவரும் நம்பிக்கைகள், வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது என்றும் திரு. ராம் நாத் கோவிந்த் தெரிவித்தார்.
சமூக நீதி என்பது அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்குவது என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், அரசியல், பொருளாதார மற்றும் சமூக நீதி ஆகியவற்றை புதுமையான வழிகளில் அணுக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
*****
ஏடிஜி/எம்எம்/உமா
(வெளியீட்டு அடையாள எண்: 1553884)
வருகையாளர் எண்ணிக்கை : 206