பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி, சத்தீஸ்கரில் ஜர்சுகுடா விமான நிலையம் மற்றும் இதர வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றியதன் தமிழாக்கம்

Posted On: 22 SEP 2018 7:49PM by PIB Chennai

ஒடிசா ஆளுநர் பேராசிரியர் திரு கணேஷி லால் அவர்களே, மாநில முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு ஜுவல் ஓரம் அவர்களே, திரு. தர்மேந்திரா பிரதான் அவர்களே மற்றும் இங்கு வருகை புரிந்துள்ள முக்கியப் பிரமுகர்களே,

டால்சேரில், செயலிழந்த உரத் தொழிற்சாலையைக் கிட்டதட்ட ரூ.13,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் திட்டத்தைத் துவக்கி வைத்த பின், நான் இங்கே வந்திருக்கிறேன். அப்பகுதியில் இந்த உர ஆலை பொருளாதார நடவடிக்கையின் கேந்திரமாக உருவாகும். நவீன ஒடிசா, நவீன இந்தியா, நவீன கட்டமைப்பு வசதிகளைப்  பெற்றிருக்க  வேண்டும். எனவே,  வீர் சுரேந்திர செயின் விமான நிலையத்தை இங்கே திறந்து வைக்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். சுற்றுலாப் பயணிகள் இங்கே வரும் போது வீர் சுரேந்திர செயின் குறித்துத் தெரிந்து கொள்வது இயற்கை. ஒடிசாவின் வீரம், தியாகம், அர்ப்பணிப்புப் பற்றிய கதைகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும்.

இன்று இங்கே இதர பல பெரிய திட்டங்களையும் நான் தொடங்கி வைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். ஒடிசாவில் இது இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமாகும். பல ஆண்டுகளாக ஏன் இந்த விமானம் நிலையம் கட்டப்படவில்லை என்பதை நீங்கள் தான்  தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு வேளை எனக்காக இந்தத் திட்டம்  காத்திருக்கலாம்.

நான் குஜராத்தை சேர்ந்தவன், அங்கே கட்ச்  என்று ஒரு மாவட்டம் உள்ளது. அது ஒரு பாலைவனம். மறுபக்கத்தில் பாகிஸ்தான் உள்ளது. அந்த மாவட்டத்தில் ஐந்து விமான நிலையங்கள் உள்ளன.  ஒடிசாவில் இரண்டாவது விமான நிலையத்திற்கான கட்டுமானப்பணிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகே  தொடங்கியுள்ளன. நாட்டில் விமானப் போக்குவரத்துத்துறையில் நிகழ்ந்து வரும்  முன்னேற்றங்கள் குறித்து திரு. சுரேஷ் பிரபு  இங்கே சற்றுமுன் தெரிவித்தார்.  நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 450 விமானங்கள் மட்டுமே போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இதுதான் நிலைமை. இந்த ஆண்டு மட்டும் 950 புதிய விமானங்களுக்கு நாம் ஆர்டர் கொடுத்திருக்கிறோம்.  நாம் எதை சாதிக்க இருக்கிறோம்?  நாம் எங்கே போகிறோம்? என்பதை யாரேனும் கற்பனை செய்து பார்க்க முடியுமா?  புவனேஸ்வரம், ராஞ்சி, ராய்ப்பூர் ஆகிய 3 நகரங்களின் மையமான இடத்தில் வீர் சுரேந்திர செயின் விமான நிலையம் கட்டப்படுகிறது என நான் நம்புகிறேன்.  பலவகையான வளர்ச்சிப் பணிகளுக்கு இந்த விமான நிலையக் கட்டுமானப்பணி வாய்ப்புகளை வழங்கும்.

 சத்தீஸ்கரில் ஜர்சுகுடா, சாம்பல்பூர் மற்றும் அருகே உள்ள பகுதிகளில் முதலீடு செய்ய விரும்பும் தொழிலதிபர்களுக்கு இது போன்ற வசதிகள் அவசியமாகும். அவர்கள் இப்பகுதிக்கு  எளிதாகப் பயணம் மேற்கொள்ள முடிந்தால் வர்த்தக நோக்கத்திலும் இதனை அனைவரும் விரும்புவார்கள். “அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்” என்ற நமது எண்ணத்தின் பொருள், பிராந்தியங்கள் சமமான அளவில் முன்னேற வேண்டும் என்பதுதான். மேற்கிந்தியா தொடர்ந்து வளரும் போது, கிழக்கிந்தியாவில் வளர்ச்சிப் பணிகள் பின்தங்குகின்றன.  இது போன்ற ஏற்றத்தாழ்வு நாட்டில் நெருக்கடியை உருவாக்குகிறது.  அதனால்தான் கிழக்கிந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இதில் ஒடிசாவின் முன்னேற்றம் ஒரு முக்கிய பங்காகும். கிழக்கு உத்தரபிரதேசம், அல்லது ஒடிசா அல்லது மேற்கு வங்கம், அல்லது அசாம் அல்லது வடகிழக்கு, என இப்பிராந்தியம் முழுவதையும் மேம்படுத்துவது மிக முக்கியமானதாகும்.

இன்று நான் ஒரு விமான நிலையத்தை இங்கே  தொடங்கி வைக்கிறேன். நாளை மறுநாள் சிக்கிமில் ஒரு விமான நிலையத்தை நான் தொடங்கி வைக்க உள்ளேன்.  இந்தப் பணி எவ்வளவு விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். இன்று ஒரு நிலக்கரி சுரங்கத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பையும் நான் பெற்றிருக்கிறேன். எல்லாப் பணிகளுக்கும் எரிசக்தி ஒரு மையமாக இருப்பதை நாம் அறிவோம். கருப்பு வைர செல்வக் களஞ்சியத்தை ஒடிசா பெற்றிருப்பது அதிர்ஷ்டமாகும். இன்று சுரங்கத்திலிருந்து நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் பணி தொடங்குகிறது. மேலும், நிலக்கரி சுரங்கத்திலிருந்து எரிசக்தியை உருவாக்கும்  பணியும்  தொடங்குகிறது. எனவே, வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

   இன்று ஒரு ரயில்வே திட்டம் ஒரு விமான நிலையத்தை இணைக்கிறது.  வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இந்த இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது. இது நெடுஞ்சாலையாக இருக்கலாம், ரயில்பாதையாக இருக்கலாம் அல்லது வான்வழியாகவோ அல்லது  நீர்வழியாகவோ இருக்கலாம்.   எல்லா இடங்களையும் இணையதளம் வழியாக இணைக்கும் பணியும்  வேகமாக நடைபெற்று வருகிறது.

  இந்த மலைவாழ் மக்கள் பகுதி இன்றைக்கு ரயில்பாதை மூலம் இணைக்கப்படுகிறது. இதுவே ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.  எதிர்காலத்தில்  ஒடிசாவின் முழுமையான மேம்பாட்டுக்கும் இது முக்கிய அங்கமாக அமையும்.  வீர் சுரேந்திர செயின் விமான நிலையத்தை இப்பகுதியில் உள்ள மக்களுக்கு அர்ப்பணிப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

மிக்க நன்றி …..

--------



(Release ID: 1552757) Visitor Counter : 221


Read this release in: English , Marathi , Bengali , Kannada