பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி சர்வதேச சூரிய கூட்டணியின் முதலாவது பேரவையை 02.10.2018அன்று துவக்கிவைத்து உரையாற்றியதன் தமிழாக்கம்

Posted On: 02 OCT 2018 9:40PM by PIB Chennai

    ஐநா பொதுச் செயலாளர் திரு. ஆண்டோனியோ குட்ரஸ், இந்திய சமுத்திர ரிம் கூட்டணி நாடுகளின் அமைச்சர்களே, சர்வதேச சூரிய கூட்டணி நிர்வாகிகளே, எனது அமைச்சரவை சகாக்களே, தொழில்துறை நண்பர்களே, முக்கிய பிரமுகர்களே, குறிப்பாக இளைய சமுதாய மாணவ நண்பர்களே மற்றும் சகோதர, சகோதரிகளே,

  இன்று காலை, திரு. ஆண்டோனியோ குட்ரசுடன் தூய்மை தொடர்பான முக்கிய நிகழ்வில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில்  மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் தொடக்கமும், இந்நிகழ்வுடன் இன்று ஆரம்பமாகிறது.   பசுமையான எதிர்காலத்தின் தொடக்கத்திற்கு இன்று நடைபெறும் இந்நிகழ்வைவிட வேறு எந்த நிகழ்வும் பொருத்தமாக இருக்கமுடியாது.

  சர்வதேச சூரியக் கூட்டணி வெறும் அமைப்பாக இருப்பதைக்காட்டிலும்,  மிகப் பிரபலமானதாக உருவாக வேண்டும். உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடானாலும், கண்காட்சி அல்லது மறு முதலீட்டுக் கூட்டமானாலும் அல்லது இந்திய பெருங்கடல் ரிம் கூட்டமைப்பு எரிசக்திக் கூட்டமானாலும், அவை மூன்றின் பரந்த நோக்கம் பசுமை எதிர்காலத்திற்கு தூய்மையான மாற்று எரிசக்தியை உருவாக்குவதுதான்.

நண்பர்களே,

  கடந்த 150-200 ஆண்டுகளில் எரிசக்தி தேவைக்காக புதைபொருள் எரிபொருள்களை மனித சமுதாயம் சார்ந்திருந்தது. இயற்கை அதனை எவ்வாறு நிராகரித்துவிட்டது என்பதனை இன்று நாம் கண்கூடாக காண்கிறோம். நிலப்பரப்புக்கு மேலே எரிசக்தி கிடைக்கிறது என்பதை இயற்கை நமக்கு உறுதியாக உணர்த்தி வருகிறது. அது சூரியசக்தியானாலும், காற்றாலை சக்தியானாலும், நீர்மின்சக்தியானாலும்  எதிர்காலத்தின் பாதுகாப்புக்கு அதுதான் தீர்வு.

  இயற்கை நமக்கு அளித்துள்ள இந்த தகவல் குறித்து இன்று விவாதிப்பதற்காக இங்கே நாம் கூடியிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே,

  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்  நடைபெற்ற மறு முதலீடு தொடர்பான முதலாவது கூட்டத்தில் நான் பங்கேற்றபோது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில்  மின் அளவைக் கணக்கிடும் மெகாவாட் அளவுகோலிலிருந்து கிகாவாட் அளவுகோலுக்கு மாறும் இந்தியாவின் உறுதிபாடு குறித்து நான் பேசியது இன்றைக்கும் எனது நினைவில் உள்ளது. சூரிய மற்றும் பசுமை எரிசக்தியின் பலன்களை நாம் பெறுவதற்கு அவை மிகவும் எளிதாகக் கிடைக்கவேண்டும் என்பதை அப்போது நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன். சூரிய எரிசக்தி வளமிக்க நாடுகளை ஒன்றுசேர்த்து ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தையும் நான் முன்வைத்தேன். மிக குறுகிய காலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல ஆதரவு கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

  இன்று உலக நாடுகளுக்கு சர்வதேச சூரியக் கூட்டணி பெரிய அளவிலான நம்பிக்கை ஒளியை ஏற்டுத்தும் அமைப்பாக உருவாகியுள்ளது. 3 ஆண்டுகளில் இந்த அமைப்பு, உடன்படிக்கையை அடித்தளமாக கொண்ட அரசுகளுக்கு இடையேயான அமைப்பாக உருவாகியுள்ளது. சர்வதேச சூரிய கூட்டணியின் தலைமையகம் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டிருப்பது 125 கோடி இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

  21-வது நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உயரிய மனிதநல அமைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டால், சர்வதேச சூரியக் கூட்டணியின் பெயர் மிக உயர்ந்த இடத்திலிருக்கும். பருவநிலை நீதிக்காக சர்வதேச சூரியக் கூட்டணிக்கு நாம் பெரிய அளவில் ஒரு தளத்தை உருவாக்கியுள்ளோம். மனித சமுதாயத்தின் எதிர்கால சந்ததியினருக்கு நாம் அனைவரும் கூட்டாக ஒரு பெரிய பரிசை வழங்கி இருக்கிறோம்.

நண்பர்களே,

  உலகில் எரிசக்தித் தேவைகளை நிறைவு செய்வதில் பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் அமைப்பின் பங்களிப்பைப்போல, சர்வதேச சூரியக் கூட்டணியும் பங்காற்றும் என்று நான் நம்புகிறேன். இன்றைக்கு எண்ணெய் கிணறுகள் ஆற்றிவரும் பங்கைப்போல, எதிர்காலத்தில் சூரிய ஒளிக்கற்றைகளும் பங்காற்றும். சர்வதேச சூரியக் கூட்டணி அமைப்பை  தொடங்கும் முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் ஆதரவு அளித்திருப்பதற்கு எனது பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாரீஸ் நகரில் சர்வதேச சூரியக் கூட்டணி துவக்க நிகழ்வில் ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் திரு. பான் கீ மூன் பங்கேற்றிருந்ததும், இன்றைய நிகழ்வில் திரு. ஆண்டோனியோ குட்ரஸ் பங்கேற்றிருப்பதும் இந்த அமைப்புக்கு ஐநா எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது என்பதை உணர்த்துகிறது. பிரான்ஸ் அதிபருக்கும், அந்நாட்டு அரசுக்கும் அவர்களது ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,

  சர்வதேச சூரியக் கூட்டணியின் முதலாவது பேரவையில் பங்கேற்க 40 நாடுகளின் பிரதிநிதிகள் இங்கே வந்துள்ளனர். எனினும், இந்த நோக்கத்தை எதிர்நோக்கி நாம் நகரவேண்டியது அவசியமாகிறது. சூரிய எரிசக்தியின் வாய்ப்புகள், மகரத்தைச் சுற்றியுள்ள  100 அல்லது 125 நாடுகளுக்கு மட்டுமல்லாது, உலக நாடுகள் அனைத்திற்கும் கிடைக்கவேண்டும்.

   சூரிய எரிசக்தியில் உலக அளவிலான ஒத்துழைப்பு உணர்வை பொறுத்தமட்டில், சர்வதேச சூரியக் கூட்டணிக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர்களாக சேரவேண்டும் என்பதை இந்தியா முன்வைக்கும்.

நண்பர்களே,

  இந்த அமைப்பில் இந்தியா ஒரு முக்கிய உறு‘ப்பினர் என்பதால், இந்திய பெருங்கடல் ரிம் அமைப்புக்கு பெருமளவில் முக்கியத்துவம் அளிக்கிறது. எரிசக்தித்துறையில் நமக்கு அதேபோன்று பல சவால்கள் உள்ளன. நமது எரிசக்தி பாதுகாப்புத் தேவைகளை பொறுத்தமட்டில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பெறுவதில், கூட்டாக அழுத்தம் கொடுக்கவேண்டும்.

  நான் ஏற்கனவே சாகர் ஒட்டு மொத்த பிராந்தியத்திற்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு பற்றி கூறியிருக்கிறேன். ஒத்துழைப்புக்கானப் புதிய வாயில்களை இந்தக் கூட்டம் திறக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நண்பர்களே,

  புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகளவில் பயன்படுத்துவதின் விளைவை தற்போது கண்முன்னே நாம் பார்க்கிறோம். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை சந்திப்பதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான செயல் திட்டத்தை நாம் தொடங்கியிருக்கிறோம். 2030ஆம் ஆண்டில் புதைபடிவமல்லாத எரிபொருள் அடிப்படையில் 40 சதவீத மின்சக்தியை உருவாக்க நாம் முடிவு செய்துள்ளோம். இந்த இலக்கின்படி, நமது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை 72 கிகாவாட்டாக கடந்த 4 ஆண்டுகளில் இருமடங்காக்கி இருக்கிறோம். இதில் நமது சூரியசக்தியின் திறன் ஒன்பது மடங்காக உயர்ந்துள்ளது. இன்று நீர் மின்சக்தி அல்லாத எரிசக்தி, மொத்த மின்சக்தி உற்பத்தியில் 20 சதவீதமாக உள்ளது. இது மட்டுமல்ல, மிக விரைவில் ஏறத்தாழ 50 கிகாவாட் திறனை  இதில் சேர்க்கவிருக்கிறோம். 2022ஆம் ஆண்டில் 175 கிகாவாட் இலக்கை எட்டுவதற்கு நாம் வெற்றிகரமாக நகர்ந்து வருவதின் தெளிவான  அடையாளமாக இது உள்ளது. இந்த இலக்கை நாம் கண்டிப்பாக அடைந்தே தீருவோம்.

நண்பர்களே,

   எரிசக்தி குறைபாட்டிலிருந்து தேவையான அளவுக்கு எரிசக்தியை உருவாக்கும் புதிய நம்பிக்கையுடன் இந்தியா, தனது வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கான நமது எரிசக்தி வளங்களை மேம்படுத்துவதற்காக நமது புதிய நம்பிக்கைக்கு வலுசேர்க்கவேண்டும். இந்த வளம் சூரியன் என்பதால், அதை நாம் எப்போதும் வணங்கி வருகிறோம். இந்திய மக்களுக்கு சூரியனே கடவுள்.

நண்பர்களே,

  பிரகாசத்திற்கும், சக்திக்கும் சூரியன்தான் கடவுள். உலகின் எல்லாப் படைப்புகளுக்கும் சூரியன்தான் முக்கிய கருவூலமாக உள்ளது. சூரிய உதயத்தின்போது  வாயிலில் தண்ணீர் தெளித்து இயற்கையை  வரவேற்பது நமது அன்றாட வாழ்வின் பாரம்பரியமாகும். சூரியக் கடவுளுக்கு நாம் அடிபணிகிறோம் என்பதை உணர்த்தும் வகையில் “ஓம் சூரியாய நமக” என்ற மந்திரத்தை நாம் உச்சரிக்கிறோம்.

  வேதத்திலிருந்து யோகா, சூரியன்  நமது நினைவாற்றல் நமது பிராத்தனை, நமது உள்சக்தியின் ஆதாரம். இந்த உள்சக்தியை நமது வெளி சக்திகளின் தேவைகளுக்காக நவீன அறிவியல் சக்தி மூலம் மாற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்.

நண்பர்களே,

   சூரிய சக்தியை மேம்படுத்துவதில் நாம் வேகமாகப் பணியாற்றி வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் சூரியசக்தி எளிதாக கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது. மின்சக்தியைப் பயன்படுத்தும் பல்வேறு ஏழை மக்களின் இலக்கை இது விரைவாக சென்றடைந்துள்ளது.

  “குழுவிலிருந்து சக்தி” (Panel to Power) “இந்தியாவில் தயாரிப்போம்” ஆகியவை ஒவ்வொரு இல்லத்திற்கும் மின்சக்தியை வழங்கவேண்டும் என்ற நமது இலக்கின் முக்கிய மைல் கல்லாகும். கடந்த நான்காண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டிருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.  இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 42 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே,

   சூரியசக்தி தளத்தில் உருவாகும் இந்த மாற்றங்கள்,  வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்பை ஈர்ப்பதற்கு மட்டுமல்லாமல், நமது தொழில் முனைவோருக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில், முதலீட்டுக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. நாட்டில் சூரியத் தகடு உற்பத்திக்கு உகந்தச் சூழலை ஏற்படுத்த நாம் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

  புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதற்கு இதுதான்  ஏற்ற தருணமாகும். அடுத்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 70 முதல் 80 பில்லியன் டாலர் வரை இத்துறையில் வர்த்தக வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

நண்பர்களே,

  மின் உற்பத்தியுடன் மின்சார சேமிப்பும் மிக முக்கியமானதாகும். தேசிய மின் உற்பத்தி இருப்பு இயக்கத்தின்கீழ் இதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவையை உருவாக்குவது உள்நாட்டு உற்பத்தி, எரிசக்தி திறனை மேம்படுத்துவது, எரிசக்தி இருப்பு வைக்கும் திறனை அதிகரிப்பது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்த இயக்கத்தின்கீழ் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

  கிராமங்களில் வயல்வெளிகளில் சூரியத் தகடுகளை பொருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை KUSAM – KisanUrjaSurakshaEvamUtthanMahaAbhiyan  உடன் இணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். கிட்டத்தட்ட 28 லட்சம் சூரிய குழாய்கள் நாடு முழுவதும் அடுத்த 4 ஆண்டுகளில் பொருத்தப்படும். அவற்றின் மூலம் கிட்டத்தட்ட பத்து கிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

  சூரிய மற்றும் காற்றாலை சக்திகளுடன் கூடுதலாக, பி-3 – உயிரி எரிசக்தியை விரைவாகப் பூர்த்தி செய்வதில் பணியாற்றி வருகிறோம்.  இந்தியாவில் தூய்மையான எரிபொருள் அடிப்படையிலான போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த சவாலை ஒரு வாய்ப்பாக கருதி, உயிரி வாயுவிலிருந்து உயிரி எரிபொருளாக மாற்றி வருகிறோம். இந்த நோக்கத்திற்காக சாணத்திலிருந்து வருமானத்தை உருவாக்கும் (கோபர்தன்) ஒரு பெரிய திட்டத்தை முன் வைத்துள்ளோம். பல நகரங்கள், கிராமங்கள் கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் பல்வேறு புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தளத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது முன்னுரிமைகளில் மின்சக்தியை சேமிப்பதும் முக்கியமாக உள்ளது.

  இல்லங்கள், தெருக்கள் மற்றும் சாலைகளில் எல்இடி விளக்குகள் மூலம் ஒளியேற்றும் பெரிய இயக்கம் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் உஜாலாத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 31 கோடி எல்இடி மின்விளக்குகள் இந்தத் திட்டத்தின்கீழ் வினியோகிக்கப்பட்டுள்ளன. 31 கோடி எல்இடி மின் விளக்குகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், கிட்டத்தட்ட 40 ஆயிரம் மில்லியன் கிலோவாட் மின்சாரம் ஒவ்வொரு ஆண்டும் சேமிக்கப்பட்டுள்ளது.  இதனை யாரும் கற்பனை செய்து பார்க்க முடியுமா?  இது மாத்திரமல்ல, ஓராண்டில் 16 ஆயிரம் கோடி மக்களின் மின்சாரக் கட்டணத்தை இது மிச்சப்படுத்தியுள்ளது. மேலும், கரியமில வாயு உற்பத்தியையும் பெருமளவில் நாம் தடுத்திருக்கிறோம்.

  மீண்டும் ஒருமுறை நான் கூறிக்கொள்கிறேன், இது ஒரு தொடக்கம்தான். எதிர்காலம் பல வாய்ப்புகளை கொண்டதாக உள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு  பருவநிலை நீதி தொடர்பான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும், வெற்றி பெறுவதிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

  அடுத்த 3 நாட்களில் நீங்கள் அனைவரும், இந்த வாய்ப்புகள் குறித்து முழுமையாக விவாதம் நடத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன். புதுப்பிக்கத்தக்க எதிர்காலத்தை மேலும் ஒளிமயமானதாகவும், அழகானதாகவும் உருவாக்குவதில் உங்கள் பங்களிப்பை ஆற்றுவீர்கள்.

  உங்களது ஒவ்வொரு ஆலோசனையும், தூய்மையான திட்டங்களும் எங்களுக்கு முக்கியமானது என்பதை உங்களுக்கு உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அதனால்தான், மனிதவள மேம்பாட்டுக்கான அனைத்தையும் இங்கே கொண்டு வந்திருக்கிறோம். தொழில்நுட்ப மேம்பாடானாலும் சரி, உலகின் புதிய நாடுகளின் சாமானிய மக்கள் மேற்கொள்ளும் சிறிய பரிசோதனைகளானாலும் சரி, இந்த இயக்கத்தை நாம் முழுமையாக செயல்படுத்துவோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பொருளாதார உலகில் உலக மயமாக்கல் பிரச்சனை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. அதன் மூலம் உலக நாடுகளை நெருக்கமாக இணைக்கும் தொழில்நுட்பம் கிடைத்துள்ளது. நாமும் ஒரே கனவுடன் தொடங்கியிருக்கிறோம்:  ஒன்றே உலகம், ஒன்றே சூரியன், ஒரே மின் தொகுப்பு. (Grid)

    சூரியன் உதயமாகும் இடத்தில்  இந்த இயக்கம்  செயல்பாட்டுக்கு வந்தால்,  இந்த  மின் தொகுப்பு தொடங்கும் என்று நீங்கள் கற்பனை செய்தால், சூரியன் மறையும்வரை இது தொடரும். அதன் பின், சூரியனிலிருந்து நாம் நாள் முழுவதும் மின்சக்தியை பெறமுடியும். நம் நாட்டில் சூரிய ஒளி எவ்வளவு நேரம் இருக்கும் என்பதை இன்று நாம் சிந்திக்கிறோம். ஒன்றே உலகம், ஒன்றே சூரியன், ஒரே மின் தொகுப்பு என்ற கனவைவிட்டு விலகி நாம் நகர்வோமானால், வேறொரு இடத்தில் மின்சாரத்தை  உற்பத்தி செய்வது இயலாததாகும். ஏனென்றால், ஓர் இடத்தில் சூரிய ஒளி  எப்போதுமே பிரகாசிக்கிறது என்றால், சூரியன் எப்போதுமே மறையவில்லையென்றால், மின்சாரம் உற்பத்தி செய்வதை நாம் ஏன் நிறுத்தவேண்டும்?

  புதுமையான வழியில் நாம் சிந்திப்பது அவசியமாகிறது. புதிய நம்பிக்கையுடன், புதிய திட்டங்களுடன், புதிய சக்தியுடன், புதிய யுக்தியுடன்  புதிய உலகை நிர்மாணிப்பதில் நாம் நம்பிக்கையுடன் பங்காற்றவேண்டும்.

  ஒளிமயமான எதிர் காலத்தை உருவாக்க வகைசெய்யும் இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

••••••••••



(Release ID: 1551734) Visitor Counter : 459


Read this release in: Marathi , English , Assamese