பிரதமர் அலுவலகம்

ஒற்றுமையின் சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் திரு.நரேந்திர மோடி

Posted On: 31 OCT 2018 6:52PM by PIB Chennai

உலகின் மிக உயர்ந்த சிலையான “ஒற்றுமையின் சிலையை” இன்று (31.10.2018) பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி அவரது 182 மீட்டர் உயரமுள்ள சிலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

சிலை திறப்பு விழாவில் “ஒற்றுமையின் சிலை”  நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவதை குறிக்கும் வகையில், பிரதமரும் மற்ற பிரமுகர்களும் கலசத்தில் மண்ணிற்கு நர்மதை நதிநீரை ஊற்றினர். சிலையின் மீது டிஜிட்டல் முறையில் அபிஷேகம் நடைபெற பிரதமர் அதற்கான கருவியை இயக்கினார்.

ஒற்றுமையின் சுவரையும் அவர் திறந்து வைத்தார். ஒற்றுமையின் சிலை பாதத்தில் பிரதமர் சிறப்பு பிரார்த்தனை செய்தார். அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சியையும், பார்வையாளர்கள் மாடத்தையும் அவர் பார்வையிட்டார். 153 மீட்டர் உயரமுள்ள இந்த மாடத்தில் ஒரே நேரத்தில் 700 பார்வையாளர்கள் அமரமுடியும். இங்கிருந்து சர்தார் சரோவர் அணை, அதன் நீர்த்தேக்கம் மற்றும் சத்புரா, விந்திய வலை அடுக்குகளை பார்வையாளர்கள் காணமுடியும்.

இந்த அர்ப்பணிப்பு விழாவில் இந்திய விமானப்படை விமானத்தின் அணிவகுப்பும், கலைக் குழுக்களின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இன்று ஒட்டுமொத்த தேசமும், தேசிய ஒருமைப்பாட்டு தினத்தைக் கொண்டாடுவதாகக் கூறினார்.

இந்திய வரலாற்றில் இன்றைய தினம் சிறப்பான தருணத்தைக் குறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஒற்றுமையின் சிலையோடு, இந்தியா இன்று தமக்குத் தாமே எதிர்கால முன்னேற்றத்திற்கான உந்துதலைப் பெற்றிருக்கிறது. சர்தார் பட்டேலின் துணிவையும், திறனையும், உறுதியையும் எதிர்கால தலைமுறைகளுக்கு தொடர்ந்து இந்தச் சிலை நினைவூட்டும் என்று அவர் தெரிவித்தார். சர்தார் பட்டேல் மேற்கொண்ட இந்திய ஒருமைப்பாட்டின் விளைவாக இன்று பெரிய பொருளாதார மற்றும் ராணுவ சக்தியாக இந்தியாவின் பயணம் முன்னாக்கிச் செல்கிறது என்று அவர் கூறினார்.

நிர்வாக சேவைகளை எஃகு கட்டமைப்பாகக் கருதிய சர்தார் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

தங்கள் நிலங்களிலிருந்து மண்ணையும், தங்களின் விவசாயக் கருவிகளிலிருந்து இரும்பையும் இந்தச் சிலைக்காக வழங்கிய விவசாயிகளின் சுயமரியாதைச் சின்னம் ஒற்றுமையின் சிலை என்று அவர் வர்ணித்தார். இந்திய இளைஞர்களின் விருப்பங்களை “ஒன்றுப்பட்ட பாரதம், ஒப்பற்ற பாரதம்” என்ற மந்திரத்தின் மூலமாக மட்டுமே சாதிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சிலையின் கட்டுமானத்திற்கு இணைந்து பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். இப்பகுதிக்கான சுற்றுலா வாய்ப்புக்களை இந்தச் சிலை கணிசமான அளவு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

சமீப ஆண்டுகளில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் மகத்தான தலைவர்களின் பங்களிப்புகளை நினைவுகூர்வதற்காக பல நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒற்றுமையின் சிலை தவிர, தில்லியில், சர்தார் பட்டேல் அருங்காட்சியகமும், காந்தி நகரில் மகாத்மா மந்திர், தண்டி குதிர் ஆகியவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருப்பதோடு, பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கருக்கு பஞ்சத்தீர்த்தம் அர்ப்பணிக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஹரியானாவில் திரு.சோட்டுராம் சிலையும், கட்ச் பகுதியில் ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா, வீர் நாயக் கோவிந்த் குரு ஆகியோருக்கான நினைவிடங்களும் அமைக்கப்பட்டு இருப்பதை அவர் நினைவு கூர்ந்தார். தில்லியில் சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம், மும்பையில் சிவாஜி உருவச் சிலை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பழங்குடியினர் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை அர்ப்பணிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

வலுவான அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற சர்தார் பட்டேலின் தொலைநோக்குப்பார்வைக் குறித்து பேசிய பிரதமர், இந்தக் கனவை நனவாக்கும் திசையில், மத்திய அரசு பணியாற்றி வருகிறது என்றார். அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின் வசதி, அனைத்து இடங்களுக்கும் சாலை மற்றும் டிஜிட்டல் இணைப்பு வழங்குவதற்கான முயற்சிகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் மக்கள் நல்வாழ்வுத் திட்டம் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். ஜிஎஸ்டி, இ-நாம், “ஒரு தேசம் – ஒரு தொகுப்பு” போன்றவை பல்வேறு வகைகளில் தேசத்தை ஒருங்கிணைக்க பங்களிப்பு செய்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

பிரிவினைவாத சக்திகள் அனைத்தையும் முறியடித்து நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பராமரிப்பது நமது கூட்டுப் பொறுப்பு என்றும் பிரதமர் தமது உரையில் கூறினார்.

                                    *****



(Release ID: 1551457) Visitor Counter : 239