பிரதமர் அலுவலகம்

இந்தியா - ஜப்பான் தொலைநோக்குத் திட்ட அறிக்கை

Posted On: 29 OCT 2018 6:43PM by PIB Chennai

ஜப்பான் பிரதமர் மாண்புமிகு திரு. ஷின்சோ அபே உடனான இந்திய - ஜப்பான் வருடாந்திர மாநாட்டிற்காக, இந்தியப் பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திர மோடி, 2018 அக்டோபர் 28-29 தேதிகளில் ஜப்பான் பயணம் மேற்கொண்டிருந்தார். பயணத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையே உறவுகளை மேம்படுத்துவதற்கு இணையில்லாத வாய்ப்புகள் நிறைய இருப்பதை, பிரதமர் மோடியும், பிரதமர் அபேவும் அங்கீகரித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளில் எட்டப்பட்ட குறிப்பிடத்தக்க மைல்கல்கள் பற்றி அவர்கள் ஆய்வு செய்தனர். பின்வரும் வகையிலான இந்திய - ஜப்பான் உறவுகளில் தொலைநோக்கு திட்டம் குறித்து அவர்கள் கோடிட்டுக் காட்டினர்:

வரலாற்றில் ஆழமான பிணைப்புகள்  மற்றும் மாண்புகளின் அடிப்படையிலான  இந்தியா -ஜப்பான் சிறப்பு முக்கியத்துவமான மற்றும் உலகளாவிய பங்களிப்புத் திட்டம், இரு நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே அமைதி, வளமை, நல்ல எதிர்காலத்துக்கான முன்னேற்றத்தை எட்டுவதற்கான முக்கியமான நோக்கங்களைக் கொண்டதாக, முக்கிய அம்சமாக உள்ளது. SAMVAD கலந்துரையாடல்களின் மூலம் இரு பிரதமர்களும் ஒருமித்து விவாதித்தபடி, சுதந்திரம், மனிதாபிமானம், ஜனநாயகம், சகிப்புத்தன்மை, அஹிம்சை ஆகியவற்றின் உலகளாவிய மாண்புகள், இந்தியா ஜப்பான் இடையே நீண்டகாலமாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வி, ஆன்மிகம், அறிஞர்கள் பரிமாற்றங்களில் மூலமான தொடர்புகள், இந்தியா - ஜப்பான் இருதரப்பு உறவுகளுக்கான அடிப்படைகளை உருவாக்குபவையாக மட்டுமின்றி, இந்திய - பசிபிக் பிராந்தியத்திலும், ஒட்டுமொத்தமாக உலக அளவிலான நன்மைகளுக்காகவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய கொள்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டுபவையாக உள்ளன.

இந்த இணைந்த தொலைநோக்கு லட்சியத்தை எட்டுவதற்கு, இந்தியாவும் ஜப்பானும் விதிமுறைகள் அடிப்படையிலான மற்றும் உலக அளவில் பங்கேற்புடன் கூடிய அளவில் கூட்டாக, பெருமுயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று இரு தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.  கூட்டாக வளமை பெறுவதற்கு, சட்டத்தின் ஆட்சியையும், தடையற்ற வர்த்தகத்தையும் ஊக்குவிக்கும் வகையிலும், மக்கள் வந்து செல்வதையும், தொழில்நுட்பம் மற்றும் சிந்தனைகளையும் மேம்படுத்துவதன் மூலம், நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கையை வளர்ப்பவையாக, தகவல் தொடர்பு மற்றும் இதர தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் அந்த முயற்சிகள்  அமைய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதிக அர்த்தம் கொண்டதாகவும், நோக்கம் கொண்டதாகவும் இந்திய - ஜப்பான் உறவு வளர்ந்திருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கிழக்கத்திய நாடுகளை நோக்கிய கொள்கைகளில் இந்தியாவின் செயல்பாடுகளில் இது ஒரு மைல்கல்லாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பிராந்திய ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்திய - ஜப்பான் உறவுகளின் அடிப்படை முக்கியத்துவத்தை பிரதமர் அபே அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளமையை மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்கும் வகையில், ``இந்திய - ஜப்பான் உறவுகளில் புதிய யுகத்தை'' உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வது என அவர் உறுதியளித்தார். தாராளமான மற்றும் திறந்த இந்திய - பசிபிக் சூழலை உருவாக்குவதற்கு பாடுபடுவதில், தயக்கமின்றி செயல்படுவது என்று இரு பிரதமர்களும் உறுதியளித்தனர். அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும், இந்திய - பசிபிக் கோட்பாட்டுக்கு, ஆசியான் ஒற்றுமை மற்றும் மையமாக்கல் அம்சங்கள் முக்கிய அம்சங்களாக இருப்பதாக இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர். அமெரிக்கா மற்றும் இதர பங்களிப்பு நாடுகளுடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு ஆயத்தமாக உள்ளதாக இருவரும் குறிப்பிட்டனர். இந்திய - பசிபிக் பிராந்தியத்துக்கான தொலைநோக்கு லட்சியம் என்பது, நாடுகளின் எல்லைப்புற ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்கும் விதிமுறைகள் சார்ந்த ஒழுங்குமுறையின் அடிப்படையில் இருக்கும் என்றும், கடல்வழி பயணம் மற்றும் விமானப் போக்குவரத்துக்கான சுதந்திரம் அளிப்பதாகவும், தடைகள் இல்லாத சட்டபூர்வ வணிகத்தை உறுதி செய்வதாகவும் அது இருக்கும். சர்ச்சைகள் ஏதும் ஏற்பட்டால் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்டங்களின் கோட்பாடுகளின்படி, UNCLOS-ல் உள்ள அம்சங்களையும் சேர்த்து, முழுமையான சட்டபூர்வ மற்றும் தூதரக நடைமுறைகளின்படி அமைதிவழியில் தீர்வு காண்பது என்பதும் இதில் அடங்கும். ராணுவத்தைப் பயன்படுத்தும் அச்சுறுத்தலுக்கு இடம் தராமல் இது செய்யப்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

வளமைக்கான பங்களிப்பு

தரமான கட்டமைப்பு மூலமான தொடர்பை மேம்படுத்துவதில் உள்ள ஒத்துழைப்பு குறித்தும், இரு தரப்பு வளமைக்கான திறன் வளர்ப்புக்கான மற்ற திட்டங்கள்  குறித்தும் இரு தலைவர்களும் பரிசீலனை செய்து திருப்தி தெரிவித்தனர். இரு தரப்பிலும் மற்றும் இதர பங்காளர்களுடனும், திறந்த, வெளிப்படையான மற்றும், விடுபட்டுப் போகாத வகையில், சர்வதேச தரங்களின் அடிப்படையில், பொறுப்புமிக்க கடன் அளிப்பு நடைமுறைகள் மற்றும் உள்நாட்டு பொருளாதார மற்றும் வளர்ச்சி முக்கியத்துவங்கள் மற்றும் முன்னுரிமைகளின்படி இவை நடைபெறுவதாக அவர்கள் திருப்தி தெரிவித்தனர். இலங்கை, மியான்மர், வங்கதேசம் மற்றும் ஆப்பிரிக்கா உள்பட இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான கூட்டுத் திட்டங்களில் இதன் தாக்கம் உட்பொதிந்திருக்கிறது. இந்த விஷயத்தைப் பொருத்த வரையில், இந்தப் பிராந்தியத்தில் தொழிற்சாலை வழித்தடங்கள் மற்றும் தொழில் துறை பிணைப்புகளை உருவாக்குவதற்கு  ஜப்பான் மற்றும் இந்திய தொழிலதிபர்களிடையே கருத்துப் பரிமாற்றங்களை இன்னும் மேம்படுத்துவதற்காக, ``ஆசிய- ஆப்பிரிக்க பிராந்தியத்தில் ஜப்பான் - இந்திய தொழில் ஒத்துழைப்பு அமைப்பை'' உருவாக்குவது குறித்த விவாதங்களுக்கு இரு பிரதமர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

கிழக்கத்திய நாடுகளை நோக்கிய இந்திய - ஜப்பான்  செயல்பாட்டு அமைப்பின் மூலம், இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான முன்னேற்றங்களை இரு பிரதமர்களும் வரவேற்றனர். தொடர்பு வசதிகளை மேம்படுத்துவது, நீடித்த வனம் மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு, பேரழிவு ஆபத்து வாய்ப்புகளைக் குறைத்தல் மற்றும் மக்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் இவை செய்யப்படுகின்றன. இந்தியாவில் ஸ்மார்ட் தீவுகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தனர்.

இந்தியாவின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானின் ODA -வின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு குறித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். சமூக மற்றும் தொழில் வளர்ச்சிக்காக, முக்கியமான தரமான கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் திறன் வளர்ச்சிக்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்ற எண்ணத்தை பிரதமர் அபே தெரிவித்தார்.  இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்திய - ஜப்பான் ஒத்துழைப்பின் முக்கிய அடையாளமாகக் கருதப்படும், மும்பை - ஆமதாபாத் இடையிலான அதிவேக ரயில் திட்டத்துக்கு, ஜப்பான் நாணயத்தில் (யென்) கடன் தருவதற்கான குறிப்புகள் பரிமாற்றத்தில் கையெழுத்திடுதல் உள்ளிட்ட விஷயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்து, திருப்தி தெரிவித்தனர். இந்திய நகரங்களில் ஸ்மார்ட் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும் மெட்ரோ திட்டங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பதற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.  மேற்கில் அர்ப்பணிக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்து வழித்தடம், டெல்லி - மும்பை தொழிற்சாலை வழித்தடம் போன்ற தரமான கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஜப்பானின் பங்கு குறித்து இந்தியா பாராட்டு தெரிவித்தது.

வளமையான எதிர்காலத்துக்கு இந்திய - ஜப்பான் பொருளாதாரபங்களிப்பின் முழுமையான வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு ஜப்பானின் மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவின் மக்கள் தொகை சார்ந்த பங்களிப்பை ஒருங்கிணைத்து செயல்படுவது என்று  இரு பிரதமர்களும் உறுதி தெரிவித்தனர். இந்த விஷயத்தைப் பொருத்தவரையில், ``மேக் இன் இந்தியா,'' ``ஸ்கில் இந்தியா,'' மற்றும் ``தூய்மை இந்தியா திட்டம்'' போன்ற முன்னேற்றத்துக்கான மாற்றங்களுக்கான முன்முயற்சிகளுக்கு ஜப்பான் உறுதியான ஆதரவு தெரிவிப்பதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்தது. ஆதார வளங்கள் மற்றும் முன்னேறிய தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வது, ஜப்பானின் பொதுத் துறை மற்றும் தனியார் துறை முதலீடுகளை தீவிரமாக திரட்டித் தருவதன் மூலம் ஜப்பான் ஆதரவு அளிப்பதாக இந்தியா வரவேற்பு தெரிவித்தது. இரு நாடுகளின் அறிவுசார் சொத்துரிமை அலுவலகங்களுக்கு இடையில், அறிவுசார் சொத்துரிமை விஷயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பு இருப்பதை அங்கீகரித்த இரு தலைவர்களும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில், முன்னோடி அடிப்படையில், காப்புரிமை வழக்காடும் அமைப்பு என்ற திட்டத்தை, 2019 நிதியாண்டின் முதலாவது காலாண்டில் தொடங்குவது என்பதில் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். ``இந்திய - ஜப்பான் முதலீட்டு மேம்பாட்டு பங்களிப்பு'' திட்டத்தின் கீழ் ஜப்பானின் நேரடி முதலீட்டை விரிவுபடுத்துவதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்தது. ஜப்பான் தொழில் நகரியங்கள் (JIT) உருவாக்குதல் மற்றும், முதலீட்டு மேம்பாட்டுக்கான ஜப்பான் - இந்தியா  திட்டத்தில் உள்ள மற்ற முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கும் இருவரும் வரவேற்பு தெரிவித்தனர். நிதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இரு தரப்பில் 75 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தத்துக்கு (BSA) ஜப்பான் மற்றும் இந்திய அரசுகள் வரவேற்பு தெரிவித்தன.  வர்த்தக ரீதியில் வெளியில் இருந்து கடன் (ECB) பெறுவதைப் பொருத்த வரையில் , 5 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட, குறைந்தபட்ச சராசரி முதிர்வுக் காலம் கொண்ட கட்டமைப்பு ECB-களுக்கு, கட்டாயமான உத்தரவாதம் எதுவும் தேவைப்படாது என தெரிவிக்கப்பட்டது.

ஜப்பான் - இந்தியா உற்பத்திப் பயிற்சி நிலையங்களின்  (JIM) எண்ணிக்கை மற்றும் நோக்கங்களை விரிவுபடுத்துதல் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஜப்பானிய அறக்கட்டளை  பயிற்சித் திட்டங்கள் (JEC) தொடங்குவது ஆகியவற்றின் மூலம் தொழில் திறன் வளர்ச்சியில் ஒத்துழைப்பை இன்னும் மேம்படுத்துவதற்கான எண்ணங்களை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர். மனிதவள மேம்பாடு மற்றும் பரிமாற்றங்களில் ஒத்துழைப்பு, ``புதுமை சிந்தனையுடன் கூடிய ஆசியா'' என்ற ஜப்பானின் முன்முயற்சித் திட்ட வரம்புகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட ஒத்துழைப்பு, தொழில்நுட்ப கல்வியுடன் கூடிய பயிற்சித் திட்டம் (TITP) போன்றவை தொழில் துறையில் உருவாகி வரும் புதிய வளர்ச்சிகளுடன் இணைந்து ஊக்குவிக்கப்படுவதும் இதில் அடங்கும்.

சமூக நலன்களுக்காக IoT மற்றும் AI தீர்வுகளை மேம்படுத்தும் வகையில் விரிவான இந்திய - ஜப்பான் டிஜிட்டல் பங்களிப்புத் திட்டம் தொடங்குவதற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். பெங்களூருவில் ``ஜப்பான் - இந்தியா ஸ்டார்ட் அப் ஹப்'' மற்றும் ஹிரோஷிமா  NASSCOM -ன் IT வளாகம் உருவாக்குவதில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் கூட்டு முயற்சிக்கான வாய்ப்புகளை ஆய்வு செய்வதற்கும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளிலும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் தொழில் திறனாளர்களை ஈர்ப்பது மற்றும் ஒத்துழைப்பை உருவாக்கும் முயற்சிகளுக்கும் இருவரும் வரவேற்பு தெரிவித்தனர்.

மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் சவால்கள் உள்பட, மக்களுக்கு கட்டுபடியாகும் செலவில் சுகாதார வசதிகளை அளிப்பதற்கு முயற்சிக்கும் விஷயத்தில், ஜப்பானின் ஆசிய ஆரோக்கியம் மற்றும் நலனுக்கான முன்முயற்சி (AHWIN) திட்டத்தை, இந்தியாவின் ஆயுஷ்மான் போன்ற ஆரோக்கியத் திட்டங்களுடன் தொடர்புகொள்ளச் செய்யும் முயற்சிகளுக்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். கட்டுபடியாகும் வகையிலான தொழில்நுட்பம், தொழில்திறன் மேம்பாடு மற்றும் சுகாதார பராமரிப்பில் சிறந்த நடைமுறைகளை  பரஸ்பர பலன் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்வதன் மூலம் இதைச் செய்வதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. ஆயுர்வேதா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவத் துறைகளில் அதிக தகவல்களை இரு தரப்பினரும் பகிர்ந்து கொள்வதுடன், இணைந்து செயல்படுவார்கள். யோகாவும், ஆயுர்வேதாவும் இணைந்து முழுமையான மாற்று ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் மற்றும் வன மேம்பாடு திட்டங்களில் இருதரப்பு ஒத்துழைப்பில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். வேளாண்மை உற்பத்தியைப் பெருக்குவது, அறுவடை மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதில் பொதுத் துறை மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புகளுக்கும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தியா - ஜப்பான் பங்களிப்புகளில் மக்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் தான் அடிப்படையாக இருக்கும் என்ற கருத்தை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.  மேலும், கலாச்சார, கல்வி, நாடாளுமன்ற செயல்பாட்டு, கற்பித்தல் அம்சங்களிலும், ``இந்திய - பசிபிக் அமைப்பு'' உள்பட,  ட்ராக்ட் 1.5 பங்கேற்புகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இருவரும் திருப்தி தெரிவித்தனர். சுற்றுலா மேம்பாடு என்பது நிறைய வாய்ப்புள்ள, முழுமையாகப் பயன்படுத்தப்படாத துறையாக இருக்கிறது என்று இருவரும் கருத்து தெரிவித்தனர். இரு தரப்பிலும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். விசா தேவைகளை தளர்த்துவது மற்றும் சுற்றுலா திட்டங்களை ஊக்குவிப்பது ஆகியவற்றின் மூலம் இதைச் செய்யலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. உயர்கல்வி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், கல்வியை மேம்படுத்துதல், இளைஞர் மற்றும் விளையாட்டு வீரர்  கருத்துப் பரிமாற்றங்கள் போன்ற விஷயங்களில் இந்திய - ஜப்பான் பங்களிப்புகளை இன்னும் மேம்படுத்துவது என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இந்தியாவில் ஜப்பானிய மொழி ஆசிரியர்கள் பயிற்சி மையத்தை கூட்டாக தொடங்குவதன் மூலம், இரு நாட்டு மக்களுக்கு இடையே புதிய பாலம் உருவாகும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்திய மாநிலங்களுக்கும் ஜப்பானிய மாநிலங்களுக்கும் இடையில் சீரான வேகத்தில் தொடர்புகள் அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் தருவது குறித்து இரு தலைவர்களும் அடிக்கோடிட்டுக் காட்டினர்.

அமைதிக்கான கூட்டணி

2008 ஆம் ஆண்டு கையெழுத்தான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பான இந்தியா-ஜப்பான் கூட்டறிக்கைக்குப் பின்பு இந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் இருதரப்பு கூட்டு செயல்பாடுகளை ஊக்குவிப்பதில் அடைந்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றங்களை இரண்டு பிரதமர்களும் மகிழ்ச்சியுடன் நோக்கினார்.

இருதரப்புப் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமென்ற அவர்களின் விருப்பத்தை வலியுறுத்தினார். பாதுகாப்புக் கொள்கைகளுக்கான பேச்சுவார்த்தை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கிடையிலான ஆலோசனைகள், வருடாந்திர பாதுகாப்பு அமைச்சகங்களின் பேச்சு வார்த்தைகள், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நிறுவப்பட்டு, (2+2) நடப்பு நெறிமுறைகளை கடைபிடித்து ஊழியர் நிலையில் ஒவ்வோர் சேவைக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.

இருதரப்பு பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பின் யுக்தி பூர்வ செயல்திறனை மேம்படுத்தும் வகையில், மேற்படி மூன்று சேவைகளுக்கான ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான சேவைகளை கையகப்படுத்தும் ஒப்பந்தம் (ACSA) குறித்த பேச்சுவார்த்தைகளை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

கடலோர பாதுகாப்பு படைகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு இரு நாடுகளின் கடற்படைகளின் கூட்டு பயிற்சிகள், மலபார் பயிற்சியின் ஆழத்தை அதிகரித்தல் மற்றும் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் அடைந்திருக்கும் கணிசமான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் கண்டுணர்ந்தனர்.

இந்திய-பசிபிக் பகுதியில் கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு (MDA) விரிவாக்கப்படுவதை மேம்படுத்துவதற்கான பரிமாற்றங்கள் இந்த பகுதிகளின் அமைதி மற்றும் உறுதித்தன்மைக்கு பெரிதும் உதவுகின்றன. அதை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் சுய பாதுகாப்பு படை (JMSDF) ஆகியவற்றுக்கிடையில் ஆழமான ஒத்துழைப்பை அமல்படுத்தும் உடன்படிக்கை கையெழுத்தானதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

இந்தியா ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்பானது  தொழில் நுட்ப திறனை அதிகரிக்கவும், பொது மற்றும் தனியார் துறையினருடன் கூட்டு முயற்சிகள் மூலம் தொழில்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

இரு தலைவர்களும் இந்திய, ஜப்பானிய பாதுகாப்புத் தொழில்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதை மேலும் உறுதி செய்தனர். ஆளில்லாத நிலப்பரப்பு வாகனங்கள் (UGV) மற்றும் ரோபாட்டிக்ஸ் சம்பந்தப்பட்ட கூட்டு ஆராய்ச்சி தொடங்கப்பட்டிருப்பதை  வரவேற்றனர். யூஎஸ்-2 ரக நீர்நிலை விமானங்களுக்கான  ஒத்துழைப்பை இரு தரப்பினரும் தொடர்ந்து மேற்கொள்வார்கள்.

இரு தலைவர்களும் தங்களது நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பயனாக விண்வெளி செயல்பாடுகளை ஊக்குவிக்கும்  வருடாந்திர  விண்வெளி பேச்சுவார்த்தைகளை துவக்க இசைவு தெரிவித்தனர். லூனார் பொலார் கூட்டு ஆய்வு பணிகளில் ஈடுபட்டிருக்கும் தங்கள் நாட்டைச்சேர்ந்த நிறுவனங்களுக்கு இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

கொரிய தீபகற்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்களை வரவேற்றதோடு. கடந்த ஜூன் மாதத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க-வட கொரிய உச்சி மாநாட்டையும் வட கொரியா பற்றி நிலுவையிலுள்ள பல பிரச்சினைகள் பற்றிய விரிவான தீர்மானங்களுக்கு வகை செய்யும் கொரிய நாடுகளின் சந்திப்புக்களையும் இரு தலைவர்களும் பாராட்டினர்.

ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானங்களில் (UNSCRs) முன்மொழிந்தபடி வட கொரியாவின் சவாலான, மற்றும் அனைத்து பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை மீட்க முடியாத அளவில் முழுமையாக செயலிழக்கச் செய்வதன் அவசியத்தைக் கோடிட்டு காட்டினர்.

சம்பந்தப்பட்ட UNSCR-ன் முன்மொழிவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கான தங்களது உறுதிப்பாட்டை  அவர்கள் பதிவுசெய்தனர். கடத்தல்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் தீர்மானத்தை விரைவாக உருவாக்கவேண்டுமென வட கொரியாவை அவர்கள் வலியுறுத்தினர்.

அணு ஆயுதப் பரவல் தடை மற்றும் அணுசக்தி பயங்கரவாதத்தின் சவால்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பணியில் உறுதியுடன் செயல் பட வேண்டி இரு தலைவர்களும் அணு ஆயுதங்களை அகற்றுவதில் தங்களுடைய பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர்.

ஜப்பானிய பிரதமர் திரு. அபே அவர்கள் விரிவான அணுசக்தி-சோதனைத் தடை ஒப்பந்தத்தின் (CTBT) நடைமுறைகளை விரைவாக தொடங்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இரண்டு தலைவர்களும் ஷேனன் ஆணையின் அடிப்படையில் பாகுபாடு அல்லாத, பன்முகத்தன்மை கொண்ட, சர்வதேச அளவிலான திறம்பட அளவிடக்கூடிய ஃபாசில்(Fissile) பொருள் கட் ஆஃப் ஒப்பந்தம் (FMCT) மீதான பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்க அழைப்பு விடுத்தனர்.

உலகின் அணு ஆயுதப் பரவலைத் தடுத்திடும் முயற்சியை வலுப்படுத்திடும் நோக்குடன், மூன்று சர்வதேச ஏற்றுமதி கட்டுப்பாட்டு அம்சங்களுக்கு முழுமையான இசைவு அளித்தபின்னர், இரு தலைவர்களும் இந்தியாவுக்கு அணுசக்தி வழங்குவோர் குழுவில் உறுப்பினர் அந்தஸ்து கிடைத்திட இணைந்து செயல்பட உறுதி பூண்டனர்.

பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் மற்றும் அதன் உலகளாவிய தன்மை ஆகியவற்றை கடுமையாக கண்டித்தனர். பயங்கரவாத பாதுகாவலர்கள்,பயங்கரவாத நெட்வொர்க்குகள் மற்றும் நிதியச் சேனல்களைத் தடைசெய்தல்,பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய செயல்பாடுகளை நிறுத்துதல் ஆகியவற்றிற்காக உட்கட்டமைப்புகளை உருவாக்க அனைத்து நாடுகளுக்கும் இரு பிரதமர்களும் அழைப்பு விடுத்தனர்.

மற்ற நாடுகளின் மீது பயங்கரவாத தாக்குதல்களுக்கு எந்த வகையிலும் தங்களது நாட்டிற்கு உட்பட்ட பகுதிகள் பயன்படுத்தப்படவில்லை என்பதை அனைத்து நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் கோடிட்டுக் காட்டினர்.

பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்ப்பதில் வலுவான சர்வதேச பங்களிப்புக்கான தேவை, தகவல் மற்றும் அதிக அளவிலான உளவுத்துறை பகிர்வின் அவசியம் ஆகியவற்றை  அவர்கள் வலியுறுத்தினர்.

நவம்பர் 2008-ல் மும்பையிலும் ஜனவரி 2016ல் பதான்கோட்டிலும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதிமுன் நிறுத்த பாகிஸ்தானுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.  அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், ஜெய்ஷ்-இ-மகம்மது, லக்ஷர்-இ-தொயீபா மற்றும் அவர்களது கூட்டாளிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒத்துழைப்பை வழங்க பாகிஸ்தான் முன்வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

இந்தியாவும் ஜப்பானும் ஐக்கிய நாடுகளின் துரிதமான, அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை பேண வேண்டும். முக்கியமாக 21 வது நூற்றாண்டின் சமகால எதார்த்தங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அதை மிகவும் சட்டபூர்வமான, பயனுள்ள மற்றும் பிரதிநிதித்துவமாக மாற்ற வகை செய்யும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) விரிவான சீர்திருத்தத்தங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

ஐ.நா. பொதுச் சபையின் 73 வது அமர்வில் நடைபெற்ற  அனைத்து நாடுகளின் விவாதத்தின் படி உரை அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளை தொடங்குதல் அதன் செயல்பாட்டை விரைவுபடுத்துதல் ஆகியவற்றின் உறுதிப்பாட்டை அவர்கள் தெரிவித்தனர். இது சம்பந்தமான  சீர்திருத்தம் விரும்பும்  நாடுகளுடன் உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் உறுதியுடன் பகிரப்பட்ட அங்கீகாரத்தின் அடிப்படையில் விரிவாக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட ஒருவருக்கொருவர் ஆதரவு தருவர் என்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

உலகளாவிய செயல்பாடுகளுக்கான பங்களிப்பு

இரு பிரதமர்களும், நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை (SDG ) அடைவதற்கு இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர். மாசுக் கட்டுப்பாடு, நிலையான பல்லுயிர் மேலாண்மை, இரசாயன மற்றும் கழிவு மேலாண்மை, பருவநிலை மாற்றம் மற்றும் கழிவு நீர் மேலாண்மை, ஆகியவற்றில் தொடர்புடைய இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே ஒத்துழைப்புக் கட்டமைப்பைப் ஒருவருக்கொருவர் பயன்படுத்துதல் முதலான  சுற்றுச்சூழல் பங்களிப்பை வலுப்படுத்த உதவும் கூறுகளை உறுதிப்படுத்தினர்.

பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் பாரிஸ் உடன்படிக்கை (UNFCCC)   காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவைப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதற்கிணங்க இரு நாட்டு பிரதமர்களும் இந்த துறையில் தமது நாடு முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக தெரிவித்தனர். அதன்படி பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான செயல் திட்டம் மற்றும் கூட்டுச் செயல் திட்டத்தை நிறுவுவதற்கான கூடுதல் ஆலோசனைகளை விரைவுபடுத்த விருப்பம் தெரிவித்தனர்..

இரு தலைவர்களும் அணுசக்தி மற்றும் மறுசுழற்சி எரி சக்தி  உள்ளிட்ட தூய்மையான எரிசக்தி உருவாக்கத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.சுத்தமான நிலக்கரி தொழில்நுட்பம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்கள் மற்றும் எல்.என்.ஜி தொடர் வழங்கல் ஆகியவற்றின் பயன்பாட்டில் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு, "ஜப்பான்-இந்தியா எரிசக்தி மாற்ற ஒத்துழைப்புத் திட்டத்தை" ("Japan-India Energy Transition Cooperation Plan” )வரவேற்பதாக அறிவித்தனர்.

ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பு, ஆற்றல் சேமிப்பு, கலப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்சார வாகனங்கள் உற்பத்தி ஆகியவற்றில் இந்தியாவும் ஜப்பானும் தொடர்ந்து ஒத்துழைத்துழைப்பது என முடிவு செய்யப்பட்டது. இரு தலைவர்களும் இந்தியா-ஜப்பான் அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பான ஆலோசனைகளை வரவேற்றதோடு அணுசக்தி சம்பந்தமாக விவாதங்களை தொடர முடிவு செய்தனர். சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்பில் (International Solar Alliance ) சேரும் ஜப்பானின் முடிவை இந்தியா வரவேற்றுள்ளது. சூரிய ஆற்றலை ஒரு தூய்மையான, மலிவான மற்றும் நிலையான ஆற்றல் காரணியாக பயன்படுத்துவதற்கு நடைபெற்றுவரும் உலகளாவிய முயற்சிகளை ஜப்பானின் பங்களிப்பு பலப்படுத்தும் என இந்தியா நம்புவதாக தெரிவிக்கப்பட்டது.

பேரிடர் ஆபத்துகளின் குறைப்பில் இருதரப்பிலும் பயிற்சிவகுப்புகள் அமைப்பதன் மூலமாகவும், பல்வகைப்பட்ட நிறுவனங்களுக்கிடையிலும் நடைபெறும் ஒத்துழைப்புகளை ஆய்வு செய்து அதில் ஏற்பட்டிருக்கும் இரு தரப்பு முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஜப்பானில், செண்டை நகரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் பேரிடர் ஆபத்துகள் குறைப்பு நடவடிக்கைகள் 2015-2030 க்கான திட்டத்தின் செயல்பாடுகளின் அடிப்படையில் முன் கூட்டிய பேரிடர் எச்சரிக்கை வழிமுறை, நீர் வள மேலாண்மை, விண்வெளி அடிப்படையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் மற்றும் பேரழிவு தடுப்பு உள்கட்டமைப்பு வசதி ஆகிவற்றின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு பாராட்டினர்.

இரு தலைவர்களும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட  பன்னாட்டு வர்த்தக அமைப்பின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டினர். உலக வர்த்தக அமைப்பின் செயல்பாட்டிற்கும், நிலையான வளர்ச்சி மற்றும் பரவலுக்கும் சுதந்திரமான, வெளிப்படையான வர்த்தகத்திற்கு சீர்திருத்தங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பகிர்ந்து கொண்டனர்.

நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு பொருளியல் கொள்கைகளை எதிர்த்து நிற்க இரு தலைவர்களும் மறு உறுதியேற்றதோடு திரிக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை அகற்ற வேண்டிய அவசியத்தை கோடிட்டுக் காட்டினர்.

தடையற்ற,திறந்த இந்திய பசிபிக் நாடுகளின் முழு நன்மைகளை உணர்ந்து கொள்வதற்கான உயர் தர, விரிவான மற்றும் சமச்சீர் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் (RCEP) ஆரம்ப பேச்சுவார்த்தைகளின் யுக்தி பூர்வ முக்கியத்துவத்தை இரு நாடுகளும் மறுபரிசீலனை செய்தன.

இரு பிரதமர்களும் மண்டல மற்றும் பல்வேறு தளங்களின் நிறுவனங்களில் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புகளை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர்.

நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாடு, பொருளாதார உறுதித்தன்மை, உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரழிவு தடுப்பு, எதிர்-பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு, தூய்மையான ஆற்றல் மற்றும் அறிவியல் ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஊக்குவிப்பதன் மூலம் சமகால தேவைகளையும் சவால்களையும் திறம்பட எதிர்கொள்ள இரு தலைவர்களும் உறுதியேற்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் உயர்ந்த நோக்கங்களையும், பல்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளன என்பதை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர். இந்தியா-ஜப்பான் சிறப்பு யுக்தி பூர்வ மற்றும் உலகளாவிய கூட்டுறவு என்பது அனுபவ முதிர்ச்சி, இருதரப்பு நம்பிக்கை மற்றும் ஆழ்ந்த உண்மைத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பதை காட்டியதோடு இவ்விரு நாடுகளின் இந்த அமைதிக்கூட்டணி இரு நாடுகளின் எதிர்காலத்திற்கும் மிகுந்த பாதுகாப்பை அளித்து அமைதியான வளமான நாடுகளாக திகழ உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

******


(Release ID: 1551454) Visitor Counter : 816


Read this release in: English , Marathi , Bengali