தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனரான அலோக் குமார் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா அவர்களின் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்

சிபிஐ இயக்குனர் பொறுப்பு மற்றும் செயல்பாடுகளை எம். நாகேஷ்வர் ராவ் கவனிப்பார்

Posted On: 24 OCT 2018 2:33PM by PIB Chennai

      சிபிஐ-யின் மூத்த அதிகாரிகள் ஒருவர் மீது மற்றொருவர் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளால் அந்த அமைப்பின் சூழ்நிலை சீர்குலைந்துள்ளது. அரசின் உயர்நிலை புலனாய்வு முகமையான சிபிஐ-யின் நம்பகத்தன்மைக்கும், புகழுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பணிச் சூழலையும் இது சீர்குலைத்துள்ளது. ஒட்டுமொத்த நிர்வாகத்திலும் இதன் தாக்கம் ஆழமாகவும், கண்கூடாகவும் தெரிகிறது.

  இந்தப் பிரச்சனையை மத்திய அரசு கவனமாக ஆய்வு செய்தது. அதன் வசமுள்ள தகவல்களை பரிசீலித்தபோது, அசாதாரணமான முன்னெப்போதும் இல்லாத சூழல் உருவாகியிருப்பதாக அரசு உணர்கிறது.  இதையடுத்து, டி.பி.எஸ்.இ. சட்டத்தின் பிரிவு 4(2)-ன்கீழ் மத்திய அரசுக்கு உள்ள அதிகாரத்தை செயல்படுத்த வேண்டியுள்ளது. சமத்துவம், நியாயமான செயல்பாடு, இயற்கை நீதியின் அடிப்படையில் சிபிஐ-யின் இயக்குனர் திரு. அலோக் குமார் வர்மா, சிறப்பு இயக்குனர் திரு. ராகேஷ் அஸ்தானா ஆகியோரை அவர்களின் செயல்பாடுகள், அதிகாரம், கடமை மற்றும் மேற்பார்வை பணிகளிலிருந்து விடுவிப்பது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

  தற்போது எழுந்துள்ள அசாதாரண மற்றும் முன்னெப்போதும் இல்லாத நிலைமைக்கு காரணமான சிவிசி விசாரணை முடியும்வரை அல்லது மத்திய அரசு சட்டப்படியாக உரிய முடிவை எடுக்கும்வரை இது இடைக்கால நடவடிக்கையாக இருக்கும்.

   மேற் குறிப்பிட்டப் பின்னணியில் இடைக்கால ஏற்பாடாக தற்போது சிபிஐ இணை இயக்குனராக பணிபுரிந்து வரும் திரு. எம். நாகேஷ்வர் ராவ், சிபிஐ இயக்குனரின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை கவனிப்பதற்கு மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

********



(Release ID: 1550656) Visitor Counter : 147


Read this release in: English , Marathi , Gujarati