குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்த செலவில் உயர்தர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் : ஆயுஷ்மான் பாரத் திட்டம் சுகாதார சேவையில் புரட்சியை ஏற்படுத்தும் – குடியரசுத் துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு
प्रविष्टि तिथि:
12 OCT 2018 1:38PM by PIB Chennai
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 9-ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழா இன்று (12.10.2018) நடைபெற்றது. விழாவில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, கடந்த 200 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி மற்றும் சிகிச்சை முறைகளில் உயர் சிறப்பு நிறுவனமாக பிரகாசிக்கும் இந்த கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரிய தருணம் என்றார்.
இந்தியாவில் உள்ள ஐந்து சிறந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக, ஜவஹர்லால் மருத்துவ உயர்கல்வி & ஆராய்ச்சி மையம் திகழ்வதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார்.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளை வழங்குவதோடு மட்டுமின்றி, இந்த மருத்துவமனை ஏராளமான நோயாளிகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளித்து வருகிறது.
1823-ஆம் ஆண்டு பிரெஞ்ச் அரசால் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை, நீண்டகாலத்திற்கு முன்பே நிறுவப்பட்ட வெப்பமண்டல மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கிறது. பின்னர் சிறிது காலம் தன்வந்தரி மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்பட்ட இந்தக் கல்லூரி, இறுதியாக ஜூலை 13, 1964-முதல், ஜவஹர்லால் மருத்துவ உயர்கல்வி & ஆராய்ச்சி மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, கடந்த பத்தாண்டுகளில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக திகழ்வதுடன், நாட்டிலேயே மூன்றாவது சிறந்த மருத்துவக் கல்லூரியாக திகழ்கிறது.
அன்பார்ந்த பேராசிரியர்களே, மாணவர்களே,
“கல்வியில் புதுமையைப் புகுத்துதல், நோயாளிகள் சார்ந்த ஆராய்ச்சி, மக்களின் சுகாதாரம் மற்றும் உயர்ந்த சேவை” போன்றவற்றை தொலைநோக்கு சிந்தனையாகக் கொண்டு செயல்படுவதற்கு நீங்களே இலக்கு நிர்ணயித்து பணியாற்ற வேண்டும்.
இந்த தொலைநோக்கு சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு, உங்களது தொலைநோக்கு அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, தொடர் முயற்சிகளை மேற்கொண்டு, “கருணை, நெறிமுறையுடன் கூடிய வலுவான சுகாதார வல்லுனர்களை உருவாக்கவும், தொடர் சுகாதார கவனிப்பில் உயர்வான சேவையையும் வழங்க வேண்டும்”. இந்த நிறுவனத்தை உயர் சிறப்பு நிறுவனமாக மாற்றுவதற்கு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்காக இந்நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் அவரது குழுவினரை நான் பாராட்டுகிறேன்.
ஒரு நிறுவனத்தை உருவாக்குவது என்பது ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒட்டுமொத்த குழுவினரும் இணைந்து பணியாற்றும் நீண்ட, நெடிய, கடினமான நடவடிக்கையாகும். கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்பு, புதிய முன்முயற்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள், பிரதிபலித்தல் மற்றும் சீர்திருத்தம் ஆகியவை, ஒரு நிறுவனம் சிறப்பான நிலையை அடைவதற்கு தேவையான முக்கிய அம்சங்களாகும். இன்று ஜிப்மர் நிறுவனத்தின் இரண்டு வளாகங்களில் இருந்து சுமார் 200 மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை முடித்து பணியாற்ற தயாராவது மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களது கடுமையான படிப்பு காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ஒவ்வொருவரையும் நான் மனதார பாராட்டுகிறேன்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி கடந்த சில ஆண்டுகளில் இந்த மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசிரியர்களையும், மாணவர்களின் வெற்றிக்காக தன்னலமின்றி பாடுபட்ட அவர்களது பெருமைக்குரிய பெற்றோர்களையும் நான் பாராட்டுகிறேன்.
அன்பார்ந்த மாணவர்களே,
இந்த நாட்டில், உயர்தரமான கல்வியைப் பெறும் குறிப்பிட்ட சில மாணவர்களாக நீங்கள் திகழ்வது உங்களது பாக்கியம்.
மருத்துவக் கல்வியின் சிறப்பான அடிப்படை முறைகள் உங்களுக்கு கிடைத்திருக்கும் என நான் நம்புகிறேன். அத்துடன் உங்களது விருப்பத்துக்கு ஏற்ற துறையை தேர்வு செய்து நிபுணர்களாவதற்கு நீங்கள் ஆயத்தமாகியிருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.
பரந்து விரிந்த, பெருமளவிலான மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில், சுகாதார சேவைகள் அதிகம் தேவைப்படுகிறது. ஆரம்ப சுகாதார மையமாக இருந்தாலும் சரி, அல்லது, உயர் சிறப்பு மருத்துவமனைகளான உங்களது ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது, இன்னும் அதிக மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் இன்னும் தரமான மருத்துவ சேவை கிடைக்கவில்லை. நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு குறைந்த செலவில் உயர் சிகிச்சையும் கிடைக்கவில்லை. எனவே, ஒவ்வொருவருக்கும், சிறப்பான, தரமான, மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு, மிகவும் சிறப்பு மிக்க பிரதமரின் “ஜன் ஆரோக்யா திட்டத்தை” தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம், இதுவரை நாம் கண்டிராத மாபெரும் சுகாதார திட்டமாகும். இந்தத் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தினால், இந்தியாவின் மருத்துவ சேவையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும். குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவை வழங்குவதற்கான இந்த உன்னதமான முன்முயற்சியில், உங்களைப் போன்றவர்கள் மிக முக்கிய பங்குவகிக்க வேண்டும்.
நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு குறைந்த செலவில் உயர் சிறப்பு மருத்துவ சேவை வழங்குவதில், ஜிப்மர் நிறுவனம் நீண்டகாலமாக முன்னணி நிறுவனமாக திகழ்வது மகிழ்ச்சிக்குரியது.
முழுமையான உரைக்கு www.pib.nic.in இணையதளத்தைக் காணவும்.
****
(रिलीज़ आईडी: 1549550)
आगंतुक पटल : 243