பிரதமர் அலுவலகம்

தொழில்களை ஈர்க்கும் மகாராஷ்ட்டிரா: மக்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் 2018-ல் பிரதமர் ஆற்றிய தொடக்கவுரை

Posted On: 18 FEB 2018 10:23PM by PIB Chennai

மாண்புமிகு. சி. வித்யாசாகர் ராவ் அவர்களே, முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்நாவீஸ் அவர்களே, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்களே, இங்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் வருக வருகவென தொழில்களை ஈர்க்கும் மகாராஷ்ட்டிராவிற்கு வரவேற்கிறேன்.

 

அறிவியலில் சிறந்த அம்சங்கள் குறித்து எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. காந்தப் புலத்திற்கு இருவழிகளும் பரிமாணமும் உண்டு என்பதை எனக்குத் தெரிவித்திருந்தனர். நான் இங்கு வருவதற்கு முன்பு, புதிய மும்பை விமான நிலையம் மற்றும் JNPT தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். இவ்விரண்டு நிகழ்வுகளும் காந்தப்புலமான மகராஷ்ட்டிராவின் வழியையும், பரிமாணத்தையும் வெளிப்படுத்துகிறது. காந்தப்புல மையத்திற்கு அருகே நீங்கள் இருக்கும்போது, அதன் சக்தியை அதிகமாக உணரமுடியும் என்பதுதான் நிதர்சனம்.  உங்களது உத்வேகம், ஆர்வம், மகிழ்ச்சியின் வெளிப்பாடு, வலுவான மகாராஷ்ட்டிராவுக்கு சான்றுகளாகும்.

நண்பர்களே,

     இந்த நிகழ்வு ஒரு சிறந்த கூட்டுறவு போட்டி மனப்பான்மையுள்ள கூட்டமைப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இன்று, ஒருவகையான போட்டி, ஒரு மாதிரியான எதிர்நீச்சல் நம் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் நிலவுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்படுகின்றன. உள்கட்டமைப்பு, வேளாண்மை, ஜவுளி, சுகாதார மேம்பாடு, கல்வி, சூரிய சக்தி மற்றும் பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இவ்வகை நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. மாநிலங்களின் தேவைகளைக் கருதி, பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கவனம் செலுத்தப்படுகிறது.

     அண்மையில், அணுகூலமான அசாம் – முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு (‘Advantage Assam – Investors Summit’) எனும் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வடகிழக்கில் முதலீடு தொடர்பாக இதுபோன்ற நிகழ்வை நடத்த வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக யாரும் நினைத்துப் பார்த்ததே இல்லை. ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குஜராத்திலும் நடத்தப்பட்ட இதுபோன்ற நிகழ்வின் விளைவுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே,

     மகாராஷ்ட்டிர அரசு இதுபோன்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதைக் கண்டு, இந்த அரசை நான் பாராட்டுகிறேன். முதலீட்டுக்கான சூழலை கடந்த 3 ஆண்டுகளாக வலுப்படுத்துவதற்கான முயற்சியில் மகராஷ்ட்டிர அரசு ஈடுபட்டு, புதிய முயற்சிகளை எடுத்துள்ளது. இவற்றின் விளைவாக, வெளிநாட்டு வர்த்தகத்தில், மகாராஷ்ட்டிர மாநிலத்தின் செல்வாக்கு உலக வங்கியில் உயர்ந்திருப்பதை காணமுடிகிறது. பட்நாவிஸ் தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள சீரமைப்புத் திட்டங்கள்,  மகாராஷ்ட்டிராவை  புனரமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

     ஆளுமையில், புதிய பணிக் கலாச்சாரத்தை கொள்கை ரீதியிலான சீரமைப்புகள் மூலம் மேம்படுத்தினால் மட்டுமே ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும்.

காந்தபூமி குறித்து நான் ஏற்கனவே  பேசியது, இந்த முறையில்தான் உருவாகியுள்ளது. இதன் விளைவு, மாநிலத்தின் முதலீடு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வெளிப்படுகிறது. மொத்த செலவீனம், உள்கட்டமைப்புத் திட்டங்களில் மகாராஷ்ட்டிரா, நாட்டின் இதர  மாநிலங்களைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது.

     நாட்டின் மொத்த வளர்ச்சியில் மகாராஷ்ட்டிராவை முதல் மாநிலமாக ‘Frost and Sullivan’s’  என்ற அமைப்பு பட்டியலிட்டுள்ளது. 2016-17-ல் நாட்டிற்கு வந்துள்ள முதலீடுகளில் கிட்டதட்ட 51 சதவீதம் மகாராஷ்ட்டிராவுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாரிப்பு வாரம், பிப்ரவரி 2016-ல் மும்பையில் கொண்டாடப்பட்டபோது, நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள்  தொழில்துறையில் கையெழுத்தாகியுள்ளன. இதில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

  தற்போது மகாராஷ்ட்டிராவில் நிகழ்ந்து வரும் உள்கட்டமைப்புப் பணிகள் உலக்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.  தில்லி – மும்பை தொழில் துறை பாதைக்கானத் திட்டம், உலகில் 100 புதிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  நவி மும்பை விமான நிலையம், மும்பை டிரான்ஸ் துறைமுக இணைப்பு கட்டுமானப் பணிகள், இப்பகுதியில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும்.  மேலும் மும்பை, நவி மும்பை, புனே மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிட்டதட்ட 350 கிலோ மீட்டர் தூர மெட்ரோ நெட் வொர்க் பணிகள் இந்த மண்டலத்தில் முதலீடு மற்றும் மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

   நண்பர்களே, தற்போது நான் உங்களுக்கு சிறப்புத் திட்டம் ஒன்றைப் பற்றி தெரிவிக்கப் போகிறேன். அது ‘மகாராஷ்ட்டிரா சம்ருதி காரிடார்’.  இந்தத் திட்டம் மகாராஷ்ட்டிராவின் கிராமப்புறங்கள், அங்கு மேற்கொள்ளப்படும் வேளாண் தொடர்புடைய தொழில்கள் ஆகியவற்றை வளர்ச்சியில் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  மகாராஷ்ட்டிராவில் அமைக்கப்பட்டு வரும் 700 கிலோ மீட்டர் தூர தகவல் தொடர்பு விரைவுப்பாதைக்கான கட்டுமானப் பணி மற்றும் நவீன நகரங்களைப் போன்று விரைவுப் பாதையின் இருமருங்கிலும் மேம்படுத்தப்படும் 24 புதிய முறைகள் ஆகியவை குறைந்தபட்சம் 20 முதல் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும்.  

நாட்டின் முதலாவது ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உருவாக, மகாராஷ்ட்டிர அரசு இலக்கு நிர்ணயித்திருப்பது தமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  சத்ரபதி சிவாஜி பிறந்த மண்ணில், குறிப்பிட்ட இலக்கை அடைவதில் எந்தச் சிரமமும் இருக்காது. எனவே, சிவாஜியின் ஆசியோடு, மகாராஷ்ட்டிராவை ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உருவாக்கும் மாநில அரசின் இலக்கு நிச்சயமாக நிறைவேறும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

     மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால்தான், நாடும் வளம் பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. மகாராஷ்ட்டிராவின் வளர்ச்சி, இந்தியா மேம்பாடு அடைய தகுதி உள்ளதற்கான அடையாளம் ஆகும். மாறிவரும் சூழல், மாறிவரும் எண்ணங்களுக்கு இது ஒரு தகுந்த எடுத்துக் காட்டாகும்.

     ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடுகளின் வரிசையில் இந்தியா முதன்முறையாக காலடி எடுத்து வைத்தபோது, அதுகுறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியானதை நான் இன்னும்  நினைவில் வைத்துள்ளேன்.  ஆனால், இந்த வளர்ச்சி சதவீதம், ஊழல்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்தது.  பின்னர், வேறு விதமான சுற்றுப்புறச் சூழல் நாட்டில் உருவானது.

     1,400-க்கு மேற்பட்ட சட்டங்களை கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசு ரத்து செய்திருப்பதை நீங்களெல்லாம் உணர்வீர்கள். புதிய சட்டங்களை உருவாக்கும்போது, நிலைமைகளை குழப்பாமல், அவற்றை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.

     பொது பட்ஜெட்டின் ஓர் அங்கமாக, ரயில்வே பட்ஜெட் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் வழக்கமான காலத்தைவிட பட்ஜெட்  ஒருமாதத்திற்கு முன்னதாகவே, தாக்கல் செய்யப்படுகிறது.

நண்பர்களே,

     சுகாதாரச் சேவை திட்டத்தில்,  உலகத்தினர் அனைவரையும் ஈர்க்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. பெரிய தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், அவற்றின் நிர்வாகிகள் இங்கு வருகை புரிந்துள்ளனர். தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் எவ்வளவு ஊதியம் வாங்கினால், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதை அறிவீர்கள்.  சாதாரணமாக, மாதம் 60 ஆயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை மாத ஊதியம் பெறுபவர்களே இந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

     ஆனால், தற்போது ஏழை எளிய குடும்பத்தினருக்கு ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், 5 லட்சம் ரூபாய் வரை சுகாதார வசதி கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி பேருக்கு மேல், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின்மூலம் பயன்களைப் பெறுவர். கடுமையான நோய்களிலிருந்தும், நெருக்கடியான நிதிப் பற்றாக்குறையிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க, இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.

     நாட்டின் கல்வித்துறையில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், புதிய உத்தி தொடங்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளில், நாட்டின் கல்விமுறையை சீரமைக்க 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள், நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும் உதவும்.

வலுவான மகாராஷ்ட்டிராவை உருவாக்குவதில் பின்னணியில் இருந்து செயல்படும் மாநிலத்தின் தொழிலதிபர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வுக்கு மீண்டும் எனது வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதை, இங்கு குழுமியுள்ள இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள முக்கியப் பிரமுகர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சி, உலக அரங்குக்கு எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பதையும், உலக மக்கள் தொகையில், ஆறில் ஒரு பங்கினர் எவ்வாறு பயன்பெறுவர் என்பதையும் நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்.

******



(Release ID: 1547131) Visitor Counter : 230


Read this release in: English , Urdu