உள்துறை அமைச்சகம்

மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இரண்டு இணையதளங்களை மத்திய உள்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கணினி குற்ற நடவடிக்கைகள் தொடர்பான இணைய தளம் ஆட்சேபத்திற்கு உரிய இணைய தள தகவல்களை தடுப்பதை நோக்கமாக கொண்டது.
. பாலியல் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தேசிய புள்ளி விவர இணைய தளம் பாலியல் குற்றங்களை கண்காணிப்பது மற்றும் அது தொடர்பான விசாரணைக்கு உதவுவதை நோக்கமாக கொண்டது

Posted On: 20 SEP 2018 5:37PM by PIB Chennai

மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று புதுதில்லியில் இரண்டு இணைய தளங்களை உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார்.  “cybercrime.gov.in” என்ற இணைய தளம்  குழந்தைகளை ஆபாசமாக காட்டுவது, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டு பலாத்காரம் தொடர்பான ஆட்சேபத்திற்குரிய  பாலியல் தகவல்களுக்கு எதிராக இந்த இணைய தளத்தில் மக்கள் செய்யும் புகார்கள் பெறப்படும்.

பாலியல் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தேசிய புள்ளி விவர இணைய தளத்தை,  சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புக்களால் மட்டுமே அணுகமுடியும்.  பாலியல் குற்றங்களை திறமையாக கண்காணிப்பது மற்றும் அது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்கு இந்த இணைய தளம் திறமையாக உதவும். 

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், மாநிலங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காணொலிக் காட்சி மூலம் ஆற்றிய உரையில் உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பாலியல் தொடர்பான குற்ற நடவடிக்கைகள்  விசாரணையை மேம்படுத்துவது, விசாரணைக்கு உதவ நவீன தடய அறிவியல் வசதிகளை ஏற்படுத்துவது, கடுமையான தண்டனை வழங்க வகை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் மகளிர் பாதுகாப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, மகளிர் பாதுகாப்புக்காக பாதுகாப்பான நகர திட்டங்களும் துவக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இன்று துவக்கப்பட்டுள்ள இரண்டு இணைய தளங்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே என்று அமைச்சர் குறிப்பிட்டார்.  இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்கச் செய்வதை உறுதி செய்வதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்களை காவல்துறையினர் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்றார். இரண்டு இணைய தளங்களும் திறமையாக செயல்படும் வகையில் அதன் புள்ளி விவரங்கள் தொடர்ந்து அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு சில  மாநிலங்கள் அறிமுகப்படுத்தியுள்ள நடவடிக்கைகளை பாராட்டிய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சிறப்பான நடவடிக்கைகளை பிற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. மேனகா சஞ்சய் காந்தி, உறைவிடங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார். 

பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையை  துரிதமாக மேற்கொள்ள வசதியாக காவல் நிலையங்களில் தடய அறிவியல் சாதனங்கள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.  திருமணம் முடிந்த சில காலத்திற்குள் மனைவியை கைவிடும் கணவர்களுக்கு எதிரான வழக்கில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை செயலர் திரு. ராஜீவ் கவ்பா, உள்துறை அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தைச்சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மூத்த காவல்துறை அதிகாரிகள் காணொலிக் காட்சியில் பங்கேற்றனர்.

*******



(Release ID: 1546875) Visitor Counter : 263


Read this release in: English , Marathi , Malayalam