பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

Posted On: 18 SEP 2018 7:00PM by PIB Chennai

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைகழக வளாகத்தில் இன்று (18.09.2018) நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பழைய காசி பகுதிக்கான ஒருங்கிணைந்த மின்சார வளர்ச்சித் திட்டம் (IPDS) ; மற்றும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் அடல் அடைகாக்கும் மையம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் மண்டல கண் மருத்துவ மையம் போன்ற திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

மொத்தம் ரூ.550 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வாரணாசியில் மாற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் நகரின் பாரம்பரிய பெருமையை பாதுகாப்பதாகவும் அமைய வேண்டும் என்றார். வாரணாசி நகரத்தை நவீனமயமாக்கும் போது அதன் பண்டைக் கால அடையாளத்தையும் பாதுகாப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். காசியில் வசிக்கும் மக்கள் மேற்கொண்ட முடிவின் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தற்போது கண்கூடாக தெரிகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மின்சாரம், சாலை மற்றும் இதர கட்டமைப்புத் திட்டப் பணிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய பிரதமர், வாரணாசி மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களின் வாழ்விலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். வாரணாசி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் படங்களை, பொதுமக்கள் இணையதளத்தில் வெளியிட்டிருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். போக்குவரத்துக் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். வாரணாசி நகரைத் தூய்மைப்படுத்தவும், அழகுற காட்சியளிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். இது போன்ற நடவடிக்கைகள் சுற்றுலா நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், இதுவொரு தொடர் முயற்சியாக அமையும் என்றும் தெரிவித்தார். சாரநாத்தில் இது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

சாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் திட்டங்கள் போன்ற அடிப்படை வசதிகள், வாரணாசியை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்றும் பிரதமர் தெரிவித்தார். காசி தற்போது சுகாதார மையமாக உருவெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். இன்று தொடங்கி வைக்கப்பட்ட அடல் அடைகாக்கும் மையம், தொடங்கிடு இந்தியா திட்டங்கள் ஏற்கனவே இந்த மையத்துடன் இணைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் குறிப்பிட்ட சில நகரங்களின் பட்டியலில் வாரணாசியும் ஒன்று எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

வாரணாசி நகரத்தை மாற்றியமைக்க வேண்டுமென்ற கனவை நனவாக்க, இந்நகர மக்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளுமாறும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

*********



(Release ID: 1546611) Visitor Counter : 118