சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

328 வகை மருந்துகள் உற்பத்தி, விற்பனைக்கு தடை

Posted On: 12 SEP 2018 1:03PM by PIB Chennai

மத்திய சுகாதார அமைச்சகம் 328 வகையான நிலையான மருந்து வகைகள் (Fixed Dose Combinations) உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றுக்கு உடனடியாகத் தடை விதித்துள்ளது. 2018, செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

ஏற்கெனவே, 344 வகையான மருந்துகளுக்கு மருந்துகள், ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தின் (1940) 26 ஏ பிரிவின் கீழ் மத்திய அரசு தடை விதித்து, அரசிதழில் 2016ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து மருந்து உற்பத்தியாளர்கள் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2017ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி 5வது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (Drugs Technical Advisory Board) ஆய்வு செய்தது. அந்த போர்டு அளித்த அறிக்கையில், 328 மருந்துகளில் உள்ள பொருட்கள் ஆபத்தில்லாதவை என்று மருத்துவ ரீதியில் நியாயப்படுத்த இயலாது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், மருந்துகள் ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தின் (1940) “26 ஏ” பிரிவின் கீழ் மக்கள் நலனைக் கருதி,அவற்றை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் விநியோகம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. 6 வகை மருந்துகளைப் பொறுத்தவரையில் சில நிபந்தனைகளுடன், மருத்துவப் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று போர்டு கூறியது. 2016ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி தடை விதிக்கப்பட்ட 344 மருந்துகளில் உள்ள 15 வகை மருந்துகள் 1988ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதிக்கு முன்பே உற்பத்தி செய்யப்பட்டுவிட்டதால் இந்த அறிவிக்கையிலிருந்து விலக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

***



(Release ID: 1545761) Visitor Counter : 317


Read this release in: Hindi , English , Marathi