பிரதமர் அலுவலகம்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

Posted On: 04 SEP 2018 5:58PM by PIB Chennai

ஆசிரியர்கள் தினம் நாளை (05.09.2018) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தேசிய நல்லாசிரியர் விருதுபெறவுள்ள ஆசிரியர்களை   பிரதமர் திரு  நரேந்திர மோடி, இன்று (04.09.2018) புதுதில்லியில் லோக் கல்யாண் மார்கில் உள்ள தமது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியின்போது,  மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகரும் உடனிருந்தார்.

நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு, விருது பெறும் ஆசிரியர்கள் ஆற்றிய பணிகளுக்காக அவர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். கல்விப் பணியில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு உணர்வுக்கும், அதனையே வாழ்க்கையின் தாரக மந்திரமாக ஆக்கியதற்கும் பிரதமர்  பாராட்டுத் தெரிவித்தார். ஒரு ஆசிரியர் தனது வாழ்நாள் முழுவதும் ஆசிரியராகவே பணியாற்றுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள், சமுதாயத்தைத் திரட்டி பள்ளிக்கூட வளர்ச்சியில் தங்களையும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றிக் கொள்ளுமாறும் இந்த கலந்துரையாடலின்போது பிரதமர் கேட்டுக் கொண்டார். மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்து, குறிப்பாக ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் திறனை வெளிக்கொணர்வதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியை அகற்ற கல்வியாளர்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரதமர், இதன் மூலம், மாணவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் ஆசிரியர்களை மனதில் நிலைத்திருக்கச் செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார். பள்ளிக்கூடங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை டிஜிட்டல் மயமாக்க ஆசிரியர்கள் பாடுபடுமாறும் பிரதமர் உற்சாகப்படுத்தினார்.

இந்த கலந்துரையாடலின்போது, ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றிய பள்ளிக்கூடங்களை, உயர் சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்களாக மாற்ற மேற்கொண்ட முயற்சிகளைப் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மயமாக்கியதற்கும் டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களைக் கொண்டு வந்து, நாடு முழுவதும் பள்ளிக் கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காகவும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கான தேர்வு நடைமுறைகளை மத்திய, மனித வள மேம்பாட்டுத்துறை இந்த ஆண்டு மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி ஆசிரியர்கள் தாங்களே தங்களது பெயரை விருது பெற விண்ணப்பிக்க வழிவகை செய்திருப்பது, தேசிய விருது பெறும் நடைமுறையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பெரும் மாற்றமாகவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ளது. இந்த புதிய திட்டம் வெளிப்படையான, நியாயமான மற்றும் சிறப்பான பணிகளை கவுரவிப்பதாக அமையும்.

                                            ****



(Release ID: 1544923) Visitor Counter : 155