குடியரசுத் தலைவர் செயலகம்

சைப்ரஸ் நாட்டில் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த்; நிக்கோசியாவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் உரையாற்றினார் – அந்நிய முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது – சைப்ரஸ் முதலீடுகளையும் இந்தியா வரவேற்பதாக உரை

Posted On: 03 SEP 2018 6:48PM by PIB Chennai

  சைப்ரஸ், பல்கேரியா மற்றும்  செக் குடியரசு ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், பயணத்தின் முதல் கட்டமாக நேற்று (02, செப்டம்பர் 2018) சைப்ரஸ் சென்றடைந்தார். நிக்கோசியாவில் இன்று (03, செப்டம்பர் 2018) சைப்ரஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களிடையே அவர் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியாவுக்கும், சைப்ரஸ் நாட்டிற்கும் இடையேயான உறவு மிகவும் பழமையான, நெருங்கிய மற்றும் பன்முகத்தன்மைக் கொண்டது என்றார். பண்டைக்கால நாகரீகங்களைப் பின்பற்றும் இரு நாடுகளும், தத்தமது மக்களுக்கே  முன்னுரிமை அளிப்பதாகக் கூறினார். சைப்ரஸ் மற்றும் இந்திய மக்களுக்கு இடையிலான நெருங்கிய தொடர்புகள், நமது இருதரப்பு ஒத்துழைப்புகளுக்கு மிக முக்கிய ஆதாரமாக திகழ்கின்றன என்றும் தெரிவித்தார். மக்களிடையேயான நேரடி தொடர்புகள் மூலம், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை ஏற்படுத்தியிருப்பதுடன், கல்வி மற்றும் அறிவுசார் தொடர்புகளும், மிகவும் பயனுள்ள இருதரப்பு ஒத்துழைப்புகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் கூறினார்.  இருநாடுகளுக்கும் பொதுவான பிரச்சினைகள், அமைதி, பாதுகாப்பு மற்றும் இறையாண்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவையே, பல்வேறு சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளையும் சர்வேதேச அளவிற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சி, நவீனமயம் போன்றவையே இந்திய அரசின் முன்னுரிமைப் பணியாக உள்ளது என்று கூறிய குடியரசுத் தலைவர், வளர்ச்சித்திட்டங்களின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக திகழும் சைப்ரஸ், இந்தியாவில் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ள நாடாகவும் திகழ்வதாக குறிப்பிட்டார். இந்தியா தற்போது மிகவும் மகிழ்ச்சியான காலகட்டத்தில் இருப்பதாகவும், சைப்ரஸ் தொழில்துறையினருக்கு அதிக வர்த்தக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம், கடந்த காலாண்டில் அபரிதமாக உயர்ந்து 8.2 சதவீத்த்தை எட்டியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது இந்தியாவை உலகில்  வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக மாற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எனவே, இந்திய அரசின் பல்வேறு முன் முயற்சிகளில் பங்கேற்க வருமாறும் சைப்ரஸூக்கு குடியரசுத்தலைவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், சைப்ரஸ் முதலீடுகளை வரவேற்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று (02 செப்டம்பர் 2018) நிகோசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், சைப்ரஸில் உள்ள இந்தியர்கள் மிக ஒற்றுமையாக இருப்பதுடன், சைப்ரஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக, இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன் முயற்சிகளை சுட்டிக்காட்டிய திரு. ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் கொள்கைகளை பரப்புவதில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக இந்திய அரசு கருதுகிறது என்றும் தெரிவித்தார்.

                                        *****



(Release ID: 1544871) Visitor Counter : 188


Read this release in: English , Urdu