விண்வெளித்துறை

பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தபடி 2022க்குள் முதலாவது இந்தியரை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பும் : டாக்டர். ஜிதேந்திர சிங்

ரூ.10,000 கோடி மதிப்பீட்டிலான இந்தத் திட்டம் இந்திய விண்வெளி பயணத்தில் திருப்பு முனையாக அமையும் ; பெரும்பாலான பொறியியல் சாதனங்கள் தயார் : இஸ்ரோ தலைவர்
சந்திரயான்-2 விண்கலம் 2019 ஜனவரியில் செலுத்தப்படும்

Posted On: 28 AUG 2018 4:54PM by PIB Chennai

புதுதில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் அலுவலகம் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டபடி, இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோ, 2022க்குள் முதலாவது இந்தியரை  விண்வெளிக்கு அனுப்பும் என்றார்.

இந்தியர்கள் ஏற்கெனவே விண்வெளிக்கு சென்று வந்துள்ள போதிலும், இஸ்ரோவால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட விண்கலம் மூலம், இந்தியர்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும் என்றும் கூறினார். இந்தப்பயணம் இந்திய விண்வெளி வரலாற்றில் பெரும் சாதனையாக அமையும் என்று குறிப்பிட்ட டாக்டர். ஜிதேந்திர சிங், வாழ்க்கையை எளிமைப்படுத்த ஏதுவாக வேளாண்மை, ரயில்வே, மனிதவள மேம்பாடு, சாலைப் போக்குவரத்துத் துறை பணிகளில் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது உடனிருந்து இஸ்ரோ தலைவர் டாக்டர். சிவன் பேசுகையில், மனிதனை சுமந்து செல்லும் இந்தியாவின் முதலாவது விண்கலமான ககன்யான் மூலம், முதலாவது இந்தியர் விண்வெளிக்கு அனுப்பப்படுவார் என்றும், 7 டன் எடையுள்ள இந்த விண்கலம், மனிதர்கள் ஆய்வு மேற்கொள்வதற்கான பகுதி, ஆய்வுக்கருவி உள்ளிட்ட 3 பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும் என்றும்  கூறினார். ஜி.எஸ்.எல்.வி. எம் கே – 3 செலுத்து வாகனம் மூலம் ககன்யான் விண்ணில் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதவிர சந்திரயான் – 2 விண்கலம் 2019 ஜனவரியில் விண்ணில் செலுத்தப்படும் என்றும், இதில் நிலவை சுற்றி வருவதற்கான விண்கலம் 2379 கிலோ எடை கொண்டதாகவும், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும், விக்ரம் என்ற பெயர் கொண்ட விண்கலம் 1471 கிலோ எடைகொண்டதாகவும் இருக்கும் என்றும் டாக்டர். சிவன் தெரிவித்தார்.

மார்ச் 2019-க்குள் மொத்தம் 13 செயற்கைக்கோள்களை செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவு அவர் கூறினார்.

                                                                                                               *****


(Release ID: 1544185)
Read this release in: English , Marathi , Malayalam