பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

Posted On: 14 JUL 2018 6:22PM by PIB Chennai

வாரணாசியில் ரூ.900 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல முக்கியமான திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (14.07.2018) தொடங்கி வைத்தார். பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களில் வாரணாசி நகர சமையல் எரிவாயு விநியோகத் திட்டம், வாரணாசி – பல்லியா மின்சார ரயில் போக்குவரத்துத் திட்டம் ஆகியவையும் அடங்கும். பஞ்ச்கோஷி, பரிக்ரம மார்க், நவீன நகர இயக்கத்தின்கீழ் பல திட்டங்கள், நமாமி கங்கா ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. வாரணாசியில் சர்வதேச மாநாட்டு மையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

     இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற இளம் வீரர் ஹீமா தாசுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், பிரதமர் உரையைத் தொடங்கினார்.

     தொன்மையான அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டே, 21-ஆம் நூற்றாண்டுக்கு தேவையானவற்றை உள்ளடக்கி, காசி நகரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நான்காண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பிரதமர் கூறினார். புதிய இந்தியாவிற்காக ஆன்மீகமும், நவீனமும் கலந்த புதிய பனாரஸ் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

     புதிய பனாரஸின் சில தோற்றங்கள் தற்போது காணப்படுவதாக அவர் கூறினார். கடந்த நான்காண்டுகளில் வாரணாசியில் குறிப்பிடத்தக்க அளவு முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நடைமுறைப்படுத்தப்படும் பணிகளின் ஒரு பகுதியாகவே சுமார் 1000 கொடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டன. சில திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

     போக்குவரத்தின் மூலம் மாற்றம் என்ற தொலைநோக்குத் திட்டம் பற்றி விவரித்த பிரதமர், அஸாம்கடில் இன்று பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது, இந்த செயல்பாட்டின் ஒரு பகுதிதான் என்றார்.

     இந்தப் பகுதியில் மருத்துவ விஞ்ஞான மையமாக வாரணாசி வளர்ந்து வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். உலகத் தரத்திலான சுகாதார கல்விக் கழகத்தை உருவாக்க பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகம் (பி.எச்.யு) எய்ம்ஸ்-உடன் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

     இந்தப் பகுதியிலும், வாரணாசியிலும் சிறப்பான போக்குவரத்து தொடர்புக்கு மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி பிரதமர் பேசினார். மிக முக்கியமான சர்வதேச சுற்றுலாத் தலமாக காசி வளர்ந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில்தான் இன்று சர்வதேச மாநாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். வாரணாசி மக்களுக்கு ஜப்பானின் பரிசாக இது அளிக்கப்பட்டிருப்பதற்கு ஜப்பான் பிரதமர் திரு. ஷின்ஸோ அபே-க்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். சுற்றுலாவுக்காக, தூய்மை இந்தியா திட்டத்திற்காக, உத்தரப்பிரதேச மாநில அரசும் மக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

     நான்காண்டுகளுக்கு முன் வாரணாசியில் சாலைகளும், மற்ற அடிப்படை வசதிகளும் மோசமான நிலையில் இருந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.  இந்த நகரில் கழிவுப் பொருட்கள் கட்டுப்பாடின்றி கங்கையாற்றுக்குச் சென்று கொண்டிருந்தன. தற்போது இதற்கு நேர்மாறாக கங்கோத்ரியிலிருந்து கடல் வரை கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது என்று பிரதமர் கூறினார்.  கழிவுநீர் சுத்திகரிப்பதற்கான திட்டங்கள் பற்றியும் அவர் பேசினார். இந்த முயற்சிகளின் பலன்கள் எதிர்காலத்தில் வெளிப்படையாக தெரியும் என்றும் அவர் கூறினார். ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், இது வாரணாசியை நவீன நகரமாக மாற்றும் என்றார். நவீன நகர முன்முயற்சி என்பது நகரங்களின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இயக்கம் மட்டுமல்ல என்றும், இந்த இயக்கம் இந்தியாவிற்கு புதிய அடையாளத்தைத் தருவதாகும் என்றும் அவர் தெரிவித்தார். முதலீட்டுக்கானச் சூழலை உருவாக்கியிருப்பதற்காகவும், தொழில் கொள்கைக்காகவும் மாநில அரசை அவர் பாராட்டினார். இதன் விளைவுகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். அண்மையில் நொய்டாவில் சாம்சங் மொபைல் உற்பத்திப் பிரிவு தொடங்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார். மொபைல் உற்பத்திப் பிரிவுகள் லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

     நகர சமையல் எரிவாயு விநியோகத் திட்டம் பற்றிப் பேசிய பிரதமர், வாரணாசியில் ஏற்கனவே 8,000 வீடுகள் குழாய் மூலமான  சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்றுள்ளன என்றார். இந்த நகரின் பொதுப் போக்குவரத்திற்கு சி.என்.ஜி எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

     ஜப்பான் பிரதமர் திரு. ஷின்ஸோ அபே, ஃபிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மேக்ரோன் ஆகியோரை வாரணாசி நகர் எவ்வாறு வரவேற்றது என்பதைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். 2019-ஜனவரியில் வெளிநாடுவாழ் இந்தியர் மாநாட்டு நிகழ்வுகள் வாரணாசியின் விருந்தோம்பலை வெளிப்படுத்துவதற்கான மற்றொரு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

----------



(Release ID: 1540477) Visitor Counter : 131