பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

உற்பத்தியான எண்ணெய்யை பகிர்ந்துக் கொள்ளும் ஒப்பந்தங்களில் பணிகளை விரைவுப்படுத்தும் கொள்கை கட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 18 JUL 2018 5:12PM by PIB Chennai

உற்பத்தியான எண்ணெய்யை பகிர்ந்துக் கொள்ளும் ஒப்பந்தங்களில் பணிகளை விரைவுப்படுத்தும் கொள்கை கட்டமைப்புக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து ஹைட்ரோ கார்பன் ஆதாரங்களின் உள்நாட்டு உற்பத்தி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கொள்கை கட்டமைப்பில் கீழ்கண்டவை அடங்கியிருக்கும்.

  1. வடகிழக்கு மண்டலத்தில் துரப்பணம் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு சிறப்பு அமைப்பு:

வடகிழக்கு மண்டலத்தில் துரப்பணம் மற்றும் மதிப்பீட்டு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. “வடகிழக்கு ஹைட்ரோ கார்பன் நெடுநோக்கு 2030” பரிந்துரையின்படி இந்த மண்டலத்தின் புவி, சுற்றுச்சூழல், போக்குவரத்து சவால்களை கருத்தில் கொண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. துரப்பணக் காலம் 2 ஆண்டுகளும், மதிப்பீட்டுக் காலம் ஓராண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மண்டலத்தில் இயற்கை வாயு உற்பத்தியை ஊக்குவிக்க அரசு இந்த வாயுக்கான விலை நிர்ணய உரிமையை வழங்கியுள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு மண்டலத்தின் உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களின் கீழ் வரும் படுகைகள் பயன் பெறும்.

  1. புதிய துரப்பண மற்றும் உரிமங்கள் கொள்கைக்கு முந்தைய துரப்பணப் படுகைகளில் ராயல்டி மற்றும் செஸ் பகிர்வு:

புதிய துரப்பண மற்றும் உரிமங்கள் கொள்கைக்கு முந்தைய துரப்பணப் படுகைகளில் சட்டப்படியான ராயல்டி மற்றும் செஸ் உள்ளிட்ட வரிகளை ஒப்பந்தக்காரரின் பங்கேற்பு அளவு அடிப்படையில் விகிதாச்சார ரீதியில் பகிர்ந்துக் கொள்வதற்கான கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது. இதனால் புதிய துரப்பண மற்றும் உரிமங்கள் கொள்கைக்கு முந்தைய துரப்பணப் படுகைகள் பயன்பெறும். இந்தத் திட்டங்களில் கூடுதல் மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்களுக்கான புதிய முதலீடு ராயல்டி மற்றும் செஸ் பகிர்வு அடிப்படையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கூடுதல் முதலீடுகள் உரிமம் பெற்ற நிறுவனத்திற்கு வர்த்தக ரீதியில் லாபம் அளிப்பதாக அமையும்.

  1. புதிய துரப்பண மற்றும் உரிமங்கள் கொள்கைக்கு முந்தைய செயல்பாட்டு நிலையில் உள்ள படுகைகளுக்கு 1961 வருமானவரிச் சட்டத்தின் 42-வது பிரிவு வரிச்சலுகைகள் விரிவாக்கப்படும். 2016 மார்ச் 28 தேதியிட்ட விரிவாக்க கொள்கையின்படி உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களின் கீழ் வரும் எண்ணெய் வயல்களுக்கான விரிவாக்க ஒப்பந்த காலத்திற்கு பொருந்தும். வருமானவரிச் சட்டம் பிரிவு 42-ன் படி கம்பெனிகள் உற்பத்தி பகிர்வு ஒப்பந்தப்படி ஏற்பட்ட செலவினங்களின் 100 சதவீதத்தை அந்த ஆண்டின் வருமானத்தை கணக்கிடும் போது கழித்துக் கொள்ளலாம். முன்பு செயல்பாட்டில் இருந்த 28 ஒப்பந்தங்களில் 13-க்கு வருமானவரிச் சட்டம் 42-வது பிரிவின் கீழ் வரிச்சலுகை பொருந்தாமல் இருந்தது. இப்போது எடுத்துள்ள நடவடிக்கை உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களில் ஒரே சீரான தன்மையை கொண்டு வரும். இந்த ஒப்பந்தத்தின் விரிவாக்கப்பட்ட காலத்தின் போது கூடுதல் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தக்காரருக்கு ஊக்குவிப்பதாகவும் அமையும்.
  2. உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களில் இயற்கை பேரிடர் ஏற்படும் நிகழ்வுகளில் எழுத்துப்பூர்வமான நோட்டீஸ் அளிப்பதற்கு காலக்கெடு 7 நாட்களிலிருந்து 15 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் குழுவின் இந்தப் ஒப்புதல் காரணமாக ஹைட்ரோ கார்பன் ஆதாரங்கள் மேம்பாடு விரைவுப்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 



(Release ID: 1539453) Visitor Counter : 126


Read this release in: Urdu , English , Marathi , Bengali