பிரதமர் அலுவலகம்

ஜெய்ப்பூரில் பயனாளிகள் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 07 JUL 2018 10:31PM by PIB Chennai

ராஜஸ்தான் தனது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மூலம் எவரையும் தனது சொந்தமாக ஆக்கிக் கொள்ளும் என்பதை என்னால் உணர்வுபூர்வமாக அறிய முடிகிறது. ராஜஸ்தானின் பிரகாசத்தையும், எழுச்சியையும் பார்க்க முடிகிறது. ராஜஸ்தான் தனது பாசத்தையும், நேசத்தையும் அனைவருக்கும் மழையென தொடர்ந்து பொழியட்டும்.  உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்காக நான் உண்மையிலேயே நன்றி உடையவனாக இருக்கிறேன்.  இந்த தீரமான பூமிக்கு நான் தலை வணங்குகிறேன். 

     நண்பர்களே,

     மகாராணா பிரதாப்பின் தீரம், சூரஜ் மல்லின் துணிச்சல், பாமா ஷாவின்  துறவு, பன்னா தாயின் தியாகம், மீரா பாயின் பக்தி, ராணி ஹதியின் தியாகம், அமிர்தா தேவியின் உயிர்த்தியாகம் போன்ற ராஜஸ்தானின் கதைகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து பண்பாட்டுப் பகுதியாக உருவாகியுள்ளது.

     வான் உயர்ந்த கோட்டைகள், தங்க ஆபரணங்கள், வண்ணமிகு தலைப்பாகைகள், இனிமையான மொழி, அருமையான பாடல்கள், கண்ணியமான பாரம்பரியம் ஆகியவை ராஜஸ்தானின் அடையாளமாகும். இயற்கையின் சவால்களை எதிர்கொண்டு, உணவு தானிய உற்பத்தி, நாட்டை பாதுகாப்பது என, நூற்றாண்டுகளாக  ராஜஸ்தான் நாட்டுக்கே ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.  

     சகோதர சகோதரிகளே,

     கடந்த 4 ஆண்டுகளில் ராஜஸ்தான் முன்னேற்றப் பாதையில்  இருமடங்கு வேகத்துடன் பயணித்து வருகிறது.  இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய அரசும், மாநில அரசும் கையோடு கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன.  உதய்ப்பூர், அஜ்மீர், கோட்டா, தவுல்பூர், நாகோர், அல்வார், ஜோத்பூர், சித்தூர் காத், கிஷன் காத், சுஜன் காத், பிகானீர், பில்வாரா, மவுண்ட் அபு, பூண்டி, பேவார் ஆகிய இடங்களுக்கு ரூ.2,100 கோடிக்கும் மேற்பட்ட 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்.  இந்தத் திட்டங்கள் அனைத்தும் ராஜஸ்தானின் நகரங்கள் மற்றும் பெருநகரங்களின் வசதிகளை சிறப்பாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையாகும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதாகட்டும் அல்லது சிறந்த கழிவுநீர் அகற்றும் முறையாகட்டும், இந்தத் திட்டங்கள் அனைத்தும் இந்த நகரங்களில் வாழ்க்கையை சிறப்பாக மாற்றக்கூடியவையாகும்.

     நண்பர்களே,

     4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு என்ன நிலைமை இருந்தது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். 4 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மாதிரியான சூழலில் வசுந்தரா ஜீ, ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் என்பதை ராஜஸ்தான் மக்கள் மறக்கக் கூடாது.  மாநிலத்தின் முந்தைய அரசு எந்த மாதிரி நிலைமையை விட்டுச்சென்றது, தற்போது எப்படிப்பட்ட வேலை நடந்து வருகிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ராஜஸ்தானின் அரசியல்வாதிகளின் பெயர்களைக் கொண்ட பலகைகளை அமைப்பதில் எப்படி அவசரம் காட்டப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள் தற்போது நிறுவப்பட்டு வரும் பார்மர் சுத்திகரிப்பு நிலையத்தில் என்ன நடந்தது என்பதை ராஜஸ்தானில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அறியும்.  இப்போது இந்த நிலையத்தின் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. இதுதான் இந்த அரசின் செயல்படும் முறையாகும்.  இதில் தாமதமோ, திசை மாற்றமோ இல்லை. மத்திய அரசாகட்டும், மாநிலத்தில் ஆளும் பிஜேபி அரசாகட்டும், எங்களது ஒரே கொள்கை வளர்ச்சிதான். வளர்ச்சி-வளர்ச்சி மட்டுமே.  

     அடுத்தடுத்த திட்டங்கள் மூலம் நாட்டின் அனைத்து மக்களின் வாழ்க்கையும் ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும், கஷ்டம் இல்லாததாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். அரசின் திட்டங்கள் எப்படி மக்களைச் சென்றடையும் என்பதைப் புரிந்து அதன்படி செயல்பட முயற்சிக்கிறோம். உறுதியான முயற்சியே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சிறிது நேரத்திற்கு முன்பு பயனாளிகளில் சிலர் தங்களது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை தெரிவித்தார்கள். மத்திய அரசின் திட்டங்களால் மட்டுமல்லாமல், மாநில அரசின் திட்டங்களாலும் பயனடைந்தவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். ராஜ் ஸ்ரீ திட்டத்தின்கீழ், பெண்கள் சிறந்த கல்வி கற்று வருவதையும், பேலன்ஹர் திட்டத்தின்கீழ், பயனடைந்த குழந்தைகளையும் புனித யாத்திரை திட்டத்தின்கீழ், பயனடைந்த மூத்த குடிமக்களையும் பார்க்கும் போது அவர்களது கண்களில் தெரியும் பிரகாசத்தை யாராலும் மறந்துவிட முடியாது.  இதற்காக வசுந்தரா ஜீ-யை நான் பாராட்டுகிறேன்.

     பாரதீய ஜனதா கட்சியின் பெயரைக் குறிப்பிடும் போது ஒரு பிரிவினருக்கு தூக்கம் போய்விடுகிறது என்பது உண்மையே. மோடி ஜீ, அல்லது வசுந்தரா ஜீ-யின் பெயரைக் கேட்கும் போது, அவர்களுக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது. அவர்கள் இத்தகைய திட்டங்களை வெறுக்கிறார்கள். இருப்பினும், பயனாளிகள் மேலே கூறுவதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பை பெற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த சாதாரண மக்கள் இந்தத் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், அதை எப்படிப் பெற்று பயனடைவது என்பதை அறியவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. ஒருவகையில், இத்திட்டங்கள் வெறும் காகிதத்துடன் மட்டும் நின்றுவிடாமல், சாதாரண மக்களை  அடைந்துள்ளது.  இதன் காரணமாக அரசு இயந்திரத்தின் மீது ஒரு நெருக்குதல் உருவாக்கப்பட்டுள்ளது.  பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு, அதிகாரிகளை துரிதமாக செயல்பட வைத்துள்ளது.  இதனால்தான் அரசு விளம்பரப்படுத்தியதைவிட அதிகப் பயன்களை பயனாளிகள் பெற முடிந்துள்ளது. பயனாளிகள் இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டும்.  அப்போதுதான், பிற்பகுதியில் உள்ளவர்கள் முன்னணிக்கு வரமுடியும்.

     நண்பர்களே,

     கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசு, ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவு மக்கள், தலித்துகள், பழங்குடியினர், விவசாயிகள், தாய்மார்கள், பெண்கள் ஆகியோர்கள் மீதுதான் கவனம் செலுத்தி வருகிறது.  நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்பட்டு வருகிறது.  இந்த மண்ணின் மைந்தரும், எனது சகாவுமான கஜேந்திர சிங் ஷெகாவத், விவசாயத்துறையை முன்னேற்றுவதற்கு பாடுபட்டு வருகிறார்.  மண் சுகாதார அட்டை வழங்கும் திட்டம் ராஜஸ்தானின் சூரஜ் காத்தில் தொடங்கப்பட்டது என்பதை நான் நினைவில் வைத்திருக்கிறேன்.  அந்த நேரம் 14 கோடி மண் சுகாதார அட்டைகளை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்தது.  இதுவரை நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு 14.50 கோடிக்கு மேல் இந்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதை அறிந்து வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.  ராஜஸ்தானில் மட்டும் சுமார் 90 லட்சம் விவசாயிகள் இந்த அட்டையைப் பெற்றுள்ளனர்.  இந்த அட்டைகள் மூலம் அறிவியல்பூர்வமான விவசாயம் எளிமையாகியுள்ளது. அதன் நேரடி தாக்கம் உற்பத்தியிலும் காணப்படுகிறது. நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த ஆண்டு உணவு உற்பத்தி பெருகியுள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

     நண்பர்களே,

     உற்பத்தி செலவைப் போல ஒன்றரை மடங்கு அதிகமாக பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை அறிவிக்கப்படும் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றியுள்ள நிலையில், இங்கு வந்திருப்பது பொருத்தமாக அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.  அந்த வகையில் ராஜஸ்தானில் முதல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இந்த ஆண்டு நீங்கள் சாகுபடி செய்யும்  சிறு தானியங்கள், சோளம் மற்றும் பயறு வகைகளுக்கு உற்பத்திச் செலவில் ஒன்றரை மடங்கு  விலையை நீங்கள் பெறுவீர்கள்.

     நண்பர்களே,

     ராஜஸ்தானின் விவசாயிகளுடன் இந்த விஷயம் குறித்து விரிவாக விவாதிக்க நான் விரும்புகிறேன். ஒரு குவிண்டால் சிறுதானியத்தை விளைவிக்க ஆகும் உற்பத்தி செலவு சுமார் ரூ.990 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது அரசு குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.1,950 ஆக உயர்த்தியுள்ளது. செலவைவிட இருமடங்கு விலை அதிகம் என்பது இதன் பொருள்.  இதுபோல, மக்காச் சோளத்தின் உற்பத்தி செலவு ரூ.1,620. குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,430. தானிய விளைச்சலுக்கு ஆகும் செலவு குவிண்டாலுக்கு ரூ.1,130 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.  இதற்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  பச்சை பயறு உற்பத்திச் செலவு ரூ.4.650 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.  இதற்கான விலை ரூ.7,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, சோயாபீன்ஸ், நெல் ஆகியவற்றுக்கும் உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயித்துள்ளது.  இதுமட்டுமல்ல, விவசாய உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில், மாநில அரசுகளுடன் தொடர்ந்து மத்திய அரசு தொடர்பு கொண்டு வருகிறது. விவசாயி சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் மதிப்பளிக்கப்படும் என்று வசுந்தரா ஜீ-யின் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.  இம்முறை சுமார் ரூ.11,500 கோடி அளவுக்கு விவசாயிகள் விளைவித்த பொருட்களை அரசு கொள்முதல் செய்துள்ளதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.

     நண்பர்களே,

     விதைப்பிலிருந்து உற்பத்திப் பொருளை சந்தைக்கு கொண்டு செல்வது வரை அனைத்து வகையிலான நடைமுறையையும் எப்படி சிறப்பாக செயல்படுத்துவது என அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்காக வகுக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் வசுந்தரா ஜீ அரசு இயன்றவரையில் முனைப்புக் காட்டி வருகிறது.  பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தின்கீழ், இந்த மாநிலத்தில் இதுவரை ரூ.2,500 கோடி விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே, ஏற்கெனவே இருந்த முறைகளில் இருந்து வெளியே வந்து ஏராளமான ஏழை, எளிய மக்களின் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் பாதையை பிஜேபி அரசுகள் பின்பற்றி வருகின்றன. இதன் விளைவுகள் தெளிவாக தெரிகின்றன. கடந்த இரண்டாண்டுகளில் வறுமை எனும் விஷச் சக்கரத்தில் இருந்து இந்தியாவில் சுமார் ஐந்து கோடி மக்கள் விடுபட்டிருப்பதாக உலக அளவில் புகழ்பெற்ற அமைப்பு ஒன்று அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐந்து கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். வறுமையிலிருந்து விடுபடுவதற்கான காரணத்தின் பின்னால் தெளிவான நோக்கமும் முறையான வளர்ச்சியும் உள்ளன. நாட்டில் உள்ள 125 கோடி மக்களிடமிருந்து அரசுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இந்த ஆதரவின் காரணமாகத்தான் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ராஜஸ்தானில் சுமார் 80 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் நாட்டில் உள்ள ஏழை மக்கள்  ஜன்தன் திட்டத்தின் கீழ் மொத்தம் 32 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தானில் இது 2.5 கோடிக்கும் அதிகமாக உள்ளது. பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் ஏழைகளுக்கு கிடைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. ஏற்கெனவே இருந்த திட்டங்களும்கூட முடிக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 90 பைசா மற்றும் மாதத்திற்கு ஒரு ரூபாய் பிரீமியம் செலுத்தும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.

நண்பர்களே,

முத்ரா திட்டத்தின்கீழ் உத்தரவாதம் ஏதுமின்றி ராஜஸ்தானில் 44 லட்சத்திற்கும் அதிகமான தொழில் முனைவோருக்கு வங்கிக்கடன் கிடைத்துள்ளது. இதற்கும் கூடுதலாக வெறும் ஓராண்டு காலத்தில்  சவுபாக்யா  திட்டத்தின் கீழ், ராஜஸ்தானில் சுமார் 3 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு கட்டணமில்லாத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. உஜ்ஜவாலா திட்டத்தின் கீழ், ராஜஸ்தானில் உள்ள 33 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் இலவச எரிவாயு இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. உஜ்ஜவாலா திட்டம் பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

சகோதர, சகோதரிகளே,

இந்தத் திட்டத்தில் பயனடைந்த தாய்மார்களோடும், சகோதரிகளோடும் பேசிக்கொண்டிருந்தபோது புதிய விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன். உஜ்ஜவாலா திட்டத்தினால், புகையிலிருந்து தாம் விடுதலைப் பெற்றிருப்பது மட்டுமின்றி, தண்ணீரும்கூட சேமிக்கப்பட்டுள்ளது என்று ஒரு சகோதரி கூறினார். தண்ணீர் சேமிக்கப்பட்டது எவ்வாறு எனில், சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதால் சமையலறை பாத்திரங்களில் கரி படிவதில்லை. இவ்வகையில் ராஜஸ்தான் தாய்மார்களுக்கு இந்தத் திட்டம் இரண்டு பயன்களைத் தந்துள்ளது.

நண்பர்களே,

ராஜஸ்தான் மக்கள் தண்ணீர் தேவையை எதிர்கொள்ள தங்களின்   அரிய நேரத்தின் ஒரு பகுதி செலவிடப்படுவதை நான் அறிவேன். இதற்கு வசுந்தரா அவர்களின் அரசு மெச்சத்தக்க முயற்சிகளை செய்து வருகிறது. முதலமைச்சரின் தற்சார்பு தண்ணீர் இயக்கம் போன்ற திட்டங்களின் கீழ் நகரங்களிலும், கிராமங்களிலும் ரூ.4,000 கோடிக்கும் அதிகம் மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. 12,500க்கும் அதிகமான கிராமங்களுக்கு பருகத்தக்க குடிநீர் விநியோக வசதி செய்யப்பட்டுள்ளது.

சகோதர, சகோதரிகளே,

பார்வதி, காளி சிந்த், சம்பல் இணைப்பு திட்டங்களைத் தேசிய திட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அரசும் பிஜேபி எம்எல்ஏக்களும் கோரியிருப்பதாக உங்களின் மனம் கவரும் முதலமைச்சர் என்னிடம் தெரிவித்தார். விரிவான திட்ட அறிக்கை நீர் வள அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், தொழில்நுட்ப ரீதியாக இந்தத் திட்டம் பரிசீலி்க்கப்பட்டு வருவதாகவும் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ராஜஸ்தானில் 2 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் பாசன வசதி பெறும். இதுமட்டுமின்றி, ஜெய்பூர், ஆல்வார், பரத்பூர், சவாய் மதோபூர், ஜலவாட், கோட்டா, புந்தி போன்ற 13 நகரங்களில் வாழும் ராஜஸ்தானில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு  இந்தத் திட்டம் குடிநீரும் வழங்கும்.

சகோதர, சகோதரிகளே,

மத்திய அரசு இந்தக் கோரிக்கையை ஆக்கப்பூர்வமாக பரிசீலிக்கும் என்று உங்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். ராஜஸ்தான் மேம்பாட்டிற்கு, மாநில விவசாயிகளுக்கு எளிதில் தண்ணீர் கிடைப்பதற்கு மாநில மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு முழுமையான உணர்வுடன் முடிவு எடுக்கப்படும்.

ஏழைகளுக்கு அதிகாரமளிக்க சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்றவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த முறை நான் ஜுன்ஜுனுக்கு வந்திருந்தபோது தேசிய ஊட்டச்சத்து இயக்கம் போன்ற பேராவல் உள்ள திட்டத்தை நான் அறிவித்தேன். தற்போது இந்தத் திட்டம் நாடு முழுவதும் தீவிரமான முறையில் அமலாக்கப்பட்டு வருகிறது. இதற்கும் கூடுதலாக சிறப்பு மருத்துவர்களின் மேற்பார்வையில் மகப்பேறு, தாய்களுக்கும், சேய்களுக்கும் நோய்த்தடுப்பு போன்றவற்றிற்கு ஊக்கம் அளித்ததன் விளைவாக பேறுகால இறப்பு விகிதமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்த வகையில் உங்களது முயற்சிகளின் விளைவு தற்போது கண்கூடாக தெரிகிறது. இதற்காக ராஜஸ்தான் தாய்மார்களையும், புதல்விகளையும், ராஜஸ்தான் அரசையும் சிறப்பாக நான் பாராட்டுகிறேன். பெண்குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம் என்ற திட்டத்தை ராஜஸ்தான் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.  ஏழை எளிய மக்கள் நோய்களால் பீடிக்கப்படுவதை கவனத்தில் கொண்டு ஆயுஷ்மான் பாரத் எனும் பெரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடுமையான நோய் பாதிக்கும் சுமார் 50 கோடி பேருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமில்லா சிகிச்சை அளிப்பது உறுதி செய்யப்படும். இந்தத் திட்டம் பற்றிய பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் இது தொடங்கப்படும்.

சகோதர, சகோதரிகளே,

பிஜேபி அரசுகளின் ஒவ்வொரு திட்டமும் நாட்டில் சமச்சீரான வளர்ச்சியையும், ஒவ்வொரு நபருக்கும், கவுரவமான, பாதுகாப்பான, சுயமரியாதை உள்ள வாழ்க்கை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும். தற்போது  முன் எப்போதும் இல்லாத மக்கள் இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய ஊரக சுயாட்சி இயக்கம் என்பது அதன் பெயர். ஊரக மேம்பாட்டிற்கு பல வகையான வழிமுறைகளைப் பரிசீலித்து புதிய சக்தியோடு இந்தப் பணி நடைபெற்று வருகிறது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வங்கிக் கணக்கு, ஒவ்வொரு வீட்டிற்கும் சமையல் எரிவாயு மற்றும் மின்சார இணைப்பு, ஒவ்வொருவருக்கும் நோய்த்தடுப்பு, ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு, ஒவ்வொரு வீட்டிலும் எல்இடி விளக்குகள் ஆகியவை இதில் உறுதி செய்யப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், வரும் ஆகஸ்ட் 15-ற்குள் ராஜஸ்தானின் 1,500 கிராமங்களுக்கு இவற்றின் முழுமையான பயன் கிடைக்கும்.

நண்பர்களே,

அது கிராமமாக இருக்கட்டும் அல்லது நகரமாக இருக்கட்டும் அனைவரும் இணைவோம், அனைவரும் வாழ்வோம் என்ற குறிக்கோளுடன் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் மேம்படுத்துவதற்கான பணி விரைவாக நடைபெற்று வருகிறது. நாட்டின் 100 பெரிய நகரங்களில் அதிவேகத்துடன் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் நமது ஜெய்பூர், உதய்பூர், கோட்டா, அஜ்மிர் ஆகியவையும் அடங்கும். சாலைகள், போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் மற்றும் நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்த நகரங்களின் பல பரிமாணங்களில் நவீனத்தை உருவாக்க ரூ.7,000 கோடிக்கும் அதிகமாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்களில் வெகு வேகமாக ராஜஸ்தான் அரசு பணியாற்றுகிறது.

நண்பர்களே,

இன்று நிறைவேற்றப்படும் திட்டங்களை இதற்கு முன்பும் இதே போல் நிறைவேற்றியிருக்க முடியும். இருப்பினும், முந்தைய அரசுகள் எந்த நோக்கத்தோடு பணியாற்றின என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். இதன் விளைவாகத்தான் மக்கள் இன்று காங்கிரஸ் கட்சியை பிணை வண்டி (பெய்ல் காடி) என்று மக்கள் அழைக்கத் தொடங்கி விட்டார்கள். அது காளைமாட்டு வண்டி அல்ல, வழக்குகளில் பிணை பெறுவதற்கான ஒரு உபாயம்,  ஏனென்றால் காங்கிரஸ் கட்சியின் பல உயர்நிலை அரசியல் வாதிகளும், பல முதலமைச்சர்களும் தற்போது பிணையில்தான் உள்ளனர். இருப்பினும், காங்கிரஸ் கலாச்சாரத்தை நிராகரித்து பிஜேபி ஆள்வதற்கு கட்டளையிட்டுள்ள உங்களின் நம்பிக்கையை வலுப்படுத்த பிஜேபி அரசுகள் அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறது. புதிய இந்தியாவை உருவாக்கும் உறுதியுடன் நாங்கள் முன்னோக்கிச் செல்கிறோம். 2022-ல் நாடு சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை பூர்த்தி செய்யவிருக்கிறது. ஆனால், அதற்கு முன்னால் ராஜஸ்தான் அமைப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் 70 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறது. புதிய ராஜஸ்தான் இல்லாமல் புதிய இந்தியாவை உருவாக்குவது சாத்தியமல்ல. இந்தச் சூழலில் தேச நிர்மாணத்திற்கும் ராஜஸ்தான் வளர்ச்சிக்கும் இம்மாநிலத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நண்பர்களே,

நாட்டிற்காக மிக உயர்ந்த தியாகம் செய்த பரம்வீர்சக்கரா விருதுபெற்ற ஷாஹீத் பீருசிங் செகாவத்-தின் பிறந்த நூற்றாண்டுவிழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. ஒரு சில நாட்களுக்குப்பின் அவரது தியாகத்தின் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. தனது வாழக்கையைத் தியாகம் செய்த அந்த மகத்தான மனிதருக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். இத்தகைய மாமனிதர்களின் துணிவு, வீரம், தேசபக்தி காரணமாகவே இன்று நமது நாடு நம்பிக்கையோடு உலகத்தை எதிர்கொள்ள முடிகிறது. இருப்பினும், நமது அரசியல் எதிர்ப்பாளர்கள் ராணுவத்தையும் விட்டு வைக்காதது துரதிர்ஷ்டமாகும். அரசுக்கு எதிராக அவர்கள் கேள்வி எழுப்புவது சரிதான். ஆனால், ராணுவத்தின் திறன் குறித்து கேள்வி எழுப்பும் பாவத்தையும் அவர்கள் செய்கிறார்கள். முன் எப்போதும் இது நடந்ததில்லை. இத்தகைய அரசில் நடத்துவோரை ராஜஸ்தான் மக்களும் நாட்டு மக்களும் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்.

நண்பர்களே,

பரம்பரை அரசியல் நடத்த விரும்பும் அவர்கள் அதை செய்யட்டும். ஆனால், பாதுகாப்பிலும், சுய மரியாதையிலும் நாட்டை உயர் நிலைக்கு கொண்டு செல்லும் நமது தீர்மானத்தில் மாற்றம் இருக்காது. நமது கொள்கைகள் வெளிப்படையானவை. பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த, “ஒரு பதவி – ஒரு ஓய்வூதியம்” என்ற பிரச்சினைக்கு இந்த அரசு தீர்வுகண்டிருப்பதற்கான காரணம் இதுதான்.

சகோதர, சகோதரிகளே,

நமது நாடு இன்று முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. புதிய திசையில் நமது பயணத்தை துவக்கி இருக்கிறோம். பல சிக்கலான இலக்குகள் எட்டப்பட்டுள்ளன. மேலும் பல புதிய இலக்குகளை நிர்ணயிக்க நாம் முன்னேறிச் செல்கிறோம். ஒவ்வொரு உறுதி மொழியையும், நிறைவேற்றுவதில் அரசு வெற்றி பெறும் என்று நான் முழு நம்பிக்கையோடு இருக்கிறேன். ஏனெனில் உங்களின் ஊக்கமான பங்களிப்புதான். இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்களுக்காக ராஜஸ்தான் மக்களுக்கு மீ்ண்டும் ஒருமுறை பாராட்டு தெரிவித்து எனது உரையை நான் நிறைவு செய்கிறேன்.

முழக்கமிடுவதில் நீங்கள் அனைவரும் தயவு செய்து என்னோடு இணையுங்கள்.

பாரத் மாதாகி ஜே (அன்னை இந்தியாவுக்கு வெற்றி)

 

பாரத் மாதாகி ஜே (அன்னை இந்தியாவுக்கு வெற்றி)

உங்களுக்கு மிக்க நன்றி.

 



(Release ID: 1539451) Visitor Counter : 330