நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

நாடாளுமன்றத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குவதையொட்டி, மத்திய அரசு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளது
2018 மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்கும் என திரு. நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்பதே இந்திய மக்களின் விருப்பம்; நாட்டு நலன் கருதியே அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு நாடியுள்ளது: திரு. அனந்த்குமார்

Posted On: 17 JUL 2018 2:21PM by PIB Chennai

24 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 18 அமர்வுகள் நடைபெறவுள்ளது

 

          நாடாளுமன்றத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குவதையொட்டி, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அனைத்து அரசியல் கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறினார்.  எனவே, நாட்டிற்கு நன்மை ஏற்படுத்தும் வகையில், மழைக்கால கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமானதாக்குவதற்கு உகந்த சூழலை  அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.  நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்கும் என நம்பிக்கைத் தெரிவித்த திரு. நரேந்திர மோடி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மேற்கொள்ளப்படும் என்று நம்பவுதாகவும் கூறியுள்ளார்.

     இந்தக் கூட்டத்தின் போது பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஏராளமான பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இரு அவைகளிலும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்துவதன் மூலம், இடையூறுகள் மற்றும் தேக்கநிலை ஏற்படாத வகையில், நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கட்சி வேறுபாடின்றி ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது.

     இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. அனந்த்குமார், நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட ஒத்துழைக்குமாறு அனைத்து கட்சிகளையும், குறிப்பாக எதிர்க்கட்சிகளை அரசு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார். “நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்பதே இந்திய மக்களின் விருப்பம்.  நாட்டு நலன் கருதியே அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு நாடியுள்ளது” என்றார். மழைக்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் விருப்பம் தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார். விதிமுறைகளின்படி எழுப்பப்படும் எந்தவொரு பிரச்சினை குறித்தும் அவையில் விவாதிக்க அரசு எப்போதும் தயாராக உள்ளது.  மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

     2018 ஜூலை 18, புதன்கிழமை அன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், அரசின் அலுவல்களைப் பொறுத்து, 2018 ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் என்று குறிப்பிட்ட திரு. அனந்த்குமார், 24 நாட்களில் 18 அமர்வுகள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரின் போது 2 நிதி மசோதாக்கள் உட்பட 48 மசோதாக்கள் அவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.  

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை காணவும். 

 

 

*****(Release ID: 1538862) Visitor Counter : 104