பிரதமர் அலுவலகம்

தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி நேரடி கலந்துரையாடுகிறார்

Posted On: 11 JUL 2018 5:50PM by PIB Chennai

தீனதயாள் அந்த்யோத்யா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் (DAY - NRLM) கீழ் பயனடைந்த சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள், தீனதயாள் உபாத்யாயா கிராம இளைஞர் திறன் திட்டம் (Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana) மற்றும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (Rural Self Employment Training Institutes) ஆகிய திட்டங்களின் மூலம் பலனடைந்தோருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணிக்கு விடியோ கான்பரன்ஸிங் மூலம் கலந்துரையாடுகிறார்.

 

இத்திட்டங்கள் குறித்தும், அவற்றின் மூலம் கிடைத்த பலன்கள், அவற்றினால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களிடமிருந்து நேரடியாக பலவற்றைப் பிரதமர் அறிந்துகொள்வதற்கும் நல்ல வாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்துரையாடல் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அத்துடன் தேசிய தகவல்தொடர்பு மையத்தின் (NIC) இணையத்தின் வழியாகக் காட்சிப் பதிவேற்றும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் நல அமைப்புகள், பிகாரிலிருந்து மது ஒழிப்பு இயக்கம், சோள உற்பத்தி மற்றும் சந்தைக் குழு, சத்தீஸ்கரைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளிகள், சஹி வணிக மையம், புளி உற்பத்தியாளர்கள், ஜார்க்கண்டின் மலிவு விலை சானிடரி நேப்கின் உற்பத்தித் தொழில்புரிவோர், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தீனதயாள் உபாத்யாயா கிராம இளைஞர் திறன் திட்டம் (Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana), சூரிய ஒளித் தகடுகளை சந்தைப்படுத்துவோர், ராஜஸ்தானிலிருந்து விளக்குகள் உற்பத்தி செய்வோர், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த  தீனதயாள் உபாத்யாயா கிராம இளைஞர் திறன் திட்டம் (Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana) போன்றவற்றின் பயனாளிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பர். அத்துடன், தெலுங்கானாவைச் சேர்ந்த சுய உதவிக் குழுக்கள், ஜம்மு காஷ்மீரின் பால் உற்பத்திக் குழுக்கள், குஜராத்திலிருந்து வேம்புப் பொருள் உற்பத்தியாளர்கள் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பர்.

 

பெண்களுக்கான அதிகாரமளித்தலில் தீனதயாள் அந்த்யோத்யா யோஜனாதேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் (DAY - NRLM) மிகப் பெரிய தளமாகத் திகழ்கிறது. நாட்டின் 29 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் உள்ள 600 மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள 4884 வட்டாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 45 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மொத்தம் 5 கோடிக்கு மேற்பட்ட  பெண்கள் கடந்த 2018, மே மாதம் திரட்டப்பட்டனர். இது தவிர, கூடுதலாக 2 லட்சத்து 48 ஆயிரம் கிராம அமைப்புகள், 20 ஆயிரம் தொகுப்பு நிலை கூட்டமைப்புகளும் (Cluster Level Federations) மேம்படுத்தப்பட்டுள்ளன.

 

                                                                                                                          *****



(Release ID: 1538419) Visitor Counter : 502