பிரதமர் அலுவலகம்

பிரதமரும் கொரிய அதிபரும் நொய்டாவில் செல்பேசி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தனர்

Posted On: 09 JUL 2018 6:13PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி கொரியக் குடியரசின்  அதிபர் திரு. மூன் ஜே-இன்-னும் இன்று (09.07.2018) நொய்டாவில் சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்  பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின்  பெரிய அளவு செல்பேசி உற்பத்தி தொழிற்சாலையை கூட்டாக தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இந்தியாவை உலக உற்பத்தி மையமாக உருவாக்கும் பயணத்தில் இந்த நிகழ்ச்சி சிறப்பான ஒன்று என்று வர்ணித்தார். சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு என்பது சாம்சங் நிறுவனத்தின் வர்த்தக தொடர்புகளை இந்தியாவுடன் வலுப்படுத்துவது மட்டுமின்றி இந்தியா-கொரியா இடையேயான உறவிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.

விரைவாகவும் வெளிப்படைத் தன்மையோடும் சேவை வழங்குவது உட்பட சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஸ்மார்ட் ஃபோன்கள், அகண்ட அலைவரிசை, டேட்டா இணைப்பு ஆகியவற்றின் விரிவாக்கம் என்பது இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியின் அறிகுறிகள் என்று அவர் கூறினார். இந்தச் சூழலில்  அரசின் இ-சந்தை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வளர்ச்சி, பீம் செயலி, ரூபே அட்டைகள் ஆகியவை பற்றியும் அவர் பேசினார்.

‘இந்தியாவில் உற்பத்தி’ என்ற முன்முயற்சி பொருளாதார கொள்கை நடவடிக்கை மட்டுமல்ல, தென்கொரியா போன்ற நட்பு நாடுகளுடன் சிறந்த உறவுகளைப் பேணுவதற்கும் ஆகும் என்று அவர் தெரிவித்தார். புதிய இந்தியாவின் வெளிப்படைத்தன்மையான வர்த்தக கலாச்சாரத்தின் பயனை எடுத்துக்கொள்ள விரும்புகின்ற உலகம் முழுவதும் உள்ள வர்த்தகர்களுக்கு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரமும் அதிகரித்து வரும் புதிய நடுத்தர வர்க்கமும் மிக அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன என்றார்.

உலக அளவில் செல்பேசிகள் தயாரிப்பில் இந்தியா தற்போது 2-ஆவது இடத்தில் உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த நான்காண்டு காலத்தில் செல்பேசி தயாரிப்பு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை வெறும் 2-லிருந்து 120ஆக அதிகரித்துள்ளது என்றார். இது லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது என்றும் அவர் கூறினார். கொரியாவின் தொழில்நுட்பம், இந்தியாவின் உற்பத்தி என்ற சேர்க்கையுடனான இந்த புதிய செல்பேசி தொழிற்சாலை மூலம் உலகத்திற்கு மிகச்சிறந்த மென்பொருள் ஆதரவு கிடைக்கும் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார். இதனை ஒரு பலம் என்று வர்ணித்த அவர், இரு நாடுகளின் தொலைநோக்கு திட்டங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

                                ----

 



(Release ID: 1538180) Visitor Counter : 160