நீர்வளத் துறை அமைச்சகம்

2018 அணைகள் பாதுகாப்பு மசோதா : அணைப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களைத் தரப்படுத்தி வலுப்படுத்துவதை நோக்கிய நடவடிக்கை

Posted On: 20 JUN 2018 11:55AM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் அணைகள் பாதுகாப்பு மசோதா 2018-ஐ தாக்கல் செய்யும் திட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் 13.06.2018 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அணைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரே சீரான, நாடு தழுவிய நடைமுறைகளை உருவாக்க உதவுவது இந்த மசோதாவின் நோக்கமாகும்.

நாட்டில் தற்போது 5254 பெரிய அணைகள் உள்ளன. 447 அணைகளில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இவைத் தவிர ஆயிரக்கணக்கான நடுத்தர மற்றும் சிறிய அணைகள் நாட்டில் உள்ளன.

இந்தியாவின் விரைவான நிலையான வேளாண் வளர்ச்சியையும், பொதுவான மேம்பாட்டையும் ஏற்படுத்துவதில் அணைகள் முக்கிய பங்காற்றுகின்றன. அணைப் பாதுகாப்பை உறுதி செய்ய நாட்டில் ஒரே சீரான சட்டம் மற்றும் நிர்வாக அமைப்பு தேவை என்று நீண்ட காலமாக உணரப்பட்டு வந்தது.

இந்தியாவில் உள்ள பெரிய அணைகளில் 75 சதவீதத்திற்கும் கூடுதலானவை 25 ஆண்டுப் பழமையானவை அல்லது அதற்கு மேற்பட்ட பழமையானவை. மேலும் 164 அணைகள் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்டவை. இந்த நிலையில் அணைப் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த காலங்களில் இந்தியாவில் 36 முறை அணைகளில் உடைப்புகள் உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. ராஜஸ்தானில் 11 முறையும், மத்தியப்பிரதேசத்தில் 10 முறையும், குஜராத்தில் 5 முறையும், மகாராஷ்டிராவில் 4 முறையும், ஆந்திரப்பிரதேசத்தில் 2 முறையும், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு, ஒடிசா ஆகியவற்றில் தலா 1 முறையும் இத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.

2018 அணைகள் பாதுகாப்பு மசோதா மத்திய, மாநில அரசுகள் சார்பில் அமைக்கப்படும் அணைப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும். நாடெங்கும் அணைப் பாதுகாப்பு நடைமுறைகளை தரப்படுத்துவதுடன் மேம்பட்ட நிலையில் இருப்பதையும் அது உறுதி செய்யும்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலை தளத்தைப் பார்க்கவும்.   

                                *******


(Release ID: 1536043)