பிரதமர் அலுவலகம்

பிரதமர் சாந்திநிகேதன் சென்றார், விஸ்வபாரதி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார், வங்காளதேச பவனை திறந்து வைத்தார்

Posted On: 25 MAY 2018 2:20PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (25.05.2018) மேற்கு வங்காளத்திலுள்ள சாந்தி நிகேதனுக்குச் சென்றார். சாந்தி நிகேதனில் பிரதமர், வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசினாவை வரவேற்றார். இரு தலைவர்களும் குருதேவ் ரவீந்திரநாத தாகூருக்கு அஞ்சலி செலுத்தினர். இருவரும் அங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் கையொப்பமிட்டனர். பிறகு இரு தலைவர்களும் விஸ்வபாரதி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஆளுகைக்கான ஜனநாயக முறையை, 125 கோடிக்கும் மேற்பட்ட மக்களை ஈர்த்த ஓர் ஒப்பற்ற ஆசிரியர் என்று வர்ணித்தார். குருதேவ் ரவீந்திர நாத தாகூரின் புனித மண்ணில் கற்றறிந்த பெருமக்களிடையே இருப்பது தமக்கு வாய்த்த நற்பேறு ஆகும் என்று அவர் கூறினார்.

இன்று பட்டம் பெற்ற மாணவர்களுக்குத் தமது வாழ்த்துகளைப் பிரதமர் தெரிவித்தார். இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் ஒரு பட்டத்தை மட்டும் பெறவில்லை, ஒரு மாபெரும் சகாப்தத்தின் வாரிசுகளாக அவர்கள் விளங்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த ஒட்டுமொத்த உலகத்தை ஒரு பறவைக் கூடாக அல்லது ஒரு வீடாக விவரிக்கும் வேதக் கல்வியானது விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் விழுமியங்களில் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை வரவேற்றுப் பேசுகையில், இந்தியாவும் வங்காளதேசமும் இரு நாடுகள் என்றாலும், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் அவற்றின் நலன்கள் பின்னிப் பிணைந்துள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

குருதேவ் ரவீந்திர நாத தாகூர் உலகெங்கும் பரவலாக மதிக்கப்படுகிறார் என்று பிரதமர் கூறினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தஜிகிஸ்தானில் ரவீந்திரநாத் தாகூரின் சிலையைத் திறந்துவைக்கும் வாய்ப்பு கிடைத்ததை அவர் நினைவுகூர்ந்தார். இன்றும் உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் தாகூர் ஆய்வு செய்யப்பட்டுவருகிறார் என்றார் பிரதமர். குருதேவ் ஓர் உலகக் குடிமகன் என்று அவர் புகழாரம் சூட்டினார்.

இந்திய மாணவர்கள் இந்தியத் தன்மையை உட்கொண்டவர்களாக இருந்தபோதும், அவர்கள் உலகெங்கும் நிகழும் வளர்ச்சியோடு தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று  குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் எப்போதும் விரும்பினார் என்று பிரதமர் கூறினார். விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அதனையொட்டியுள்ள கிராமங்களில் திறன் மேம்பாடு மற்றும் கல்வி ஆகிவற்றில் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். தன்னுடைய நூற்றாண்டான 2021 ஆம் ஆண்டில் இந்த முயற்சியை 100 கிராமங்களுக்கு விரிவுபடுத்த உள்ளதை பிரதமர் ஊக்கப்படுத்தினார். இந்த 100 கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி உழைக்குமாறு அவர் பல்கலைக்கழகத்தைக் கேட்டுக்கொண்டார்.

2022 ஆம் ஆண்டுவாக்கில் புதிய இந்தியாவை உருவாக்குவதில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றிவருகின்றன என்று பிரதமர் கூறினார். கல்வித்துறையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள முன்முயற்சிகளை அவர் விவரித்தார்.

வங்காளதேசப் பவனைத்  திறந்து வைத்துப் பேசிய பிரதமர், அது இந்தியாவுக்கும் வங்காளத் தேசத்திற்கும் இடையிலான கலாச்சாரப் பிணைப்பின் ஓர் குறியீடு என்று குறிப்பிட்டார்.

இந்தப் பல்கலைக்கழகமும் இந்தப் புனித மண்ணும் இந்தியா மற்றும் வங்காள தேசத்தின் விடுதலைப் போரைக் கண்ணுற்ற ஓர் வரலாற்றைக் கொண்டிருக்கிறது என்றார் அவர். இரு நாடுகளின் பாரம்பரியப் பகிர்வின் குறியீடாக அது விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவிலும் வங்காளத் தேசத்திலும் ஒருசேர மதிக்கப்படும் தலைவர் ஆவார் என்று அவர் கூறினார். அதைப்போல, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஸ்வாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி ஆகியோர் இந்தியாவைப் போலவே வங்காளதேசத்திலும் போற்றப்படுகின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு எப்படியோ அப்படியே வங்காளத் தேசத்திற்கும் ரவீந்திர நாத தாகூர் உரியவர் என்று அவர் கூறினார். உலகளாவிய மனிதாபிமானம் என்ற தாகூரின் கோட்பாடு ”அனைவருடனும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி”  என்ற மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் பிரதிபலிக்கிறது என்றார் பிரதமர். கொடுமைகள், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவும் வங்காளதேசமும் இணைந்து மேற்கொண்ட தீர்மானம், வங்காள பவனத்தின் மூலம் எதிர்காலத் தலைமுறையைத் தொடர்ந்து ஈர்க்கும் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு புது தில்லியில் வங்காளத் தேசத்தால் இந்திய ராணுவத்தினர் சிறப்பிக்கப்பட்டதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடந்த சில ஆண்டுகள் ஒரு பொற்காலமாகும் என்று பிரதமர் கூறினார். நில எல்லைப் பிரச்சினை மற்றும் பல்வேறு அது தொடர்பான திட்டங்கள் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

இரு நாடுகளும் ஒரே மாதிரியான இலக்குகளைக் கொண்டிருக்கின்றன என்றும் அந்த இலக்குகளை அடைய ஒரே விதமான பாதையை அவை மேற்கொண்டிருக்கின்றன என்றும் பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.



(Release ID: 1533519) Visitor Counter : 168