பிரதமர் அலுவலகம்

2018 மே 19ம் தேதி பிரதமர் ஜம்மு காஷ்மீர் பயணம்

Posted On: 18 MAY 2018 5:30PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக 2018 மே 19ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்கிறார். லேயில் நடைபெறும் 19 – குஷோக் பகுலா ரின்போச்சி பிறந்தநாள் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். இதே நிகழ்ச்சியில் சோஜிலா சுரங்கப் பணிகள் தொடங்குவதற்கான கல்வெட்டை அவர் திறந்து வைக்கிறார்.

14 கிலோ மீட்டர் நீள சோஜிலா சுரங்கப் பாதை இந்தியாவின் நீளமான சாலை சுரங்கப் பாதையாகவும் ஆசியாவின் நீளமான இருவழி சுரங்கப்பாதையாகவும் இருக்கும். தேசிய நெடுஞ்சாலை 1ஏவில் ஸ்ரீநகர் – லே பகுதியில் பால்டால் மற்றும் மீனாமார்க் இடையிலான இந்த சுரங்கப்பாதையைக் கட்டி, செயல்படுத்தி, பராமரிக்க பிரதமர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ரூ. 6800 கோடி செலவிலான இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுவது ஸ்ரீநகர், கார்கில் மற்றும் லே இடையே அனைத்து வானிலை சூழலிலும் இணைப்பை அளிக்கும். சோஜிலா பகுதியை கடப்பதற்கு தற்போது ஆகும் மூன்றரை மணி நேர பயணம் பதினைந்து நிமிடங்களாக குறையும். இது முழுமையான பொருளாதார மற்றும் சமூக கலாச்சார ஒருங்கிணைப்புக்கு உதவும். இதற்கு யுக்திபூர்வமாகவும் முக்கியத்துவம் உள்ளது.

ஸ்ரீநகர் ஷெர்-ஏ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் பிரதமர் 350 மெகா வாட் கிஷன்கங்கா நீர் மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஸ்ரீநகர் சுற்றுவட்டப் பாதைக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

ஜம்முவில் உள்ள ஜெனரல் ஜோரோவர் சிங் அரங்கத்தில் பகுல் துல் மின் திட்டத்திற்கும் ஜம்மு சுற்று வட்ட பாதைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அவர் தாராகோட் மார்க் மற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணவிதேவி கோயிலில் இழுவை ரயிலையும் தொடங்கி வைக்கிறார். பக்தர்கள் இந்த கோயிலுக்குச் செல்வதற்கு டாராகோட் மார்க் உதவிகரமாக இருக்கும்.

ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு சுற்றுவட்டப் பாதைகள் இந்த நகரங்களில் உள்ள போக்குவரது நெரிசலை குறைக்க உதவுவதுடன், சாலை வழி போக்குவரத்தை விரைவானதாகவும், பாதுகாப்பானதாகவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் ஆக்கும்.

ஜம்முவில் உள்ள வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஷெர்-ஏ-காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் கலந்து கொள்வார்.

***



(Release ID: 1532797) Visitor Counter : 321