மத்திய அமைச்சரவை
மத்தியப் பொது நிறுவனங்களின் வர்த்தக முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் நுணுக்கத்தை வலுப்படுத்த அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
16 MAY 2018 3:30PM by PIB Chennai
மத்தியப் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இடையே மற்றும் துறைகளுக்கு இடையே ஏற்படும் வர்த்தக முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் நுணுக்கத்தை பலப்படுத்துவதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது. செயலர்கள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு நீதிமன்றங்களுக்கு வெளியே பொது துறை நிறுவனங்களின் வர்த்தக முரண்பாடுகளுக்கு விரைவான தீர்வினை எட்டுவதற்கான நிறுவன நுணுக்கம் ஒன்றை இந்த முடிவு ஏற்படுத்தும்.
- இந்தப் புதிய இரண்டடுக்கு நுணுக்கம் நிரந்தர மத்தியஸ்த நுணுக்கத்திற்கு மாற்றாக ஏற்படுத்தப்படும். இது மத்திய அரசுப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையே மற்றும் துறைகளுக்கு இடையேயான வர்த்தக முரண்பாடுகளுக்கு (வருமான வரி, சுங்கம் ரயில்வே தொடர்பான பிரச்சனைகள் தவிர) நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணும்.
- முதல் அடுக்கில் இத்தகைய வர்த்தக விவகாரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் நிர்வாக அமைச்சகம்/துறைச் செயலர்கள் சட்ட விவகாரங்கள் துறை செயலர் கொண்ட குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும். சம்பந்தப்பட்ட நிர்வாக அமைச்சகம்/துறையின் நிதி ஆலோசகர்கள் குழுவின் முன்பாக தங்கள் முரண்பாடுகளை எடுத்துரைப்பார்கள். முரண்பாட்டை கொண்டுள்ள இரு தரப்பும் ஒரே அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்தால் குழுவில் அதன் செயலர், சட்ட விவகாரங்கள் துறை செயலர் மற்றும் பொது மக்கள் குறைபாடுகள் துறை செயலர் ஆகியோர் இருப்பார்கள்.
மேலும் மத்திய பொதுத் துறை நிறுவனத்திற்கும் மாநில அரசுக்கும் இடையே இந்த முரண்பாடு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சகம்/துறையின் செயலர், சட்ட விவகாரங்கள் துறைச் செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமைச் செயலர் நியமிக்கும் பிரதிநிதி ஆகியோர் இந்தக் குழுவில் இருப்பார்கள். இந்த நிலையில் இது குறித்து குழுவின் முன்னிலையில் மாநில அரசுத் துறையின் முதன்மைச் செயலர் முரண்பாடு பற்றி குறிப்பிடலாம்.
ஒருவேளை இந்த முரண்பாட்டுக்குத் தீர்வு ஏற்படாவிடில் இரண்டாவது கட்டத்தில் அந்த முரண்பாடு குறித்து அமைச்சரவை செயலரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அவரது முடிவு இறுதியானதாக இருக்கும்.
முரண்பாட்டுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வகையில் முதல் கட்ட்த்தில் மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்படும்.
பொது நிறுவனங்கள் துறை இதற்கான வழிகாட்டுதல்களை அனைத்து பொதுத் துறை நிறுவனங்களுக்கும் அனைத்து நிர்வாக அமைச்சகம்/துறை மற்றும் மாநில அரசு/யூனியன் பிரதேசங்கள் மூலம் அளிக்கும்.
இந்தப் புதிய நுணுக்கம் பரஸ்பர/இணைந்த முயற்சிகள் மூலம் வர்த்தக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் சமத்துவத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வழக்குகள் நீதிமன்றத்திற்கு செல்வதையும் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதையும் குறைக்கும்.
*****
(Release ID: 1532498)