ரெயில்வே அமைச்சகம்

சென்னை ரயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலை சர்வதேச ரயில் பெட்டிக் கண்காட்சியை நடத்துகிறது

Posted On: 16 MAY 2018 12:42PM by PIB Chennai

முதல் முறையாக சர்வதேச ரயில்பெட்டிக் கண்காட்சி சென்னையில் ஐ சி எஃப் – ஆர் பி எஃப் கவாத் மைதானத்தில் 2018 மே மாதம் 17 முதல் 19 வரை நடைபெறுகிறது.  இந்தக் கண்காட்சி ரயில்பெட்டிகள், ரயில்பெட்டித் தொடர்கள் ஆகியவை குறித்து முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்தக் கண்காட்சியில் உலகின் புகழ்பெற்ற ரயில்பெட்டி மற்றும் சாதனத் தொழிற்சாலைகள் தங்களது உற்பத்திப் பொருட்களையும், தொழில்நுட்பத்தையும் காட்சிப்படுத்துகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற கொள்கையுடன் ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு தொழில்நிறுவனங்களை  ஒரே குடையின் கீழ் கொண்டுவர இந்தக் கண்காட்சி ஒரு வாய்ப்பாகும்.

   ஐ சி எஃப் என்று அழைக்கப்படும் ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை இந்தக் கண்காட்சியை நடத்துகிறது. இந்திய தொழில்கள் இணையம் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் லிமிடெட் ஆகியனவும் ஒருங்கிணைந்து இந்தக் கண்காட்சிக்கு உதவுகின்றன. கண்காட்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • இந்தியாவில் முதல் முறையாக சிறப்பு ரயில்பெட்டிகளும். ரயில்பெட்டித் தொடர்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
  • 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் பங்கேற்பு
  • ரயில்பெட்டிகள், ரயில்வண்டித் தொடர்கள் குறித்த மாநாடுகள் /  கருத்தரங்குகள்
  • புதுமைப்படைப்பு மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் உற்பத்திப் பொருள்களை  ரயில்பெட்டி மற்றும் பெட்டித்தொடர் உற்பத்தியாளர்கள் காட்சிப்படுத்துவார்கள்.
  • ஐ சி எஃப் மற்றும் இந்திய ரயில்வே உற்பத்திப் பிரிவுகளின் உயர் அதிகாரிகள், மற்றும் முடிவுகள் மேற்கொள்வோருடன் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகள்.
  • 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில்வண்டித் தொடர்கள் சார்ந்த ரயில்பெட்டி வடிவமைப்பு காட்சிப்படுத்தப்படும்.
  • பெட்டிகளின் உள்பகுதி, பயணியர் வசதிகள், இதர சொகுசு அம்சங்கள் உள்ளிட்ட ரயில்பெட்டி வடிவமைப்புகள் காட்சியில் இடம் பெறும்.
  • துருப்பிடிக்காத எஃகு கொண்டு ரயில்பெட்டி உற்பத்தி தொழில்நுட்பம், அலுமினியம் ரயில்பெட்டி அமைப்பு உள்ளிட்டவற்றின் மேம்பாடு காட்சியாக இடம் பெறும்.
  • அதிவேக ரயில்கள் மேம்பாடு மற்றும் இந்திய ரயில்வேக்கு உள்ள வாய்ப்பு விருப்பங்கள்.

சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி நாளை (17.05.2018) காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்படும். பின்னர் 3 நாட்களுக்கு  காலை 10 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர், ரயில்வே துறை இணையமைச்சர், தமிழக தொழில்துறை அமைச்சர், ரயில்வே வாரியத்தலைவர், ரயில்வே வாரிய உறுப்பினர்கள், அனைத்து இந்திய ரயில்வேக்களின் பொது   மேலாளர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் பங்கேற்பார்கள்.

  ரயில் ஆர்வலர்கள், ரயில்வேக்கு பொருட்கள் வழங்குவோர், வடிவமைப்பாளர்கள், மேம்பாட்டாளர்கள்,  மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு இந்தக் கண்காட்சி ஆர்வம் அளிப்பதாக இருக்கும். இந்தக்கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக  நாளையும், நாளை மறுநாளும் (17&18.05.2018) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

-------

 



(Release ID: 1532252) Visitor Counter : 207