குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கவுதமாலா நகரம் நெருக்கடிகளிலும் பிரகாசிக்கும் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது: வெங்கையா நாயுடு
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAY 2018 8:53AM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, 2018 மே 8 அன்று கவுதமாலா நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆன்டிகுவா (பழைய) பகுதியை பார்வையிட்டு, 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ-வால் உலகப் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்ட இந்த நகரம் எவ்வாறு அதன் தொன்மை மாறாமல் பராமரிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொண்டார். பராமரிப்பு முறைகள் குறித்தும், அந்த நகரத்தின் மேயர் திருமதி. சூசனா ஹெய்டி ஆசன்சியோ லியுக் மற்றும் அதிகாரிகளிடம் அவர் விரிவாக கேட்டறிந்தார். 16 ஆம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த இந்த நகரின் தொன்மை மற்றும் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கப்படுவது குறித்து வியந்த திரு. வெங்கையா நாயுடு, இது நெருக்கடிகளிலும் பிரகாசிக்கும் வாழ்க்கையைப் போல உள்ளது என்றார்.
ஸ்பானிஷ் ஆட்சியாளர்கள் 1524-ல் கவுதமாலா மீது படையெடுத்த பின், அவர்கள் உருவாக்கிய மூன்றாவது தலைநகரம், ஆன்டிகுவா கவுதமாலா ஆகும். முதலில் அமைக்கப்பட்ட இரண்டு தலைநகரங்கள் 1541 ஆம் ஆண்டு, முறையே, உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக கைவிடப்பட்டன. பழைய கவுதமாலா 1565 முதல் தொடர்ந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டதுடன் 1773 ஆம் ஆண்டு ஏற்பட்ட சான்டா மார்தா நிலநடுக்கத்தால் உருக்குலைந்துப் போனதால், தற்போதைய கவுதமாலா நகரத்திற்கு தலைநகரை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆன்டிகுவா கவுதமாலா நகர்மன்ற கூட்டத்தில் பேசிய திரு. வெங்கையா நாயுடு, கவுதமாலாவின் மாயன் நாகரீகம் மற்றும் இந்தியாவின் சிந்து சமவெளி நாகரீகத்தை சுட்டிக் காட்டியதுடன், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டிய திகழும் வகையில், கலாச்சார செழுமையின் மூலத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். அகமதாபாத் நகரமும் உலகப் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய அவர், இரண்டு பாரம்பரிய நகரங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இருதரப்புக்கும் பயனளிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
(வெளியீட்டு அடையாள எண்: 1531673)
வருகையாளர் எண்ணிக்கை : 180