தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
திரு சிதான்ஷு கர் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனராக பதவியேற்றார்
Posted On:
01 MAY 2018 8:18PM by PIB Chennai
1983 ஆம் ஆண்டு இந்திய தகவல் பணிகள் அதிகாரியான திரு சிதான்ஷு ரஞ்சன் கர் மத்திய அரசின் 27-வது முதன்மை தகவல் தொடர்பு அதிகாரி மற்றும் புதுதில்லி, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனராக இன்று (01.05.2018) பதவியேற்றார்.
இந்தப் பதவியை வகித்து வந்த திரு ஃபிராங்க் நரோனா நேற்று (30.04.2018) பதவியிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, திரு கர் பதவியேற்றார்.
திரு கர், சுமார் 35 ஆண்டுகளாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு ஊடகப் பிரிவுகளில் முக்கியப் பதவிகளில் பணியாற்றியவர்.
புதுதில்லி இந்திய பொதுமக்கள் தகவல் தொடர்பு நிறுவனத்தில் பூர்வாங்கப் பயிற்சியையும், முசூரி, லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனத்தில் அடிப்படைப் பயிற்சியையும் நிறைவு செய்த திரு கர், அகில இந்திய வானொலியின் செய்திச் சேவைகள் பிரிவில் பணியில் சேர்ந்தார். சிறிது காலத்திற்கு பிறகு தூர்தர்ஷன் செய்திப் பிரிவில் அவர் சேர்ந்தார். சுமார் 17 ஆண்டுகள் இந்தப் பிரிவில் பணியாற்றி அதன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்தார். 1988 ஆம் ஆண்டு உலகளாவிய போட்டிக்கு இடையே லண்டன் விஸ்நியூஸ் நிறுவனத்தின் பெருமைமிகு ஃபெலோஷிப் விருதை வென்றார். இதனைத் தொடர்ந்து உலகின் முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களில் தொலைக்காட்சி செய்தி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பங்களில் நேரடி அனுபவம் பெறுவதற்காக ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகியவற்றில் பயணம் மேற்கொண்டார்.
திரு கர், 2003 ஆம் ஆண்டு பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது சுற்றுச்சூழல் மற்றும் வனம், ஊரக மேம்பாடு, மனித வள மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் விண்வெளி போன்ற முக்கிய அமைச்சகங்களின் செய்தி விளம்பரத்திற்கு முக்கிய பங்காற்றினார். பின்னர் 2005 ஆகஸ்ட் மாதம் பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை தகவல் தொடர்பு அதிகாரியாக பொதுமக்கள் தொடர்பு இயக்ககத்தில் பணியில் சேர்ந்தார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் மிக அதிக காலம் பணிபுரிந்த செய்தித் தொடர்பாளர் என்ற பெருமை திரு கர்-க்கு உண்டு.
2015 டிசம்பரில், அகில இந்திய வானொலியின் செய்திச் சேவைகள் பிரிவில் தலைமை இயக்குனராக அவர் பொறுப்பேற்றார்.
திரு கர், புவனேஷ்வர் பிஜேபி (BJB) கல்லூரியில் மானுடவியல் பிரிவில் பட்டம் பெற்றவர். உத்கல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிப்பில் ஹானர்ஸில் தேறி முதலிடத்தைப் பெற்றார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் பட்டமேற்படிப்பு பட்டத்தையும், சீன மற்றும் ஜப்பானிய ஆய்வுப் பிரிவு எம்ஃபீல் பட்டத்தையும் பெற்றவர் அவர்.
(Release ID: 1530916)
Visitor Counter : 209