உள்துறை அமைச்சகம்

தீவு மேம்பாட்டு முகமையுடன் 3வது கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்

அந்தமான் & நிகோபார் மற்றும் லட்சத்தீவுகளில் உள்ள 26 தீவுகளுக்கான வளர்ச்சித்திட்டங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது.
பல்வேறு திட்டப்பணிகளுக்கு ரூ 650 கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாவை ஊக்கப்படுத்த வரையறுக்கப்பட்ட பகுதிகள் தளர்த்தப்படும்

Posted On: 24 APR 2018 3:55PM by PIB Chennai

தீவு வளர்ச்சி முகமையின் 3-வது கூட்டம் தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட தீவுகளில் (அந்தமான் நிகோபார் தீவில் உள்ள ஸ்மித், ராஸ், லாங், ஆவிஸ் ஆகிய நான்கு தீவுகள் மற்றும் லட்சத்தீவில் மினிக்காய், பங்காராம், தின்னகாரா, செரியம், சுஹேலி ஆகிய ஐந்து தீவுகள்) வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தின் முன்னேற்றம் குறித்துத் தீவுகள் வளர்ச்சி முகமை ஆய்வு மேற்கொண்டது.

அந்தமான் – நிக்கோபாரில் கூடுதலாக 12 தீவுகள் / இடங்கள் (வடக்குக் கடவுப்பாதை, சிங்க், இங்லிஷ், வைப்பர், நீல் (பரத்பூர் கடற்கரை) ராம்நகர் கடற்கரை, கர்மாதங் கடற்கரை, தானிநல்லா கடற்கரை, காலிப்பூர் கடற்கரை, ரட்லேண்ட், வடக்கு வளைகுடா மற்றும் கிரேட் நிகோபார்-பி குவாரி) மற்றும் லட்சத்தீவில் ஐந்து தீவுகள் (கல்பேனி, கடமத், அகட்டி, செட்லட் மற்றும் பித்ரா) நித்தி ஆயோக் அமைப்பால் அடையாளம் காணப்பட்டு, யூனியன் பிரதேச நிர்வாகத்தைக் கலந்தாலோசித்து, தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சமுதாயம் சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிப்பது, தீவுப்பகுதி மக்களுக்குப் பயனளிப்பதாக அமையும்.

படகுத்துறைகள் / இறங்குதளங்கள் அமைப்பது, கப்பல்கள் வந்துசெல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது, அந்தமான் டிரங்க் சாலையில் பாலங்கள் அமைப்பது, திக்லிப்பூர் விமானநிலைய மேம்பாடு, மினிக்காய் விமானநிலைய கட்டுமானம், கவரட்டியில் தற்போதுள்ள படகுத்துறையை நவீனப்படுத்துவது, அந்தமான் நிகோபார் தீவுகளில் செயற்கைக்கோள் அலைவரிசையை 1.118 ஜிபிபிஎஸ்-சிலிருந்து 2.118 ஜிபிபிஎஸ்-ஆக அதிகரிப்பது, தீவுப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஹெலிகாப்டர் சேவைகளைத் தொடங்குவது போன்ற அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அந்தமான் & நிகோபார் மற்றும் லட்சத்தீவுகளில் 18 திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 7 திட்டங்கள் அரசு, தனியார் பங்களிப்புடன் தொடங்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் நிறைவடையும்போது தனியார் துறைமூலம் ரூ.650 கோடி முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது தொடர்பான முதலீட்டாளர் மாநாடு ஒன்றும் 2018 மே மாதம் நடைபெறவுள்ளதாக அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.


(Release ID: 1530062) Visitor Counter : 161
Read this release in: English , Hindi , Malayalam