பிரதமர் அலுவலகம்

பஞ்சாயத்து ராஜ் தினமான நாளை, மத்திய பிரதேசம் செல்லும் பிரதமர், தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்

Posted On: 23 APR 2018 5:24PM by PIB Chennai

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24 அன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லா செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தை (ராஷ்ட்ரீய கிராமின் ஸ்வராஜ் அபியான்) தொடங்கி வைக்கும் பிரதமர், மாண்ட்லாவிலிருந்தே நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளுடன் உரையாற்றுகிறார்.

அடுத்த 5 ஆண்டுகளில் பழங்குடியினரின் ஒட்டு மொத்த மேம்பாட்டுக்கான செயல் திட்டத்தையும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் வெளியிடுகிறார். மாண்ட்லா மாவட்டம், மானேரியில், இந்திய ஆயில் நிறுவனத்தின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைக்கு அடிக்கல் நாட்டுவதன் அடையாளமாக பெயர்ப் பலகை ஒன்றையும் அவர் திறந்து வைக்கிறார். உள்ளாட்சி தகவல் தொடர்பு விவர குறிப்பேட்டையும் பிரதமர் வெளியிடுகிறார்.

தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் மின்மயமாக்கப்பட்ட இந்தியாவை உருவாக்குவதென்ற அரசின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில், 100 சதவீத புகையில்லா அடுப்பு, இந்திர தனுஷ் இயக்கத்தின் கீழ் 100 சதவீத தடுப்பூசி போடப்பட்ட மற்றும் சவுபாக்யா திட்டத்தின் கீழ் 100 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்ட கிராமங்களின் ஊராட்சித் தலைவர்களையும் பிரதமர் கவுரவிக்க உள்ளார்.

சர்வஸ்ரேஷ்டா பஞ்சாயத்து விருது திட்டத்தின் கீழ் வெற்றிப் பெற்ற தேசிய மின் பஞ்சாயத்து விருது, மற்றும் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு விருது பெறுவோர் இந்த நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட உள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மாற்றத்தை விரும்பும் மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் பிரதமர் கலந்துரையாட உள்ளார்.
 

****

 



(Release ID: 1530003) Visitor Counter : 199