பிரதமர் அலுவலகம்

சுவீடனில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 17 APR 2018 11:59PM by PIB Chennai

எனது நண்பர், மாண்புமிகு சுவீடன் பிரதமர் திரு. லோஃவென் அவர்களே,

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உற்சாகம் கொண்ட எனது நண்பர்களே,

மாலை வணக்கம்!

எனது அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் வணக்கம்.

சுவீடனுக்கு வருகை புரிந்துள்ள எனக்கும் என்னுடன் வந்துள்ள பிரதிநிதிகளுக்கும்  வரவேற்பு அளித்த சுவீடன் நாட்டு மக்கள் மற்றும் அரசுக்கு, குறிப்பாக மாட்சிமை பொருந்திய சுவீடன் மன்னருக்கும் சுவீடன் நாட்டின் பிரதமர் திரு. லோஃவென் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. லோஃவென் உரையில் கூறிய இதமான வார்த்தைகள் எனது இதயத்தை வருடியது. நேற்று இரவு என்னை வரவேற்க அவர் விமானநிலையத்திற்கு வருகை புரிந்திருந்தார். அவர் நான் தங்கிய விடுதியில் என்னைக் கொண்டு வந்து விடவும் செய்தார்.

அவரது இந்தச் செயல்பாடு மற்றும் கவுரவம் எனக்கு மட்டுமானதன்று. அது உங்களுக்கும் 125 கோடி இந்தியர்களுக்குமானதாகும். இதே உணர்வைச் சிந்தையில் கொண்டு அவர் 2016 ஆம் ஆண்டு 'மேக் இன் இந்தியா' நிகழ்ச்சியிலும் கடந்த ஆண்டு சுவீடனில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இந்தியா மீதும் சுவீடனில் வாழும் இந்தியர்கள் மீதும் அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மரியாதை செலுத்தும் வகையில் சுவீடன் நாட்டின் பிரதமருக்கு நீங்கள் அனைவரும் எழுந்து நின்று உங்களது பாராட்டுக்களைத் தெரிவிக்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே,

உங்களது புதுமை படைக்கும் திறன்கள், தொழில்முறை அணுகுமுறை, கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய மதிப்புகளின் மூலம் நீங்கள் உங்களுக்கான ஓரிடத்தை உருவாக்கி வைத்துள்ளீர்கள். இந்தியாவுக்கு வெளியே வாழும் சூழலிலும் நீங்கள் அனைவரும் இந்தியாவின் ஆன்மாவையும் இந்திய மதிப்புக்களையும் உயிரோட்டத்துடன் வைத்திருப்பதற்காக உங்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

நீங்கள் எல்லோரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் மராத்தி எனப் பல்வேறு மொழிகளைப் பேசுகிறீர்கள். இந்தியாவில் சுமார் 100 மொழிகள் மற்றும் 1,700 பேச்சு வழக்குகள் உள்ளன. ஒட்டுமொத்தப் பட்டியலையும் நான் குறிப்பிடத் தொடங்கினால் நாளை காலை வரை கூட எனது பேச்சை முடித்துக் கொள்ள முடியாது.

மொழிகள், நிலைகள் அல்லது சூழ்நிலைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டதாக இருந்தாலும் இந்தியனாக இருப்பதில் உள்ள பெருமித உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கிறது.

இந்த உணர்வுதான் அனைவரையும் ஒன்றிணைத்து வெவ்வேறு தருணங்களில் நாம் மற்றவருடன் இணைந்திருப்பதற்கான ஊக்கத்தை அளித்து நமக்குப் புதிய சக்தியையும் புதிய உறுதிப்பாட்டையும் அளிக்கிறது.

இந்த உணர்வுதான் 'வந்தே மாதரம்' மற்றும் 'பாரத் மாதா கி ஜெய்' என்ற சொற்கள் நம் காதில் விழும்போதெல்லாம். மரியாதை செலுத்தும் விதமாக நம் அனைவரையும் எழுந்து நிற்பதற்கான ஊக்கத்தை நமக்கு அளிக்கிறது.

மேரி கோம் மற்றும் சாய்னா நேவால் போன்று இந்தியர்கள் வெற்றி பெற்று சாதனை படைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு இந்தியனையும் இந்த உணர்வுதான் பெருமிதமடையச் செய்கிறது.

நண்பர்களே,

இன்றைய தினம் நாடு மாபெரும் மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் நல்வாழ்வு மற்றும் சுயநம்பிக்கைக்கான புதிய உயரங்களுக்கு இந்தியாவைக் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. 'அனைவரும் இணைவோம் அனைவருக்கும் வளர்வோம்' என்ற நிலையை அடைவதற்கான இதுவரை இல்லாத அளவுக்குப் பொறுப்பை இந்தியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நமக்கு அளித்துள்ளனர். இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் 2022ம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் வளர்ந்த இந்தியாவை உருவாக்க, கடந்த நான்காண்டுகளில் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நாம் உறுதி எடுத்துக்கொண்டுள்ளோம்.

அதே நேரத்தில் இந்தியத்துவம் மற்றும் இந்தியாவின் வளமான பாரம்பரியத்திற்கு உலகளாவிய அளவில் மரியாதையை நாங்கள் உயர்த்தியுள்ளோம். சர்வதேச யோகா தினம், ஆயுர்வேதம், பழமைவாய்ந்த கண்ணோட்டமான உலகமே ஒரு குடும்பம் எனப்படும் வசுதைவ குடும்பகம், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான சமநிலை போன்றவற்றில் எங்களது முயற்சிகளும் உங்களது ஒத்துழைப்பும் இணைந்து உலகளாவிய மேடையில் இந்தியாவைச் 'சிந்தனைத் தலைவராக' நிலைநாட்டியுள்ளது.

நண்பர்களே,

மேலும், ஆப்பிரிக்கா போன்ற பகுதிகள், பசிபிக்கின் சிறிய தீவு நாடுகள், ஆசியான், ஐரோப்பா அல்லது ஆசியா இன்று இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாகவும், நம்பத்தகுந்த நண்பராகவும் கருதுகின்றன.

இலங்கையின் வெள்ளமாக இருந்தாலும், நேபாளத்தின் நிலநடுக்கமாக இருந்தாலும் இக்கட்டான தருணங்களில் இந்தியா மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டிருக்கிறது. ஏமன் போரின்போது நாங்கள் 4,000 இந்தியர்களை மட்டும் மீட்கவில்லை 2,000 வெளிநாட்டினரையும் மீட்டோம்.

கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் இதுபோன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டதால், இந்தியா மீதான உலகின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

ஒருசில நாட்களுக்கு முன், தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேசச் சூரியசக்திக் கூட்டமைப்பு உச்சி மாநாட்டை நீங்கள் கவனித்திருக்கக்கூடும். பசுமையான பூமிக்காக இந்தியா மேற்கொண்ட இந்த முனைப்பான முன்முயற்சியில் மிகக் குறுகிய காலத்தில் 60க்கும் அதிகமான நாடுகள் இணைந்தன.

ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பு, ஆஸ்திரேலியக் குழு, வாசெனார் ஏற்பாடு ஆகியவற்றில் இந்தியா உறுப்பினராகியிருப்பது சர்வதேசச் சமூகத்தின் மீதான இந்தியாவின் தாக்கத்திற்கும், ஏற்புடைமைக்கும் அடையாளமாகும்.

நண்பர்களே,

     நமது தொழில்நுட்பத் திறமைகளை உலகமே பாராட்டுகிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டம் உலகின் ஐந்து பெரிய ஆய்வுத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் விண்வெளித்திட்டம் உயர்ந்த தரமிக்கது மட்டுமல்ல, குறைந்த செலவிலானதும் ஆகும். விண்வெளித் திட்டங்களைக் கொண்டிராத உலகின் மற்ற பல நாடுகளின் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக நாங்கள் ஏன் இருக்கிறோம் என்பதற்கு இதுவே காரணமாகும். கடந்த ஆண்டு நாங்கள் தெற்காசியச் செயற்கைக்கோளை செலுத்தினோம். அது, எங்களின் அண்டை நாடுகளால் பயன்படுத்தப்படுகின்றன.

நண்பர்களே,

     பொறுப்புத்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் நாட்டுக்குள் உறுதிசெய்ய தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். டிஜிட்டல் கட்டமைப்பின் உதவியுடன் அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையேயான செயல்பாடு முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது. அரசை அணுகுவது என்பது மிகப் பெரிய காரியமாக இல்லாமல், அதுவோர் இயல்பான நடைமுறையாக இப்போது மாறியிருக்கிறது. சாமானிய மனிதர் தற்போது அரசாங்கத்துடன்  நேரடியாகத் தொடர்புகொண்டு விவாதிக்க முடிகிறது. அரசின் பழமையான வேலைமுறை முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது. கோப்புகள் குவிந்துகிடப்பதில்லை. நிறுத்திவைக்கப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பதற்குத் தற்போது கவனம் செலுத்தப்படுகிறது.

     தற்போது வர்த்தகத்தைத் தொடங்குவதும், நடத்துவதும் இந்தியாவில் மிக எளிதாகியிருக்கிறது. வர்த்தகத்தை எளிதாகச் செய்யும் மிகச் சிறந்த 100 நாடுகளில் இந்தியா முதன்முறையாக     42-வது நிலைக்கு முன்னேறியுள்ளது.

     ஜிஎஸ்டி மூலம் நாட்டின் மறைமுக வரிவிதிப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்கச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்திருப்பது, தற்போது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது. நாட்டின் வரி அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ச்சி ஏற்பட்டது. ஏற்கெனவே வர்த்தகர்கள் சந்தித்துக்கொண்டிருந்த பல்வேறு வகைகளிலான சோதனைகள் மற்றும் தடைகளிலிருந்து அவர்கள் தற்போது விடுபட்டுள்ளனர்.

     சமூக நலனுக்காகப் பொதுமக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு, ஆதார், கைபேசிகள் (ஜேஏஎம்-JAM) எனும் மூன்று பெரும் திட்டங்களின் இணைவு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மூன்று பெரும் திட்டங்களின் உதவியுடன் பயனாளிகளுக்கு நேரடிப் பணப்பரிமாற்றம் என்ற முறை உருவாக்கப்பட்டுள்ளது.

     நலத்திட்டங்கள் தேவைப்படுவோருக்கு நேரடியாகப் பலன்களை இது அளிக்கிறது.  பிறந்தே இருக்காத மகள்களின் பெயர்கள் எனச் சொல்லி, முறைகேடான அடையாளச்சான்றுகளைப் பயன்படுத்திய காலம் ஒன்று இருந்தது. இந்த முறைகேடான அடையாளச் சான்றுகளைக் காட்டி, பிறக்காத மகள்களை விதவைகள் என்று சித்திரிக்கவும் இந்த அடையாளச்சான்றுகள் பயன்படுத்தப்பட்டன. அவர்களின் பெயரால் விதவைகளுக்கான ஓய்வூதியங்களும் பெறப்பட்டன. இருப்பினும், தற்போது நிலைமை வேறாக இருக்கிறது. உண்மையிலேயே தகுதியுள்ள ஏழைகள் பணத்தைப் பெற்று வருகிறார்கள். போலியான பயனாளிகள் நீக்கப்பட்டதற்குப் பின், தவறான கைகளுக்குச் சென்று கொண்டிருந்த 12 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான அதாவது சுமார் 83 ஆயிரம் கோடி ரூபாய் இந்த ஒரேயொரு திட்டத்தின் மூலம் சேமிக்கப்பட்டுள்ளது என்பதை அறியும்போது, நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

நண்பர்களே,

வறுமையை ஒழிப்பது பற்றி வெறுமனே பேசுகின்ற பழைய கலாச்சாரத்திலிருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். வறுமை ஒழிப்புக்குக் கருவியாக ‘அதிகாரமளித்தல்’ என்பதை உருவாக்கியுள்ளோம்.

சமூகத்தின் நலிந்த பிரிவு மக்களுக்கும், பெண்களுக்கும் அதிகாரம் அளிப்பதன்மூலம் ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்ற மந்திரம் தற்போது எதார்த்தமாகி வருகிறது.

உஜ்வாலா திட்டத்தின்கீழ், நாடுமுழுவதும் உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்பை நாங்கள் வழங்கி வருகிறோம். 2020-ஆம் ஆண்டுக்குள் 80 மில்லியன் இணைப்புகளை வழங்க வேண்டும் என்பது எங்களின் இலக்கு.  இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் நாங்கள் ஏற்கனவே 36 மில்லியன் இணைப்புகளை வழங்கியிருக்கிறோம்.

முற்காலத்தில், எங்களின் தாயார்களும், சகோதரிகளும் 400 சிகரெட்டுகளுக்கு சமமான புகையை சுவாசித்து வந்தனர். ஆனால், இப்போது அவர்கள் தூய்மையான சமையல் எரிவாயுவைப் பெற்றுள்ளனர்.

சமையல் எரிவாயு கிடைப்பதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உங்களில் பலர் பல ஆண்டுகளுக்கு முன், இந்தியாவை விட்டு இடம்பெயர்ந்து வந்திருப்பீர்கள். அந்தக் காலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள்கூட கள்ளச் சந்தையில் விற்கப்பட்டது உங்கள் நினைவில் இருக்கக் கூடும். சமையல் எரிவாயு இணைப்பை பெறுவதற்கு நிறைய சிரமங்களை சந்தித்திருப்பார்கள். சில நேரங்களில் எரிவாயு சிலிண்டர்களை நமது அண்டை வீட்டாரிடம் கேட்டிருப்போம். இருப்பினும், தற்போது எரிவாயு முகமையே அழைத்து உங்களுக்கு சிலிண்டர் தேவையா இல்லையா என்று கேட்கிறது!

முத்ரா போன்ற நுண்நிதித் திட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள தொழில்முனைவோர் புதிய வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்கள். இந்தத் திட்டம் என்பது தங்களின் சிறு வர்த்தகங்களுக்கு கடனோ, நிதியுதவியோ பெற முடியாதவர்களுக்கானது. இதன் விளைவாக, இந்தத் திட்டத்தின்கீழ் சுமார் 5.3 லட்சம் கோடி ரூபாய் அதாவது 90 பில்லியன் டாலர் அளவுக்கு 12 கோடி (120 மில்லியன்) கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை 12 கோடி கடன்கள் மட்டுமல்ல.  12 கோடி கனவுகள் அவர்களுக்கு நனவுகளாக நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகும்.  இது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான வழியும்கூட. இந்தத் தொழில்முனைவோரில் 74 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், திறன் இந்தியா இயக்கம், தொடங்குக இந்தியா இயக்கம், ஆகியவற்றின் மூலம் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் பொலிவுறு இந்தியா ஹேக்கத்தானில் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் நாடு எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தங்களின் ஆலோசனைகளை வழங்கினார்கள். நாடுமுழுவதும் பங்கேற்ற இந்த இளம் திறமையாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நானும் நேரத்தைச் செலவிட்டேன்.

இத்தகைய முயற்சிகளை மேம்படுத்த சர்வதேச பங்களிப்புகளை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். இன்று ‘புதிய கண்டுபிடிப்புக்கான கூட்டாளியாக’ ஸ்வீடனுடன் கையெழுத்திட்டிருக்கிறோம். ஜனவரி மாதத்தில் புதிய கண்டுபிடிப்புக்காகவும், தொழில் ஈடுபாட்டுக்காகவும் இஸ்ரேலுடன் ஐக்ரியேட் மையத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.

புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, தொழில் ஈடுபாடு ஆகியவை நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்போது மட்டும்தான் பயனுடையதாக இருக்கும்.

வாழ்வை எளிதாக்குவதில் அரசு தற்போது கவனம் செலுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன், உலகின் மிகப் பெரிய சுகாதார உத்தரவாதத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ அறிவிக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். நண்பர்களே, வேறு எந்த திட்டமும் இதனுடன் போட்டியிடும் சாத்தியமில்லை. தற்போது ஒருபகுதிதான் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது. முதலாவது, நாடுமுழுவதும் உள்ள சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை ஒருங்கிணைப்பதாகும்.  இரண்டாவது, நாட்டின் மக்கள் தொகையில் மிகவும் ஏழ்மையாக உள்ள 40 சதவீத மக்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சுகாதாரக் காப்பீடு வழங்குவது.

சகோதர, சகோதரிகளே,

இது சீர்த்திருத்தம் மட்டும் அல்ல, மாற்றமும்கூட. இந்தியாவை மாற்றியமைக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

நண்பர்களே,

இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, இந்தியா மட்டும் அல்ல, மொத்த உலகமே மகாத்மா காந்தியின் 150 வது பிறந்ததினத்தைக் கொண்டாடும். இந்த மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவை மாற்றிஅமைப்பதற்கான யுக்தியை நாங்கள் வகுக்க உள்ளோம். எங்கள் பயணம் நீண்டதாக இருக்கலாம், ஆனால் நாங்கள் சரியான பாதையில் நடைபோடுகிறோம். அதுமட்டுமல்ல இலக்கை அடைவதற்கான எங்களது தீர்மானத்தில் நாங்கள் உறுதியோடு உள்ளோம். 

நண்பர்களே,

இந்தியாவை மாற்றிஅமைப்பதற்கும் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஸ்வீடன் நாட்டுடனான இந்த உறவு மிகவும் முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம். ஸ்வீடனுடன் மட்டும் அல்ல, மற்ற நோர்டிக் நாடுகளுடனும் உள்ள எங்களது உவினை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம்.

ஸ்வீடன் மட்டும் அல்லாமல் டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களிடமும் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குக் கூடுதலாக, இந்தியா மற்றும் நோர்டிக் நாடுகளின் தலைவர்களுக்கு இடையான இந்தியா-நோர்டிக் உச்சி மாநாடும் சற்று நேரத்திற்கு முன்பு முடிவடைந்தது. புது கண்டுபிடிப்புகள், திறன் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றில் உள்ள எங்களது உவினை மேலும் வலுபடுத்த நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றிலும் அதன் சர்வதேச நிலையிலும் நீங்கள் பெரும் பங்கு ஆற்றியுள்ளீர்கள். ஸ்வீடன் நாட்டின் ஒரேயொரு இந்தியத் தூதரகம் இருக்கலாம், னால் தூதர் ஒருவர் மட்டுமே அல்ல. நீங்கள் அனைவருமே இந்திய தூதர்கள்தாம்.

இன்று நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். இந்தியாவுடனான உங்களது உறவினை வெறும் உணர்வுபூர்வமான இணைப்போடு நிறுத்திவிடாதீர்கள். இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகள், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை செய்ய விரும்புபவர்களுக்கு வளர்ந்து வரும் புதிய இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ள..

புதிய இந்தியா உங்களுக்காக்க் காத்துக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்தியாவிற்கும் ஸ்வீடனுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கிவிட்டது. அதனால், தாமதத்திற்கு எந்தக் காரணமும் இல்லை.

சகோதர, சகோதரிகளே,

நேரம் குறைவாக உள்ளது. நான் ஒரு நிகழ்ச்சிக்காக லண்டன் செல்ல வேண்டும். இந்தக் குறுகிய நேரத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு அளித்த அனைவருக்கும் எனது நன்றி. நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.

நீங்கள் அனைவரும் இங்கு வந்து புதிய இந்தியா பற்றிப் பேச எனக்கு வாய்ப்பு அளித்துள்ளீர்கள். உங்கள் விருந்தோம்பலுக்கும் ஆசீர்வாதத்திற்கும் எனது நன்றிகள். இந்தியா மற்றும் இந்திய சமூகத்திற்காக ஸ்வீடன் பிரதமர் காட்டும் அன்பிற்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது அடிமனதில் இருந்து நான் பிரதமருக்கு நன்றி கூறுகிறேன்.

நன்றி!

************



(Release ID: 1530002) Visitor Counter : 604


Read this release in: English , Marathi , Gujarati