பிரதமர் அலுவலகம்

ஸ்டாக்ஹோம் நகரில் இந்தியச் சமுதாயத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 18 APR 2018 12:34AM by PIB Chennai

ஸ்டாக்ஹோம் நகரில் இந்தியச் சமுதாயத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். ஸ்வீடன் நாட்டில் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாட்சிமை பொருந்திய ஸ்வீடன் மன்னர், ஸ்வீடன் பிரதமர் திரு. ஸ்டீஃபன் லோஃப்வென் மற்றும் ஸ்வீடன் அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்தியா இன்று ஒரு பெரிய மாற்றத்தின் இடையே உள்ளது என்று  பிரதமர் கூறினார். ”அனைவருடன் இணைந்து அனைவருக்கும் மேம்பாடு” என்ற உறுதிமொழியின் அடிப்படையில் தற்போதுள்ள இந்திய  அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த அரசு வளர்ச்சி அடைந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியா என்ற நிலை நோக்கி கடந்த நான்கு ஆண்டுகளாக உழைத்துவருகிறது என்றும் 2022 வாக்கில் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச யோகா தினம் போன்றவற்றின் மூலம் இந்தியா உலகச் சிந்தனையின் தலைமை நாடாக மீண்டும் உருவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பிரதமர் தெரிவித்தார். இன்று உலகம் இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது என்றும் இந்த வகையில் மனிதாபிமான உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகள், சர்வதேசச் சூரியசக்திக் கூட்டணி, எம்.டி.சி.ஆர்., வெஸ்சிநார் ஏற்பாடு, ஆஸ்திரேலியா குழு, போன்ற முக்கிய  அமைப்புகளில் உறுப்பினர் பதவி போன்றவற்றைப் பிரதமர் குறிப்பிட்டார். விண்வெளித்திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றார் அவர்.

டிஜிட்டல் அடிப்படை வசதிக் காரணமாகக் குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு வடிவமைப்பு மாறிவருகிறது என்று பிரதமர் கூறினார். தொழில்நுட்பம் காரணமாக வெளிப்படைத்தன்மையும், பொறுப்பேற்கும் தன்மையும் ஏற்பட்டுவருகின்றன என்றார் அவர். அரசுடன் தொடர்பு என்பது பெருமை தரும் விஷயமாக மட்டும் அல்லாமல் அன்றாடவும் நடைமுறையாக மாறிவிட்டது என்று பிரதமர் கூறினார். இது தொடர்பாக, கோப்புகளுக்கு விரைவான முடிவு காணுதல், வர்த்தகம் புரிதலில் எளிமை, ஜி.எஸ்.டி., பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப்பணம் செலுத்துதல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு இணைப்புகள் போன்றவற்றைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

முத்ரா திட்டத்தின் மூலம் தொழில்முனைவோருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். முத்ரா திட்டத்தில் இதுவரை பயன்பெற்றவர்களில் 74 சதவிதத்தினர் பெண்கள் என்றும் அவர் கூறினார். அடல் புதுமை இயக்கம், திறன் இந்தியா, தொடங்கிடு இந்தியா போன்ற திட்டங்களைப்பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

புதுமையை மேம்படுத்த சர்வதேசக் கூட்டாண்மையை இந்தியா உருவாக்கிவருவதாகப் பிரதமர் கூறினார். இந்த வகையில் ஸ்வீடன் உடனான புதுமைப்படைப்பு சம்பந்தப்பட்ட கூட்டாண்மையையும் இதே போன்ற இஸ்ரேல் உடனான திட்டத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். இந்திய அரசு வாழுதலில் எளிமை பற்றிக் கவனம செலுத்திவருவதாக அவர் கூறினார். இந்த வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைக் குறிப்பிட்ட பிரதமர், இத்திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதார உறுதி அளிப்புத் திட்டம் என்று கூறினார்.

இந்த நடவடிக்கை இந்தியாவின் மாற்றத்தைக் குறிப்பவை என்று பிரதமர் கூறினார். ஸ்வீடன் மற்றும் இதர நார்டிக் நாடுகளுடனான கூட்டாண்மை, இந்த முடிவை நோக்கிய மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் கூறினார்.

இந்தியாவுடன் தொடர்புகளை உணர்வுப்பூர்வமான நிலையோடு நிறுத்திவிடாமல் அதனை மேலும் முன்னெடுத்துச்செல்லுமாறு கூட்டத்தில் பங்கேற்றவர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். உருவாகிவரும் புதிய இந்தியாவானது புதுமைப் படைப்பு, வர்த்தகம், முதலீடுகளுக்கு அநேக வாய்ப்புகளை ஏற்படுத்திவருவதாகப் பிரதமர் கூறினார்.



(Release ID: 1529474) Visitor Counter : 168