மத்திய அமைச்சரவை

இந்தியா மற்றும் கனடா இடையே ஆராய்ச்சியை செம்மைப்படுத்துதல் மற்றும் தொழில்துறை - கல்வித் துறை கூட்டு முயற்சியில் ஒருமுகப்படுத்திய கவனம் செலுத்துவது தொடர்பான பங்கேற்புகளை ஊக்குவித்து வளர்ப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்து அமைச்சரவையில் தகவல் சமர்ப்பிப்பு

Posted On: 04 APR 2018 7:24PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா மற்றும் கனடா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் புதுடெல்லியில் 2018 பிப்ரவரி 21 ஆம் தேதி கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம்,  ஆராய்ச்சியை செம்மைப்படுத்துதல் மற்றும் தொழில் துறை - கல்வித் துறையில் இந்தியா மற்றும் கனடா இடையே கூட்டு முயற்சிகளில் பங்கேற்புகளை ஊக்குவித்து வளர்ப்பதில் ஒருமுகப்படுத்திய கவனத்தை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு நாடுகளிலும் புதுமை சிந்தனைகளை அதிகரிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உள்ளது.

திறமைகளை பகிர்ந்து கொள்வதற்கான கூட்டு முயற்சியை ஊக்குவிப்பது இந்தப் பங்களிப்பில் முக்கிய அம்சமாக இருக்கும். இந்தியா மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் பட்டப் படிப்பு அளவில் கல்வி ஆராய்ச்சி பகிர்வுகள் செய்து கொள்ளவும், இரு நாடுகளிலும் தொழில் துறை - கல்வித் துறை ஒத்துழைப்பை உருவாக்கவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. பட்டப் படிப்பு அளவிலான கல்வி ஆராய்ச்சிப் பகிர்தல் திட்டத்தின் கீழ் , அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் (STEM) மூன்றாண்டு காலத்தில் 110 மாஸ்டர் மற்றும் பி.எச்டி மாணவ ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்க இரு தரப்பாரும் உத்தேசித்துள்ளன. இந்தியாவில் தகுதியான பல்கலைக்கழகங்களில் இருந்து இவர்கள் கனடா பல்கலைக்கழக ஆராய்ச்சி ஆய்வகங்களில் 12 முதல் 24 வார கால ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். கனடா பல்கலைக்கழகங்களில் இருந்து இதே எண்ணிக்கையிலான ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் தகுதியான பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி ஆய்வகங்களில் 12 முதல் 24 வாரங்கள் ஆராய்ச்சியில் பங்கேற்பார்கள். எல்லை கடந்த தொழில் துறை - கல்வித் துறை ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ், 40 மாஸ்டர்ஸ் மற்றும் பி.எச்டி. ஆராய்ச்சி மாணவர்கள் மூன்றாண்டு காலத்துக்கு 16 முதல் 24 வாரங்கள் வரையில் தொழில் துறை பங்காளராக உள்ள நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். இந்திய மாணவர்கள் கனடா நிறுவனங்களிலும், கனடா மாணவர்கள் இந்திய நிறுவனங்களிலும் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம்.

புதிய அறிவார்ந்த விஷயங்களை உருவாக்குதல், கூட்டு அறிவியல் வெளியீடுகள், தொழில்துறை அனுபவம், IP உருவாக்கல் போன்றவற்றுக்கு இந்த கூட்டு முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை சிந்தனை ஒத்துழைப்பில் கனடாவுடன் நீண்ட காலமாக உள்ள உறவை மேலும் பலப்படுத்துவதாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கும்.

****



(Release ID: 1527772) Visitor Counter : 216


Read this release in: English , Marathi , Gujarati