மத்திய அமைச்சரவை

தேசிய திறன்மேம்பாட்டு நிதியம் (NSDF), தேசிய திறன்மேம்பாட்டுக் கழகம் (NSDC) மறுசீரமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 28 MAR 2018 7:52PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (2018, மார்ச் 28) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய திறன் மேம்பாட்டு நிதியம் (NSDF), மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) ஆகியவற்றை மறுசீரமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. அந்நிறுவனங்களின் ஆளுகை, செயலாக்கம், கண்காணிப்புக் கட்டமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் இந்தச் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மறுசீரமைப்பு நடவடிக்கை தேசிய திறன் மேம்பாட்டு நிதியத்தை (NSDF) வலுப்படுத்தும். அத்துடன், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) செயல்பாடுகளில் சிறந்த கார்ப்பரேட் ஆளுகை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றையும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை உறுதி செய்யும். இதற்கு அமைச்சரவை அளிக்கும் ஒப்புதல் தேசிய திறன் மேம்பாட்டு நிதியம் (NSDF) தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) ஒருங்கிணைந்த வாரியத்தைச் சீரமைத்து, அதன் ஆளுகை, செயலாக்கம், கண்காணிப்புக் கட்டமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்த வழியமைக்கும்.

பின்னணி:

திறன் மேம்பாட்டுக்காக ஒருங்கிணைந்த செயல்பாட்டை அமலாக்குவதற்காக தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) 2008, ஜூலையிலும் தேசிய திறன் மேம்பாட்டு நிதியம் (NSDF) 2009, ஜனவரியிலும் மத்திய நிதியமைச்சகத்தால்  அமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டவை ஆகும். தேசிய திறன் மேம்பாட்டு நிதிய அறக்கட்டளை (NSDF trust) அரசின் பல்வேறு வகையான நிதி, இதர ஏஜென்சிகள் மூலம் கிடைக்கும் நிதி ஆகியவற்றைப் பெற்றுப் பயன்படுத்தும். இதன் முக்கிய நோக்கம் பல்வேறு திட்டங்களின் மூலம் இந்திய இளைஞர்களின் ஆற்றலை மேம்படுத்தி, தூண்டிவிட்டு, அதிகரிக்கச் செய்வது ஆகும்.

தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் தேசிய திறன் மேம்பாட்டு நிதியம் முதலீட்டு மேலாண்மை உடன்பாட்டை (Investment Management Agreement) எட்டியிருக்கிறது. தேசிய திறன் மேம்பாட்டு இயக்கத்தின் (National Skill Development Mission) வகுக்கப்பட்ட குறிக்கோளை எட்டுவதற்காகவும் நாட்டில் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும் இந்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய திறன்மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) செயல்பாடுகளை தேசிய திறன் மேம்பாட்டு நிதியம் (NSDF) மேற்பார்வையிடுவதற்கும் இந்த உடன்பாடு வழிசெய்கிறது.

****


(Release ID: 1526966) Visitor Counter : 248
Read this release in: English , Assamese