மத்திய அமைச்சரவை

”வாடகைத் தாய் குழந்தை (முறைப்படுத்துதல்) மசோதா 2016”-க்கான அரசு திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 21 MAR 2018 8:24PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ”வாடகைத் தாய் குழந்தை (முறைப்படுத்துதல்) மசோதா 2016”-க்கான அரசு திருத்தம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பிறப்பை முறைப்படுத்தும் வகையில், மத்திய அரசில், தேசிய வாடகைத் தாய்க் குழந்தை வாரியம் ஒன்றையும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மாநில அளவிலான இதுபோன்ற வாரியங்கள் அல்லது தகுந்த அமைப்புகளை ஏற்படுத்த, ”வாடகைத் தாய்க் குழந்தை (முறைப்படுத்துதல்) மசோதா 2016”-ல் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தேச மசோதா, வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறப்பை, முழுமையாக முறைப்படுத்தவும், வர்த்தக ரீதியாக குழந்தை பெற்றுக் கொள்வதை தடுக்கவும், குழந்தைப் பேறு இல்லாத இந்திய தம்பதிகள்  பொதுநல அடிப்படையில் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வதை அனுமதிக்க வகைசெய்கிறது.

 நாடாளுமன்றத்தால்  இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, தேசிய அளவிலான வாடகைத் தாய்க் குழந்தை வாரியம் அமைக்கப்படும். இதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட மூன்று மாதங்களுக்குள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இதுபோன்ற வாரியங்கள் மற்றும் மாநில அளிவிலான உரிய அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

 

முக்கிய விளைவுகள்:

     இந்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு வந்த பிறகு, நாடுமுழுவதும் வாடகைத் தாய்க் குழந்தைப் பிறப்பு சேவையை முறைப்படுத்துவதுடன், விதிமுறைகளுக்குப் புறம்பாக, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை கட்டுப்படுத்தும். மேலும், வாடகைத் தாய்மார்கள் மற்றும் அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளை, வர்த்தக நோக்கில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் இந்த மசோதா தடுக்கும். மனிதக் கரு முட்டைகள் மற்றும் விந்தணுக்களை வணிக ரீதியில் விற்பனை செய்தது மற்றும் வாங்குவதும் தடை செய்யப்படும். குழந்தைப் பேறுக்கு வாய்ப்பில்லாத தம்பதியர், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு,  குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படும்.

     திருமணம் செய்து, மகப்பேறு வாய்ப்பில்லாத அனைத்து இந்திய தம்பதியரும், விதிமுறைகளின்படி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், அவர்கள் இந்த மசோதா மூலம் பயனடையலாம். மேலும், வாடகைத்தாய்முறையில்  குழந்தைப் பெற்றுக் கொடுக்கும் வாடகைத் தாயும், அவர் மூலமாக பிறக்கும் குழந்தையும் பாதுகாக்கப்படுவார்கள்.

     ஜம்மு கஷ்மீர் மாநிலம் தவிர, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இந்த மசோதா பொருந்தும்.

பின்னணி:

     பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தம்பதியர் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் கேந்திரமாக இந்தியா, உருவெடுத்துள்ள நிலையில், இந்த நடைமுறையில் விதிமுறைகளுக்கு மாறாக, முறைகேடுகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகிறது. வாடகைத் தாய்மார்களை தேவைக்குப் பயன்படுத்திவிட்டு, அவர்களையும், அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளையும் கைவிடுவது மற்றும் இடைத்தரகர்கள் மூலம் மனிதக் கரு முட்டைகள் மற்றும் விந்தணுக்களை இறக்குமதி செய்வதாகவும் புகார் வெளியாகிறது. இந்திய சட்ட ஆணையத்தின் 228-வது அறிக்கையின்படி, வணிக ரீதியாக வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை தடுக்கவும், விதிமுறைகளின்படி, வாடகைத் தாய் குழந்தை பெற்றுக் கொள்வதை அனுமதிக்கவும், தகுந்த சட்டம் ஒன்றைக் கொண்டுவருமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

     ”வாடகைத் தாய் குழந்தை (முறைப்படுத்துதல்) மசோதா 2016” மக்களவையில் 2016 நவம்பர் 21-அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு 2017 ஜனவரி 12 அன்று அனுப்பப்பட்டுள்ளது. 

     நாடாளுமன்ற நிலைக் குழு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன்  பல்வேறு கூட்டங்களை நடத்தியிருப்பதுடன், மத்திய அரசின் அமைச்சகங்கள் /  துறைகள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவோர் மற்றும் வாடகைத் தாய்மார்களுடனும், ஆலோசனைகளை நடத்தி, அவர்களது கருத்துக்களையும் பெற்றுள்ளது.

     சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின், ”வாடகைத் தாய் குழந்தை (முறைப்படுத்துதல்) மசோதா 2016” குறித்த 102-வது அறிக்கை, 2017 ஆகஸ்ட் 10-அன்று ஒரே நேரத்தில் மாநிலங்களவையிலும், மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

------



(Release ID: 1525751) Visitor Counter : 194


Read this release in: Assamese , English , Telugu