மத்திய அமைச்சரவை

தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-இலங்கை இடையே செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது

Posted On: 14 MAR 2018 6:57PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய  அமைச்சரவைக் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-இலங்கை இடையே செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம், மத்திய சட்டம் & நீதித்துறை மற்றும் மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத், 2018 ஜனவரி 15ஆம் தேதி இலங்கை சென்றபோது கையெழுத்தானது.

  இந்த ஒப்பந்தம், இருநாடுகளிடையே மின்னணு ஆளுகை, கைப்பேசி மூலம் மக்களுக்கு விரைவான சேவை அளிக்கும் கைப்பேசி ஆளுகை, மின்னணு முறையிலான பொதுச் சேவைகள் வழங்குதல், இணையதள பாதுகாப்பு, மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் புதிய தொழில் தொடங்குவது சார்ந்த சுற்றுச்சூழல் அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கிறது.

  இந்த ஒப்பந்தங்களை செயல்படுத்த, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில், இருதரப்பு பிரதிநிதிகள் அடங்கிய செயல்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறையில், அரசுகளுக்கு இடையேயும், வர்த்தகர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பும் மேம்படுத்தப்படும்.

 

பின்னணி:       

    இருதரப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான கட்டமைப்பின் மூலம்,  தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்துறைகளில், முன்னணி மற்றும் வேகமாக வளர்ந்துவரும் பிரிவுகளில் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் கட்டாயப் பணியாக்கப்பட்டுள்ளது. 

  தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களில் நெருங்கிய ஒத்துழைப்பை அதிகரிக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சக அமைப்புகள்/ முகமைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. பல்வேறு நாடுகளுடனான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், குறிப்பாக, இந்திய அரசின் “டிஜிட்டல் இந்தியா” , “இந்தியாவில் தயாரிப்போம்” போன்ற திட்டங்களின் அடிப்படையில், தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டியுள்ளது.

  பிரதமர் திரு.நரேந்திர மோடி, 2015ஆம் ஆண்டு இலங்கை சென்றபோது, இந்தியாவின் அண்டை நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கை பின்பற்றப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த, கொழும்புவில் உள்ள இந்திய தூதரகமும்,  வெளியுறவுத்துறையும், ஆக்கப்பூர்வ ஒத்துழைப்புக்கான செயல் திட்டம் ஒன்றை வகுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின. இதன்படி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, மின்ஆளுகை, இணையதள பாதுகாப்பு, வர்த்தகர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சி/கண்டுபிடிப்பு போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டது.

===========



(Release ID: 1524468) Visitor Counter : 219