பிரதமர் அலுவலகம்

கர்நாடகாவின் தும்கூருவில் நடைபெற்ற இளைஞர்கள் மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 04 MAR 2018 1:53PM by PIB Chennai

கர்நாடகாவின் தும்கூருவில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞர்கள் மாநாட்டில், காணொலிக் காட்சி மூலம் “இளைஞர் சக்தி: புதிய இந்தியாவுக்கான ஓர் இலக்கு“ என்ற கருத்துரு அடிப்படையில், பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

தும்கூருவில் உள்ள ராமகிருஷ்ண விவேகானந்தா ஆசிரமத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டியும், சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதன் 125-வது ஆண்டை கொண்டாடும் வகையிலும், சகோதரி நிவேதிதா-வின் 150-வது பிறந்த ஆண்டை கொண்டாடவும் துமாகூருவில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது பேசிய பிரதமர், இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பான முறையில் புரிந்துகொண்டு, அதற்கேற்ப பணியாற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இன்றைய நினைவு நிகழ்ச்சி, சுவாமி விவேகானந்தரை மையமாகக் கொண்டே நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்டத்தின் போது, பல்வேறு மட்டத்திலும் சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்ற ஒருங்கிணைந்த தீர்மானம் இருந்ததாக பிரதமர் கூறினார். இது சமூக சீர்திருத்த முயற்சிகளிலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 4 ஆண்டுகளாகவே மத்திய அரசு, வடகிழக்குப் பகுதியில் உணர்வுப்பூர்வமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டிருந்ததாகவும், இதில் வெற்றிபெற்றிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒருங்கிணைப்பின் மூலம் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இதனை நிறைவேற்றுவதற்காக இளைஞர்கள் ஒவ்வொருவரும் தீர்மானம் மேற்கொண்டு, தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நாட்டை கட்டமைப்பதற்காக இளைஞர்கள், தங்களது சக்தியை அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த சூழலில், முத்ரா திட்டம், சுய வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்தும் பிரதமர் பேசினார்.

இன்றைய இளைஞர்கள், நிகழ்காலமும், எதிர்காலமும் சிறப்பாக அமைவதற்காக கடந்த காலங்களில் இருந்து கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.

***



(Release ID: 1522463) Visitor Counter : 123


Read this release in: English , Urdu , Assamese