பிரதமர் அலுவலகம்

டாவோஸ் புறப்படுவதற்கு முன்பு பிரதமர் வெளியிட்ட அறிக்கை

Posted On: 21 JAN 2018 7:22PM by PIB Chennai

டாவோஸ் நகருக்குப் புறப்படுவதற்கு முன்பு பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை :

``டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் முதல்முறையாக பங்கேற்க, இந்தியாவின் நல்ல நண்பரும், உலப் பொருளாதார அமைப்பின் நிறுவனருமான பேராசிரியர் கிளாவ்ஸ் ஸ்ச்வாப் அழைப்பின் பேரில் நான் செல்கிறேன். ``மாறுபட்ட கருத்துகள் கொண்ட உலகில் பகிர்ந்து கொள்ளக் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவது'' என்பது இந்த அமைப்பின் அடிப்படை ஆய்வுப் பொருளாக உள்ளது. இது சிந்தனைக்கு உரியதாகவும், பொருத்தமானதாகவும் உள்ளது.

தற்போதைய சர்வதேச நடைமுறைகளில் தற்போதுள்ள மற்றும் புதிதாக உருவாகும் சவால்களும், உலகளாவிய நிர்வாக கட்டமைப்பும், உலகெங்கும் உள்ள தலைவர்கள், அரசுகள், கொள்கை வகுப்பாளர்கள், கார்ப்பரேட்கள் மற்றும் மக்கள் சமுதாயங்களின் தீவிர கவனத்துக்கு உரியவையாக உள்ளன.

சமீப கால ஆண்டுகளில், வெளி உலக நாடுகளுடன் அரசியல், பொருளாதாரம், மக்களுக்கு இடையிலான தொடர்பு, பாதுகாப்பு மற்றும் இதர துறைகளில் இந்தியாவின் பங்கேற்பு, உண்மையான மற்றும் செயல்திறன் மிக்க பன்முகத்தன்மை கொண்டதாக உருவாகியுள்ளது.

சர்வதேச சமுதாயத்துடன் எதிர்காலத்தில் இந்தியாவின் பங்கேற்புக்காக எனது தொலைநோக்கு சிந்தனையை டாவோஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். உலக பொருளாதார அமைப்பின் நிகழ்வுகளுக்குஅப்பாற்பட்டு, ஸ்விஸ் சம்மேளனத்தின் தலைவர் மேதகு திருவாளர் அலெய்ன் பெர்செட் மற்றும் ஸ்வீடன் பிரதமர் மேதகு திருவாளர் ஸ்டீபன் லோப்வென் ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்பு கூட்டங்களிலும் பங்கேற்கிறேன்.

இந்த இருதரப்புக் கூட்டங்கள் பலன் தரக் கூடியதாகவும், இந்த நாடுகளுடன் நமது உறவுகளை மேம்படுத்தக் கூடியதாகவும், பொருளாதார பங்கேற்புகளை பலப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.''
 

***



(Release ID: 1517366) Visitor Counter : 166


Read this release in: English , Hindi , Assamese