பிரதமர் அலுவலகம்

தேசிய சட்ட தினம் 2017 நிறைவு விழாவில் பிரதமர் உரையின் சாராம்சம்

Posted On: 26 NOV 2017 7:21PM by PIB Chennai

நாட்டின் தலைமை நீதிபதி திரு. தீபக் மிஸ்ரா அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் அவர்களே, சட்ட ஆணைய தலைவர் டாக்டர். நீதிபதி பி.எஸ். சவ்ஹான் அவர்களே, நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் அவர்களே, சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு.பி.பி.சவுத்ரி அவர்களே மற்றும் இந்த அரங்கில் உள்ள பிரமுகர்களே,

சகோதர, சகோதரிகளே,

புனிதமான இந்திய ஜனநாயகத்திற்கு இந்த நாள் மிகவும் முக்கியமானதாகும். நமது  ஜனநாயக அமைப்பின் உணர்வாக ஏதாவது ஒன்றை குறிப்பிட வேண்டுமென்றால் அது நமது அரசியலமைப்புச் சட்டமாகும். 68 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இதற்கு ஏற்பளித்தது வரலாற்று சிறப்பு மிக்க தருணமாகும். அந்த நாளில் நமது எதிர்காலத்திற்கு வழிகாட்டும் விதிகளையும் ஆணைகளையும் தேசம் முடிவு செய்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விதிகளின் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு பரிசுத்தமானதும் புனிதமானதும் ஆகும்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு தலைவணங்கும் நிகழ்வாகவும் இந்த நாள் உள்ளது. சுதந்திரத்திற்குப்பின் கோடிக்கணக்கான மக்கள் புதிய நம்பிக்கைகளோடு முன்னேற்றம் குறித்து  கனவு கண்டனர். அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் ஏற்புடையதாக இருப்பது எளிதான காரியம் அல்ல என்பதை அக்காலத்தின் மாறுபட்ட நிலைமைகள் வெளிப்படுத்தினாலும் அவர்களின் உணர்வு மேலோங்கி இருந்தது. பத்துக்கும் மேற்பட்ட சமயங்களையும், நூற்றுக்கும் அதிகமான மொழிகளையும், ஆயிரத்து 700-க்கும் கூடுதலான வட்டார மொழிகளையும் கொண்ட ஒரு நாட்டில் தங்களின் சொந்த வாழ்க்கை முறைகளோடு சிறு நகரங்களிலும், பெரு நகரங்களிலும் மட்டுமின்றி வனங்களிலும் கூட மக்கள் வாழும் ஒரு நாட்டில் அனைவரையும் ஒரே மேடையில் கொண்டு வருவதும் அவர்களின் வாழ்க்கை முறைகளுக்கு மதிப்பளிப்பதாக வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆவணத்தைத் தயாரிப்பதும் அவ்வளவு எளிதான பணியாக இருக்கவில்லை.

ஒவ்வொரு காலத்திலும் முன்வருகின்ற அனைத்து விதமான சோதனைகளையும் நமது அரசியலமைப்புச் சட்டம் சரி செய்கிறது என்கிற  உண்மைக்கு இந்த அரங்கில் அமர்ந்துள்ள ஒவ்வொருவதும் சாட்சியங்களாவர். வரும் காலத்தில் நமது நாடு சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கவல்லதாக நமது அரசியலமைப்புச் சட்டம் இருக்காது என்று கூறுவோர் தவறு செய்கிறார்கள் என்பதை அரசியல் அமைப்புச் சட்டம் நிரூபித்துள்ளது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்படாத வழிகாட்டுதல்களோ விளக்கப்படாத விஷயங்களோ ஒன்று கூட இல்லை. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த சிறப்பம்சத்தை மனதில் கொண்டு அரசியல் நிர்ணய சபையின் இடைக்கால தலைவராக இருந்த திரு. சச்சிதானந்த் சின்ஹா அவர்கள் இவ்வாறு கூறினார்: “மனிதர்களால் உருவாக்கப்பட்டு என்றும் அழியாததாக ஒரு ஆவணம் இருக்குமானால் அது இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டமாகும்

நமது அரசியல் அமைப்புச் சட்டம் உணர்வுபூர்வமாக இருப்பது போலவே உயிரோட்டமுள்ளதும் ஆகும். இது செயல்படுத்துவதற்கு உரியது. நெகிழ்வுத்தன்மைக் கொண்டது. போர்க்காலம் என்றாலும் சமாதானக்காலம் என்றாலும், நாட்டை ஒற்றுமையுடன்  பாதுகாக்கும் திறன்கொண்டது என்று பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் அவர்களே கூறியிருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின் அம்சங்களை  மனதில் கொண்டு எவராவது தவறு செய்தால் அது அரசியல் அமைப்புச் சட்டத்தின் தவறாகாது என்றும் அரசியல் அமைப்புச் சட்ட அம்சங்களை அமலாக்கும் அமைப்பின் தவறாகும் என்றும் கூட பாபா சாகேப் தெரிவித்துள்ளார்.

சகோதர, சகோதரிகளே, கடந்த 68 ஆண்டுகளில் சரியான பாதையை பின்பற்ற நமக்கு வழிகாட்டியாக அரசியல் அமைப்புச் சட்டம் விளங்கி இருக்கிறது. ஒரு வழிகாட்டியாக நமது அரசியல் அமைப்புச்  சட்டம் ஜனநாயக பாதையில் நம்மை செலுத்தியிருக்கிறது. தவறான பாதையில் பிரியாமல் நம்மை அது தடுத்து நிறுத்தியிருக்கிறது. இந்த பாதுகாவலர் குடும்பத்தின் ஒரு பகுதியாக நாம் அனைவரும் இந்த அரங்கில் கூடியிருக்கிறோம். அரசு, நீதித்துறை, நிர்வாகம் என நாம் அனைவரும் இந்த குடும்பத்தின் உறுப்பினர் போல் இருக்கிறோம்.

நண்பர்களே, இன்றைய அரசியலமைப்புச் சட்ட தினம் ஒரு முக்கியமான கேள்வியை நம்முன் வைத்துள்ளது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தால் நமது பாதுகாவலர்களால் எதிர்பார்க்கப்பட்ட மாண்புகளை ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற முறையை நாம் பின்பற்றுகிறோமா? ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் போல், ஒருவரை ஒருவர் பலப்படுத்த ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து நாம் பணியாற்றுகிறோமா? சகோதர, சகோதரிகளே, இன்று இந்த கேள்வி, நீதித்துறையில் உள்ளவர்கள் முன்னால் மட்டுமோ அல்லது அரசின் முன்னால் மட்டுமோ வைக்கப்படவில்லை. லட்சோபலட்சம் மக்கள் தங்களின் நம்பிக்கைகள் உண்மையாகும் என்று எதிர்பார்த்திருக்கும் அனைத்து நிறுவனங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு அடி வைப்பும், மக்கள் வாழக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் வளர்ச்சிக்கான  நாட்டின் தேவைகளை மக்களின் விருப்பங்களைப் புரிந்து கொண்டு ஒவ்வொருவரோடும் ஒத்துழைத்து ஆதரவளித்து வலுப்படுத்துகிறதா?

அது மிகச்சரியாக  என் நினைவில் இல்லை. இருப்பினும், ஒரு சிறுகதையை உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையேயான வேறுபாடு என்ன என்பது பற்றி மிகப்பெரிய விவாதம் நடைபெறுகிறது. புத்திசாலியானவர்கள் தங்களின் சொந்த கருத்துப்படி விளக்கம் அளிக்கிறார்கள். ஆர்வமான சிலருக்கு சொர்க்கம் என்றால் என்ன, நரகம் என்றால் என்ன என்று காட்டுவதற்கு சிலர் முடிவு செய்து அதுபற்றி சொல்கிறார்கள். அவர்கள் சொர்க்கம், நரகம் இரண்டையும் காட்டினார்கள். சொர்க்கத்திலும், நரகத்திலும் தானியக் குவியல்கள் இருக்கின்றன. மகிழ்ச்சியும், வளமும் இருக்கின்றன. சொர்க்கத்தில் இருந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், நரகத்தில் இருந்தவர்கள்  மிக மோசமான நிலையில் இருந்தனர். இவற்றில் இருந்தவர்களின் கைகளில் மிக நீளமான கரண்டிகள் கட்டப்பட்டிருந்தன. இதுதான் அவர்களின் நிலைமையாக இருந்தது. அவர்களின் தோளிலிருந்து கைகளுக்கும் அப்பால் நீண்டிருந்தது. இதனால் அவர்களால் கைகளை மடக்க இயலாது. சொர்க்கம், நரகம் என இரண்டில் இருந்தவர்களின் கைகளும் இதே முறையில் கட்டப்பட்டு இருந்தன. இருப்பினும், நரகத்தில் இருந்தவர்கள் உணவை சாப்பிட முயன்றபோது அந்த உணவு அவர்களின் முதுகுக்கு பின்னால் விழுந்தது. இதனால், அவர்கள் பட்டினி கிடந்து இறந்து போனார்கள். எல்லாம் அங்கே இருந்தாலும் இந்த பிரச்னையை தீர்க்க முடியாமல் அவர்கள் தவிக்க வேண்டியிருந்தது. இருப்பினும், சொர்க்கத்தில் நிலைமையோ வேறு விதமாக இருந்தது. அவர்களின் கைகளும் கூட மூங்கில் கொம்புகளால் இதே முறையில் கட்டப்பட்டிருந்தது. எனவே அதனை மடக்க முடியாது. ஆனால், அவர்கள் ஒரு வழியை கண்டறிந்தார்கள். உணவை எடுத்து அவர்களுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த நபருக்கு அதனை கொடுத்தார்கள். மற்றொரு நபரும் உணவை எடுத்து அவருக்கு எதிரே இருப்பவருக்கு கொடுத்தார். எல்லா கிடங்குகளிலும் உணவு தானியங்கள் நிரம்பி வழிந்தன. ஆனால், அடுத்தவருக்கு உணவளித்து அவருக்கு வலுசேர்க்க எண்ணியவர்கள் தாங்கள் இருந்த இடத்தை சொர்க்கமாக்கினார்கள். தங்களுக்கு தாங்களே உணவளித்து தங்களை வலுவாக்கிக் கொள்ள எண்ணியவர்கள் தாங்கள் இருந்த இடத்தை நரகமாக்கிக் கொண்டார்கள்.

 

சகோதர, சகோதரிகளே, 75 ஆண்டுகளுக்கு முன் 1942-ல் காந்தி அவர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தபோது தேசம் ஒரு புதிய சக்தியைக் கண்டறிந்தது. இந்த சக்தி முறைப்படியாக ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு சந்திலும், ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு சிறு நகரிலும் கொண்டு செல்லப்பட்டது. இதன் விளைவாக ஐந்து ஆண்டுகளுக்குப்பின் நாம் சுதந்திரம் பெற்றோம். ஐந்து ஆண்டுகளுக்குப்பின் நமது சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு விழாவை நாம் கொண்டாடவிருக்கிறோம். நமது விடுதலைப்போராட்ட வீரர்களின் கனவை நனவாக்க நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து அதிகாரத்தைப் பெற்றுள்ள ஒவ்வொரு அமைப்பும் அதன் சக்தியை முறைப்படுத்தி புதிய இந்தியா என்ற கனவை நனவாக்கும் நோக்கத்திற்காக அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.

நண்பர்களே, பல பத்தாண்டுகளுக்கு பிறகு நமது நாட்டில் இவ்வளவு வலுவான பொது உணர்வு காணப்படுவது இன்றைய நிலையில் மிகவும் முக்கியமான ஒன்று.  இன்று இந்தியா உலகின் மிக இளவயதுடைய நாடு.  நாட்டின் ஒவ்வொரு அரசியல் சட்டரீதியான அமைப்பும் இந்த இளைய ஆற்றலை நெறிப்படுத்துவதற்கான வகையில் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டியது அவசியம்.  20-ம் நூற்றாண்டில் இத்தகைய வாய்ப்பை நாம் தவறவிட்டோம். 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை புதிய சிகரங்களை அடையச் செய்யவும், புதிய இந்தியாவை உருவாக்கவும், நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்கவேண்டும். அந்த உறுதிமொழி சேர்ந்து உழைப்பது என்பதுதான்: ஒருவரை ஒருவர் வலுப்படுத்துவது என்பதுதான்.

சகோதரர்களே, சகோதரிகளே, அரசியல் சாசன ஆட்சிமன்றக் குழுவில், நாட்டை எதிர்நோக்கியுள்ள சவால்களை சந்திப்பதற்கான விவாதத்தின்போது அனைவரும் சேர்ந்து உழைப்பதன் முக்கியத்துவத்தை டாக்டர் ராஜேந்திர பிரசாத்  தெளிவாக  விளக்கினார். அவர் கூறியதாவது: ஏழ்மையை ஒழிக்கவும், அழுக்குகளை அகற்றவும், பசியையும் பிணியையும் முடிவுக்கு கொண்டுவரவும், பாகுபாடுகளையும், சுரண்டல்களையும் ஒழிக்கவும், சிறப்பான வாழ்க்கை நிலையை உறுதி செய்யவும், ஓய்வின்றி உழைப்போம் என அனைவருக்கும் உறுதியளிக்கிறோம்.  இந்த நடவடிக்கையில் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும், பரிவு உணர்வையும் பெறுவோம் என்பதிலும் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவின் ஆதரவையும் பெறுவோம் என்பதிலும் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்”.

சகோதரர்களே, சகோதரிகளே, நமது அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் ஈடுபாட்டுடன் பணியாற்றிய மிகச் சிறந்த தலைவர்களின் சிந்தனை காரணமாக  நமது அரசியல் சட்டம்  ஒரு சமுதாய ஆவணமாகவே கருதப்படுகிறது. இது வெறும் சட்டப்புத்தகம் அல்ல, அது சமுதாய நெடுநோக்கு ஆவணமும் ஆகும். 1947 ஆகஸ்ட் 14ம் தேதிநாடு விடுதலை பெறுவதற்கு சற்று முன்னதாக ராஜேந்திர பாபு கூறிய கருத்துக்கள் இன்றளவும் மிகவும் பொருத்தமுடையதாகவே உள்ளன. அதனையடுத்து, நாட்டின் சாதாரண மனிதனின் வாழ்க்கையை சிறப்புடையதாக மாற்றுவதும், அந்த மனிதனை ஏழ்மை, பசி, பிணி ஆகியவற்றிலிருந்து விடுவிப்பது நம் அனைவரின் இலக்காக மாறியுள்ளது. அந்த சாதாரண மனிதனுக்கு சம வாய்ப்புகளை  வழங்குதல். சம உரிமைகளை வழங்குதல் ஆகியனவும் நமது இலக்குகளாக உள்ளன.  இவை  அனைத்தையும் செய்து முடிக்க ஒவ்வொரு அமைப்பிலும், சமநிலையை மீட்டுக்கொண்டு வரவேண்டும், அதற்கான உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்.

    அதே கூட்டத்தில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், முக்கியமான மற்றொரு விஷயத்தை சமர்ப்பித்தார். அவர் கூறியதாவது: உயர் அதிகார நிலைகளில்ஊழலை அகற்றும் வரை, ஒருதலைப்பட்சத்தை வேரறுக்கும் வரை, அதிகார வேட்கை, கொள்ளை லாபம் ஈட்டுதல், கருப்புச் சந்தை ஆகியவற்றை நீக்கும்வரை நிர்வாகத்தில் திறனை அதிகரிக்க முடியாது , மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தேவை எனக் கருதும் பொருட்களை எளிதாக வழங்கவும் முடியாது”.

நண்பர்களே, 1947 ஆகஸ்ட் 14 அன்று அதாவது, நாடு விடுதலை பெறுவதற்கு சில நேரம் முன்னதாக பொறுப்புணர்வு இருந்தது, கூடவே நாட்டின் உள்ளார்ந்த வலுவற்ற நிலை குறித்த உணர்வும், இந்த வலுவற்ற நிலையை எவ்வாறு போக்குவது என்ற உணர்வும் இருந்தது. விடுதலை பெற்ற இத்தனை ஆண்டுகளுக்கு பின் இந்த உள்ளார்ந்த வலுவற்ற நிலை, நீக்கப்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. ஆகையால்தான் இந்த பிரச்சினையை நிர்வாகம், நீதித்துறை, சட்டமியற்றும் அமைப்புகள் ஆகிய மூன்று நிலைகளிலும் விவாதித்து ஆலோசிக்க வேண்டியது அவசியமாகிறது. மாறிவரும் சூழ்நிலையில், முன்னேற்றம் காண்பது குறித்து  விவாதம் அவசியம்.  பிறர் கூறுவது சரியானது அல்லது தவறானது என்பதை நாம் பிரகடனம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நமது வலுவையும், வலுவற்ற நிலைமையையும் நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

சகோதரர்களே, சகோதரிகளே, இப்போதைய சமயம் நாட்டின் பொற்காலம் போன்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு நாட்டில் தன்னம்பிக்கை உணர்வு உருவாக்கப்பட்டுள்ளது. 125 கோடி இந்திய மக்களின் மன ஆற்றல், இதில் அடித்தளமாக செயல்படுகிறது என்பது உறுதி. இத்தகைய நம்பிக்கையூட்டும் சூழ்நிலை அடிப்படையில் புதிய இந்தியா என்ற கனவை நனவாக்கும் திசையை நோக்கி நாம் முன்னேற வேண்டும். திறன்களுக்கும், ஆதாரங்களுக்கும் குறைபாடு ஏதுமில்லை, ஆனால் கால உணர்வை நாம் கட்டாயம் மனதில் கொள்ள வேண்டும். போதிய கால அவகாசம் உள்ளது என்று நாம் நினைத்தால், ஒவ்வொன்றையும் எதிர்கால சந்ததியினர் செய்து விடுவார்கள் என்று நாம் நம்பினால், எல்லாவித ஆபத்தையும் எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்வார்கள் என்று நம்பினால், வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது. நாம் என்ன  செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ அதனை இப்போதே செய்ய வேண்டும், இந்தக் காலக் கட்டத்திலேயே செய்ய வேண்டும்.  உழைப்பின் முடிவுகள் தென்படும்போது அதனை  பார்க்க நாம் இருக்க மாட்டோம் என்ற சிந்தனை காரணமாக  நாம் செயல்படாமல் நின்றுவிட முடியாது.

நண்பர்களே, நாம் இருப்போமோ இல்லையோ, நாடு தொடர்ந்து நிலைத்திருக்கும். நாம் விட்டுச் செல்லும் அமைப்புகள்பாதுகாப்பான நம்பிக்கை மிகுந்த, சுயசார்பு கொண்ட இந்தியாவை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.  மக்களின் வாழ்க்கையை எளிதானதாகவும்அவர்களது வாழ்தலில் எளிமை நிலையை உயர்த்துவதாகவும் அந்த அமைப்புகள் இருக்க வேண்டும்.

நண்பர்களே, அரசின் கடமை கட்டுப்பாட்டாளர் என்பதைவிட வசதி ஏற்படுத்தித் தருபவர் என்ற வகையில் இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். இன்றைய நிலையில், இதனை நீங்களும், அனுபவத்தில் அறிந்துள்ளீர்கள். உதாரணமாக, உங்களது பாஸ்போர்ட் எவ்வளவு விரைவில் கிடைக்கிறது. அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கிடைக்கிறது. முன்பெல்லாம் அது கிடைக்க ஒன்று அல்லது இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும்.  கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக  உங்களது வருமான வரி திருப்பி அளித்தலை பெறுவதற்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைப்பு முறைகள், வேகமடைந்துள்ளன என்பதை  நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த விரைந்த செயல்பாடு உங்கள் வாழ்க்கையை எளிதானதாக  செய்வதுடன் நடுத்தர வகுப்பினர், ஏழைமக்கள், மற்றும் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையையும் எளிதானதாக செய்துள்ளது.

    “சிகுழு மற்றும் டிகுழு காலிப்பணியிடங்களுக்கான  தேர்வு முறையில் நேர்முகத்தேர்வினை அகற்றியிருப்பதால் இளைஞர்களின் நேரம் மற்றும் பணம் எவ்வளவு மிச்சமாகிறது என்பதை சிந்தித்து பாருங்கள்.  முன்பெல்லாம் இவர்கள் தங்கள் ஆவணங்களில் அரசிதழ் பதிவு பெற்றவரின் அத்தாட்சி ஒப்பத்தை பெற அவசியம் இருந்தது, தற்போது அதற்கு தேவையில்லை. இதனையடுத்து அத்தாட்சி ஒப்பத்துக்காக இவர்கள் அலைய வேண்டிய அவசியமில்லை.  இந்த ஒப்பத்திற்காக  பலரைச் சந்தித்து  அவர்களிடமிருந்து அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி எவரையும் தெரியுமா, எம் பி அல்லது எம் எல் ஏ யாரையாவது தெரியுமா என்றெல்லாம் விசாரித்து விசனப்பட அவசியமில்லை.

நண்பர்களேநமது நாட்டின் சுமார் 27 ஆயிரம் கோடி  ரூபாய் எவ்விதக் கோரிக்கையும் இன்றி வைப்பாக உள்ளது என்பது உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் விஷயம். இந்தத் தொகை  தொழிலாளர்கள், பணியாளர்கள் தங்களது வருங்கால வைப்புக் கணக்கில் செலுத்திய தொகையாகும். பின்னர் இவர்கள் வேறு நிறுவனங்களுக்கு சென்று  பணி புரியும்போது இந்தத்  தொகை கோரிப்பெறாமலே விட்டுவிடப்படுகிறது.  ஒருவர் ஒரு நகரத்தைவிட்டு  வெளியே சென்றுவிட்ட பின், இதற்காக மீண்டும் அங்கு சென்று முயற்சி எடுக்க விரும்புவதில்லை. இது நமது தொழிலாளர்களுக்கு, நடுத்தர வகுப்பினருக்கு பெரிய பிரச்சினையாக இருந்து வந்தது. இந்தப் பிரச்சினைக்கு யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (யு ஏ என்) மூலம் அரசு தீர்வு கண்டுள்ளது.  இப்போது, தொழிலாளர் அவர் எங்கு பணியிலிருந்தாலும் அவருடன் இந்த யு.ஏ.என்  இலக்கம் இணைந்திருக்கும். இந்த இலக்கத்தை பயன்படுத்தி அவர் தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

நண்பர்களே, பிரிதாரண்யக் உபநிஷதத்தில்

 சட்டம்தான் சக்கரவர்த்திகளுக்கெல்லாம் சக்கரவர்த்தி :  அதற்கு மேல் ஏதுமில்லை என்று பொருள்பட கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்கரவர்த்தியின் அதிகாரம் சட்டத்தின் ஆட்சியில் அடங்கியிருக்கிறது. சட்டத்தின் ஆட்சிதான் பலவான்களுடன் மோதுவதற்கான ஆற்றலையும் ஊக்கத்தையும்  ஏழைகளுக்கும், நலிந்தவர்களுக்கும் வழங்குகிறது.  எமது அரசு பழைய சட்டங்களை திரும்பப் பெற்று புதிய சட்டங்களை உருவாக்கும் நடவடிக்கை மூலம் மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்க முயற்சி செய்து வருகிறது.

கடந்த மூன்றரை ஆண்டுக்காலத்தில் 1,200-க்கும் மேற்பட்ட  பழைய சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. சர்தார் பட்டேல் நாட்டை ஒருங்கிணைத்ததை போன்று, பொதுவான ஒரு நூல் தொடரில் நாட்டை ஒருங்கிணைக்கும் முயற்சியாக சரக்கு மற்றும் சேவை வரி செயல்படுத்தப்பட்டுள்ளது.  பல ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாடு-ஒருவரி என்ற கனவு நனவாகியுள்ளது.  அதேபோன்று அன்றாட வாழ்க்கையில் சாமானிய மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்காக, மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டதிருத்தம், எஸ்.சி., எஸ்.டி-யினரின் நலனுக்கான சட்டத்தை மேலும் கடுமையாக்குவது, நில - கட்டுமானத் தொழிலில் காணப்படும் தன்னிச்சையான போக்கை கட்டுப்படுத்துவதற்கான அமைப்பான ரேராவை அமைப்பது என  அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

          நண்பர்களே, கறுப்புப் பணம் குறித்த சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும் அதை செயல்படுத்த மூன்று ஆண்டுகள்  தாமதமான நிலையில், இந்த அரசு அமைக்கப்பட்ட 3 நாட்களுக்குள் இந்தக் குழு அமைக்கப்பட்டது என்பதை இந்த அரங்கத்தில் உள்ள அனைவரும் அறிந்துள்ளீர்கள்.  இந்த முடிவு கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவிற்கு சாமானிய மக்களுக்கும் இது முக்கியமாகும்.  ஒவ்வொரு ஊழலும் கறுப்புப் பணத்தோடு செய்யப்படும்  பரிவர்த்தனைகளும்  ஏதோ ஒரு முறையில்  ஏழைகளின் உரிமைகளை பறிப்பதோடு, ஏழைகளின் வாழ்க்கையில் பிரச்சினைகளை உருவாக்குகிறது.

          சகோதர-சகோதரிகளே, நாங்கள் பல சிறிய பெரிய முடிவுகளை எடுத்திருக்கிறோம். ஆனால், பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை மனதில் கொண்டே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்த முடிவுகள் பொருத்தமானவை மட்டுமல்ல, அவை அரசின் உணர்வுகளையும் பிரதிபலிக்கின்றன.  நண்பர்களே, வர்த்தகம் செய்வதற்கான உரிய சூழல் உள்ள நாட்டின் தரவரிசை, மக்களின் இலகுவான வாழ்க்கை முறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாகும்.  2014 ஆம் ஆண்டுக்கு முன்பு  வர்த்தகம் செய்வதற்கான தரவரிசையில் 142 ஆவது இடத்தில் இருந்த நாம் 100 ஆவது இடத்தை எட்டியிருக்கிறோம்.  இந்த இலக்கை நோக்கி நமது நீதித்துறை பல படிகள் முன்னேறியிருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.  இந்த வருடம் தேசிய அளவில் லோக் அதாலத் அமைப்பின் மூலமாக 18 லட்சம் விசாரணைக்கு முந்தைய மற்றும் 22 லட்சம் தேங்கியிருக்கும் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன என்பது என்னிடம் கூறப்பட்டிருக்கும் தகவலாகும்.

          சகோதர-சகோதரிகளே, பேச்சு வார்த்தைகள் மற்றும் மத்தியஸ்தத்தின் மூலம் இதுபோன்ற வழக்குகள் தீர்க்கப்படலாம் என்பதற்கு இதுவே ஆதாரமாகும்.  இதுபோன்ற வழக்குகள் குறித்து நமது நீதிமன்றங்களுக்கு முன்பாக பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.  இந்த வழக்குகள் எத்தனை வருடங்களாக நிலுவையில் உள்ளன என்பது எனக்கு தெரியாது.  என்றாலும், இந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது நீதிமன்றங்களின் சுமையை குறைத்துள்ளது.  அதுமட்டுமல்லாது நாட்டின் லோக் அதாலத் அமைப்பின் மதிப்பையும் இது கூட்டியுள்ளது.  நமது நாட்டில் நிலுவையில் உள்ள கோடிக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் லோக் அதாலத் அமைப்புகள் முக்கிய பங்களிப்பை வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

          நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து, நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வருடம் செப்டம்பர் மாதம் கடிதங்களை எழுதியுள்ளார் என்ற தகவலும் என்னிடம் கூறப்பட்டுள்ளது.  வழக்குகளை விசாரிப்பதில் உள்ள தாமதம் நமது குற்றவியல் நீதிமுறையின் ஒரு பலவீனம் என்று அவர் கருதுகிறார்.  சனிக்கிழமைகளிலும் சிறப்பு அமர்வுகள் சில வழக்குகளை விசாரிக்கலாம் என்ற ஆலோசனையிலும் எனக்கு உடன்பாடு உள்ளது.  நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக மாலைநேர நீதிமன்றங்களை நடத்த குஜராத்தும், தமிழ்நாடும் முயற்சி சோதனை முறையில் மேற்கொண்டுள்ளன.  இதுபோன்ற முயற்சிகள் மற்ற மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படலாம்.

          நண்பர்களே, மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க நீதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்கலாம்.  கணினி சார்ந்த நீதிமன்றங்களை விரிவுப்படுத்தினால் தேசிய நீதித்துறை புள்ளி விவர தொகுப்பை விரிவடையச் செய்தால் நீதிமன்றங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்கலாம்.  காணொலிக்காட்சி மூலமாக நாட்டின் நீதிமன்றங்கள் இணைக்கப்பட்டால் அது நீதிமன்றங்களுக்கும், சிறை நிர்வாகத்திற்கும் வசதியாக இருக்கும்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கிட்டதட்ட 500 நீதிமன்றங்கள் காணொலிக் காட்சி வழியாக  சிறைச்சாலைகளோடு இணைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொலைதூரப்பகுதிகளிலும், கிராமங்களிலும் வாழும் ஏழை மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்கான தொலைபேசி சட்ட திட்டம் பற்றியும் எனக்கு தகவல் கூறப்பட்டுள்ளது.  இந்த திட்டம்  விரிவாக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையிலான பொது மக்கள் பயன்பெற வழி வகை செய்யப்படும்.  நீதி கடிகாரம் எனும் புதிய திட்டத்தையும் நான் வரவேற்கிறேன்.    இந்த கடிகாரம் சமீபத்தில் நீதித்துறையில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த கடிகாரத்தின் வழியாக சிறந்த முறையில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்கள் பற்றிய தகவல் பெறப்படுகிறது.  இதுபோன்ற நீதி கடிகாரங்களை நாட்டில் உள்ள அனைத்து  நீதிமன்றங்களிலும் அமைக்க திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நீதிமன்றங்களின் தரத்தை முடிவு செய்ய நீதி கடிகாரம் ஒரு கருவியாக பயன்படுகிறது.

          தூய்மை குறித்த தரவரிசைப் பட்டியல் நகரங்களுக்கு இடையே போட்டியை உருவாக்கி இருப்பது போன்று கல்லூரிகளுக்கு இடையே ஒரு போட்டி உணர்வை உருவாக்கி இருப்பது போன்று நீதி கடிகாரம் முறையின் விரிவாக்கம் நீதிமன்றங்களுக்கு இடையே தொழில்சார்ந்த ஒரு போட்டியை உருவாக்க ஏதுவாக இருக்கும்.  இதுபோன்ற  ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை, குறைந்த கால அளவிலேயே முன்னேற்றத்தை காண உதவும் என்பது எனது அனுபவம்.  நான் சட்ட நிபுணர் அல்ல, என்றாலும், நீதிமன்றங்களுக்கு இடையேயான போட்டி நீதித்துறையை அணுகுவதற்கான எளிமையான முறை மற்றும் வாழ்க்கையை முன்னெடுத்து செல்வதற்கான எளிமை ஆகியவற்றுக்கு வசதியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.  ஏழை மக்கள் நீதி பெற நீதிமன்றங்களின் கதவுகளை தட்டுவதற்கு அஞ்சுகிறார்கள் என்பது குறித்து நேற்று மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் தமது வருத்தத்தை தெரிவித்தார்.  நண்பர்களே, ஏழை மக்களின் இந்த அச்சத்தை போக்குவதே நமது முயற்சிகளின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.  அவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான செலவும் குறைய வேண்டும்.

          நண்பர்களே, அரசியல் சட்ட தினமான இந்நாளில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாக்குரிமை பெற இருக்கும் இளைஞர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன்.  21 ஆம் நூற்றாண்டில் பிறந்த இவர்கள்  இன்னும் சில மாதங்களுக்கு பின்பு முதல்முறையாக வாக்களிக்க இருக்கின்றனர்.  21 ஆம் நூற்றாண்டை  இந்தியாவின் நூற்றாண்டாக உருவாக்கும் பொறுப்பு இந்த இளைஞர்களின் தோளில் உள்ளது.  இந்த இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களது வலிமையை அதிகரிப்பதற்கு இதுபோன்றதொரு முறையை அவர்களுக்கு தருவது நம் அனைவரின்  பொறுப்பாகும். 

இத்தருணத்தில் அறிவுத் திறன் கொண்ட  உங்கள் முன்பு மிக முக்கியமான பிரச்சினை ஒன்றை நான் எழுப்ப விரும்புகிறேன்.  அது மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது குறித்ததாகும்.   சமீப காலமாக இதுகுறித்த விவாதம் தொடங்கியுள்ளது.  ஒவ்வொரு 4 அல்லது 6 மாத இடைவெளியில் தேர்தல்களை நடத்துவதில் உள்ள சுமை மற்றும் நாட்டின் நிதி ஆதாரம்  பற்றி சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

உதாரணமாக பொதுத் தேர்தல்கள் நடத்துவதற்கான  செலவினம் பற்றி பேசினால் 2009-ஆம் ஆண்டு ரூ.1,100 கோடியும், 2014-ம் ஆண்டு பொதுத்  தேர்தலுக்கு ரூ.4000 கோடியும் செலவிடப்பட்டது. வேட்பாளர்கள்  செலவிட்ட தொகை இந்த செலவினத்திற்கு கூடுதலான தொகையாகும். ஒவ்வொரு தேர்தலிலும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை  நியமிப்பதும், லட்சக்கணக்கான பாதுகாப்புப் படை பணியாளர்களை இடம் விட்டு இடம் கொண்டு செல்வதும்அரசு அமைப்புகளில் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. மாதிரி நடத்தை நெறிகள் அமலுக்கு வந்தவுடன் அரசு முடிவுகள் மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இது போலன்றிதேர்தல்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிகள் உள்ளன. அந்நாட்டு மக்கள் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை அறிவார்கள். அந்நாடுகளின்  கொள்கை திட்டமிடல் நடைமுறை, மற்றும் அவற்றின் அமலாக்கம் திறம்பட்டதாக அமைகிறது. இந்த நடைமுறை  அந்நாடுகளின் ஆதாரங்களில் பளுவைச் சுமத்துவதில்லை. ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்துவதில் இந்தியாவுக்கு அனுபவம் உண்டு. இந்த அனுபவம், நேர்மறையாகவே அமைந்துள்ளது. எனினும், நமது சில குறைபாடுகள் காரணமாக இந்த நடைமுறை கைவிடப்பட்டது. இன்று  அரசியலமைப்பு சட்டத் தினத்தை முன்னிட்டு  இந்த முடிவை முன்னெடுத்துச் செல்லுமாறு நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

 சகோதரர்களே, சகோதரிகளே, தனிநபர், அரசு அல்லது நிறுவனம் ஆகியவற்றின் மீது எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை என்றால் ஏதாவது ஒரு நாள் அவை பிரச்சினைகளை கட்டாயம் எதிர்கொள்ளும்அவ்வப்போது நம்மை நாமே மேம்படுத்திக் கொண்டு கட்டுப்பாடான முறையில் முன்னேறுவது நமது அமைப்பு முறையின் வலு ஆகும். மக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் குறித்து நாம் பேசினால் அவை பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளன. நாடு மற்றும் சமுதாயத்தின் நலன் கருதி அவை இக்கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளன.

 உதாரணமாகதேர்தல் காலத்தில் விதிக்கப்படும் மாதிரி நடத்தை நெறிகள், எவ்விதமான சட்ட அடிப்படையையும் கொண்டவை அல்ல என்பதை உங்களில் பலர் உணர்ந்திருக்க மாட்டீர்கள். அரசியல் கட்சிகள் தாங்களாகவே முன்வந்து இந்த மாதிரி நடத்தை நெறிகளுக்கு உட்பட சம்மதித்துள்ளனர். அதே போல, அரசியல் அமைப்பை  சில வரையறைகளுக்குள் வைத்திருக்க அரசியல்வாதிகளே  பல்வேறு சட்டங்களை இயற்றி இருக்கிறார்கள். அரசியலில்நேர்மையையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதிச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனஎந்த நிறுவனமாக இருந்தாலும் சுயவரன்முறைகள், கட்டுப்பாடுகள், சமன் செய்யும் முறைகள் ஆகியன  வலுவாக இருக்கும்போது  அவையும் வலுபெற்றவையாக அமைகின்றன. அதே போல இவற்றுடன் தொடர்புடைய இதர அமைப்புகளும் வலுபெறுகின்றன.

    நமது அரசியலமைப்பின் மூன்று அடிப்படை பிரிவுகளிடையே அதிகாரச் சமநிலை விவாதிக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில், நீதித்துறை, சட்டமியற்றும் அமைப்புகள், நிர்வாகம் ஆகியவற்றின் அதிகாரச் சமநிலைநமது அரசியல் சட்டத்தின் முதுகெலும்பாக உள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும். இந்த அதிகார சமநிலை காரணமாக அவசரநிலை பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்திலும்கூட நமது நாடு ஜனநாயகப் பாதையிலிருந்து தடம்புரண்டு விடாமல் பாதுகாக்கப்பட்டது.

நண்பர்களே, அந்த சமயத்தில் உச்சநீதிமன்றம், தனது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் கூறியதாவது: “ நமது அரசியல் சட்ட அடிப்படை அமைப்பின் கீழ், அந்தச் சட்டத்தின்படி பிரிக்கப்பட்டுள்ள மூன்று அமைப்புகள் தங்களது எல்லைகளை மீறி மற்றதன் எல்லைகளில் நுழைய இயலாது. இதுவே, நமது அரசியல் சட்டத்தின் இறையாண்மை கொள்கையின் தர்கரீதியான மற்றும் இயற்கையான அர்த்தம்”. அரசியல் சட்டத்தின் இந்த வலுவான தன்மை காரணமாக பாபா சாஹேப் இதனை ஒரு அடிப்படை ஆவணம் என்று கருதினார். அதாவது நிர்வாகம், நீதித்துறை, சட்டமியற்றும் அமைப்புகள் ஆகியவற்றின் நிலையையும் . அதிகாரத்தையும் தெளிவாக வரையறுக்கும் ஒரு ஆவணம் என்று அவர் கருதினார்.

   டாக்டர் அம்பேத்கர் கூறினார்: “இந்தியாவின் மூன்று அமைப்புகளை உருவாக்குவது மட்டுமே அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கமல்ல. அவற்றின் அதிகார வரம்புகளை வரையறை செய்வதும் அதன் நோக்கமாகும். இது மிகவும் முக்கியமானது. வரம்புகள் வரையறுக்கப்படாவிட்டால் இந்த நிறுவனங்கள் சுயேச்சதிகாரம் பெற்றவையாக மாறி ஒன்றை ஒன்று சுரண்டுவதாக அமைந்துவிடும். எனவே, சட்டமியற்றும் அமைப்புகள் எந்த சட்டத்தையும் இயற்ற சுதந்திரம் உள்ளவையாக இருக்க வேண்டும். நிர்வாகம் எந்தவித முடிவையும் மேற்கொள்ள சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். எந்தவொரு சட்டத்தையும் விளக்கி வியாக்கியானம் வழங்க உச்சநீதிமன்றம் சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும்”. இன்று  பாபா சாஹேபின் போதனைகளை பின்பற்றி இன்றைய நிலையை அடைந்துள்ளோம். அரசியல் சட்டத்தினத்தை கொண்டாடி பெருமையடைகிறோம். அரசியல் அமைப்புச் சட்டத்தின் இந்த அம்சத்தை, அதாவது மூன்று அமைப்புகளிடையேயான சமநிலையை   உச்சநீதிமன்றம் தனது பல்வேறு தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது.  1967-ல் தனது தீர்ப்புகளில் ஒன்றில் உச்சநீதிமன்றம் கூறியது: “ சட்டமியற்றும் அமைப்புகள், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றின் எல்லைகளை நமது அரசியல் சட்டம் துல்லியமாக வரையறைத்துள்ளது. இந்த அமைப்புகள் தங்களுக்குரிய அதிகாரங்களை  அடுத்தவற்றின் வரம்புகளில் தலையிடாமல் பயன்படுத்த வேண்டும் என அரசியல் சட்டம் எதிர்பார்க்கிறது”.

சகோதரர்களே, சகோதரிகளேஇன்று  புதிய இந்தியா கனவை நனவாக்க சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொண்டுவரும் நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின்  போதனைகள் மென்மேலும் அர்த்தமுள்ளவையாக மாறி வருகின்றன. நாம் நமது வரம்புக்குட்பட்டு செயல்படும் அதே சமயம் மக்களின் எதிர்பார்ப்புகளையும், உள்ளக்கிடக்கைகளையும் நிறைவு செய்ய  வேண்டும். இன்று மொத்த உலகமுமே நம்பிக்கையுடன் இந்தியாவை ஏறெடுத்து வருகிறது. அவை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு தீர்வுகாண அந்நாடுகள் இந்தியாவை எதிர்பார்த்துள்ளன. பல நாடுகள் தங்களது மேம்பாட்டுக்காக இந்தியாவுடன் தோள் சேர்த்து நடக்க  விருப்பப்படுகின்றன. இந்தப் பின்னணியில்  சட்டமியற்றும் அமைப்புகள், நிர்வாகம், நீதித்துறை ஆகிய அனைத்தும்  தங்களது வரம்புகளை கருத்தில் கொண்டு முன்னேறுவது அவசியம்.

நண்பர்களே, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காக சட்ட ஆணையத்துக்கும், நிதி ஆயோக்குக்கும் எனது பாராட்டுக்கள். இந்த நிகழ்ச்சியின்போது அரசியல் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட மூன்று அமைப்புகளும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தன. பல்வேறு நிபுணர்கள், அறிஞர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்தக் கருத்துக்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த இத்தகைய கருத்துக்கள் அனைத்தும் அத்தியாவசியமானவை. இது நமது முதிர்வு நிலையைக் காட்டுகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த செயல்படுத்தக்கூடிய அனைத்து அம்சங்களையும் நாம் இணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த பேச்சுவார்த்தையின் நடைமுறையை நிரந்தர அம்சமாக மாற்றுவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

சகோதரர்களே, சகோதரிகளே, இன்றைய நிலையில், நாம் ஒருவரை ஒருவர் வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்ஒரு நிறுவனம் மற்றதன்  தேவைகளை  புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் மற்ற நிறுவனங்கள் எதிர்நோக்கும் சவால்களையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மூன்று நிறுவனங்களும்அரசியல் சட்டப்படியான தங்களது கடமைகளை கவனத்தில் கொண்டால்தான்  அவை நாட்டின் மக்களுக்கு உரிமையுடன், “தயவு செய்து உங்கள் கடமைகளை ஆற்றுங்கள், சமுதாயம் மற்றும் நாட்டைப் பற்றிச் சிந்தியுங்கள், நான் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையை விட்டுவிடுங்கள்என்று கூறமுடியும்.

நண்பர்களேஉரிமைகள் குறித்த  கருத்து வேறுபாடு காரணமாக கடமைகள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், கடமையை நாம் புறக்கணித்தால் நாடு முன்னேற வாய்ப்பே இல்லை.

    அரசியலமைப்புச் சட்டதின வாழ்த்துக்களை  உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

  உங்கள் அனைவருக்கும் நன்றி. நாம் அனைவரும் புதிய உற்சாகத்துடன், புதிய உறுதிமொழியை ஏற்று, புதிய திறன்களுடன், 2022 அதாவது சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு நிறைவை நோக்கி முன்னேறுவோம்.

அனைவருக்கும் நன்றி

ஜெய்ஹிந்த்

************



(Release ID: 1511074) Visitor Counter : 1033


Read this release in: English , Gujarati , Kannada