PIB Backgrounder
azadi ka amrit mahotsav

மேம்படுத்தப்படும் கிராமப்புற சுற்றுலா - வலுவடையும் உள்ளூர் பொருளாதாரம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 NOV 2026 11:11AM by PIB Chennai

இந்தியாவில் கிராமப்புற சுற்றுலாவை மேம்படுத்தி, மக்களின் வருமானத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கிராமங்களில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, 2021 டிசம்பரில் கிராமப்புற சுற்றுலா மேம்பாட்டுக்கான தேசியக் கொள்கை வெளியிடப்பட்டது. கிராமங்களை சுற்றுலாத் தலங்களாக உருவாக்குதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், இணையதள வசதிகளை ஏற்படுத்துதல், உள்ளூர் மக்களுக்குப் பயிற்சி அளித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.

கிராமப்புற சுற்றுலா மூலம் விவசாயக் குடும்பங்கள், கைவினைக் கலைஞர்கள், சிறு தொழில் முனைவோர் கூடுதல் வருமானம் பெற முடியும். வீடுகளில் சுற்றுலாப் பயணிகளைத் தங்கவைக்கும் திட்டம், பண்ணைச் சுற்றுலா, பாரம்பரிய உணவு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்றவை இதற்கு உதவும். குறிப்பாக, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், உணவுப் பொருட்களையும், நினைவுப் பரிசுகளையும் தயாரித்து விற்பனை செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். சுற்றுலா வழிகாட்டுதல், தங்குமிடப் பராமரிப்பு, போக்குவரத்து போன்ற பணிகள் மூலம் இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கும்.

கிராமப்புற சுற்றுலாவுக்கான தேசியத் திட்டம் ஆறு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. அவை சிறந்த கொள்கைகள், இணையதளத் தொழில்நுட்பம், கிராம சுற்றுலாக் குழுமங்கள், விளம்பரம், திறன் பயிற்சி, நிர்வாக ஒருங்கிணைப்பு ஆகியவையாகும். சுற்றுலா வாய்ப்புள்ள ஐந்து முதல் ஏழு கிராமங்களை ஒன்றிணைத்து மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டில் கிராமப்புற வீடுகளில் சுற்றுலாப் பயணிகளைத் தங்கவைக்கும் திட்டத்துக்கான தனிக் கொள்கையும் உருவாக்கப்பட்டது. இதன்படி, மாநில அரசுகள் மானியம், தொழில் பயிற்சி, இணையதள முன்பதிவு வசதி போன்ற உதவிகளை வழங்க ஊக்குவிக்கப்படுகின்றன.

2023-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியில், 2024-ல் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 991 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2024-ல் எட்டு பிரிவுகளின் கீழ் 36 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழ்நாட்டின் கீழடி, மேல்கலிங்கம்பட்டி ஆகிய கிராமங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

 பழங்குடியினப் பகுதிகளில் 1,000 தங்கும் வீடுகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ், ஒரு கிராமத்துக்கு ரூ.5 லட்சம், ஒரு குடும்பத்துக்கு இரண்டு புதிய அறைகள் கட்ட ரூ.5 லட்சம், பழைய அறைகளைப் புதுப்பிக்க ரூ.3 லட்சம் வரை உதவி வழங்கப்படுகிறது. 2026 செப்டம்பர் 29 நிலவரப்படி, எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ரூ.24.53 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் கீழும் தங்கும் இல்லங்களுக்குத் தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையில் பெண்கள், இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ், 2026 மார்ச் மாதம் வரை 4,382 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

கிராமங்களின் பாரம்பரியம், இயற்கை வளங்கள், பாரம்பரியத் தொழில்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து, உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் நிலையான சுற்றுலாவை வளர்ப்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343378&reg=3&lang=1

****

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343447) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी