மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசி தமிழ் சங்கமம் 5.0-ஐ குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது காசி தமிழ் சங்கமம்: மத்திய கல்வி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2026 6:51PM by PIB Chennai

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது நிகழ்வை குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (28.11.2026) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், 10 வெளிநாட்டு மொழிகள் உட்பட 50 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நாகரிகம், பண்பாடு, ஆன்மிகத் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் கருப்பொருளாக, 'திருக்குறள் பயில்வோம்' என்பது அமைந்துள்ளது எனவும், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களிடம் திருக்குறளின் காலத்தால் அழியாத அறிவுரைகளையும் அறநெறிகளையும் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

திருக்குறள் என்பது அனைவருக்கும் பொதுவான வாழ்க்கை வழிகாட்டி என்று அவர் குறிப்பிட்டார். சமத்துவம், மனிதநேயம், நேர்மை ஆகிய உயர்ந்த கருத்துகளைத் திருக்குறள் எடுத்துரைக்கிறது என்று அவர் கூறினார். இக்கருத்துகள் மொழி, மாநிலம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்தவை என்றும் அவர் தெரிவித்தார். திருக்குறளின் கருத்துகளைப் படித்து, அவற்றை அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

திருக்குறள் 10 வெளிநாட்டு மொழிகள் உட்பட 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க சாதனை என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். திருவள்ளுவரின் கருத்துகள் உலகம் முழுவதற்கும் பொருந்தக்கூடியவை என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய கல்வி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தமது உரையில், இந்தியாவின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றில் நீண்டகாலமாக நிலவி வரும் ஒற்றுமையை எடுத்துரைத்தார். இந்தியாவின் பண்பாட்டுத் தொடர்புகள் தொன்றுதொட்டு இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு, காசி ஆகிய பகுதிகளின் வளமான பண்பாடு, ஆன்மிகம், அறிவுசார் மரபுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற நோக்கத்தை காசி தமிழ் சங்கமம் நிறைவேற்றுவதாக அவர் தெரிவித்தார்.

திருக்குறளின் கருத்துகளைக் கற்றுக்கொள்வதுடன் அவற்றை வாழ்க்கையில் பின்பற்றுவதும் முக்கியம் என்று திரு பிரல்ஹாத் ஜோஷி வலியுறுத்தினார். நல்லொழுக்கம், சிறந்த ஆட்சி நிர்வாகம், மனித உறவுகள், அறநெறிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் திருக்குறள் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

ஐந்தாவது காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளதாக அவர் கூறினார். இந்த ஆண்டு நிகழ்வில் பெண்களின் பங்கேற்புக்கும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்துவதற்கு உதவிய சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேச அரசு, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார். காசி தமிழ் சங்கமத்தின் செய்தியை நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நாகரிக, பண்பாட்டுத் தொடர்புகளை எடுத்துரைத்தார். இந்தியாவின் ஒற்றுமை என்பது பொதுவான பண்பாட்டு மரபுகள், ஆன்மிகப் பாரம்பரியம், பண்பாட்டு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பல்வேறு மொழிகளும் பண்பாட்டு மரபுகளும் பொதுவான பண்பாட்டு உணர்வின் மூலம் ஒன்றிணைவதை காசி தமிழ் சங்கமம் கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டார். இது ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையிலான வரலாற்று, ஆன்மிகத் தொடர்புகளை அவர் எடுத்துரைத்தார். தென்காசி, மகரிஷி அகத்தியர், ஆதிசங்கரர், குமரகுருபரர், சுப்பிரமணிய பாரதியார் ஆகியோருடன் தொடர்புடைய மரபுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வரலாற்றுத் தொடர்புகள், தலைமுறை தலைமுறையாக இந்தியாவின் நாகரிக ஒற்றுமையை வலுப்படுத்தி வந்த ஆழமான பண்பாட்டுப் பரிமாற்றங்களைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார். காசி தமிழ் சங்கமம் என்பது மக்களின் இதயங்களை இணைத்து, பண்பாட்டுப் பரிமாற்றத்தின் மூலம் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வாகும் என்று திரு யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச மாநில அமைச்சர்கள் திரு அனில் ராஜ்பர், திரு ரவீந்திர ஜெய்ஸ்வால், திரு தயாசங்கர் மிஸ்ரா, திரு ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

மத்திய உயர்கல்வித் துறைச் செயலர் திருமதி தீப்தி கௌர் முகர்ஜி, இந்திய மொழிகள் குழுத் தலைவர் திரு சாமு கிருஷ்ண சாஸ்திரி, சென்னை ஐஐடி இயக்குநர் திரு வி. காமகோடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அஜித் குமார் சதுர்வேதி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஆன்மிகத் தலைவர்கள், அறிஞர்கள், தமிழ்நாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது நிகழ்வு 2026 நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறுகிறது. மத்திய கல்வி அமைச்சகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், உத்தரப் பிரதேச அரசு ஆகியவற்றுடன் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343142&reg=3

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343212) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam