சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் அம்பேத்கர் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் வரை நிதியுதவி: குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ள எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர் பயன்பெறலாம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2026 5:34PM by PIB Chennai

பட்டியல் சமூக, பழங்குடியின மக்கள், உயிருக்கு ஆபத்தான கடும் நோய்களுக்குச் சிகிச்சை பெற டாக்டர் அம்பேத்கர் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தின்படி, ஆண்டு குடும்ப வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ள எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர் விண்ணப்பிக்கலாம். இதயம், சிறுநீரகம், கல்லீரல், மூளை தொடர்பான நோய்கள், புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சை ஆகியவற்றுக்கு இந்த உதவி வழங்கப்படும்.

டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை இயக்குநர் திரு வினேஷ் பச்நந்தா இது குறித்துக் கூறுகையில், திருத்தப்பட்ட இத்திட்டம் 2026 ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதாகவும், எஸ்.சி, எஸ்.டி பிரிவு ஏழைக் குடும்பங்களின் மருத்துவச் செலவுச் சுமையைக் குறைப்பதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

சிகிச்சை வகையைப் பொறுத்து இதய அறுவைச் சிகிச்சைக்கு ரூ.1.50 லட்சம், சிறுநீரக அறுவைச் சிகிச்சை அல்லது டயாலிசிஸுக்கு ரூ.3.50 லட்சம், புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.2.50 லட்சம், மூளை அறுவைச் சிகிச்சைக்கு ரூ.2 லட்சம், சிறுநீரகம் அல்லது உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.3.50 லட்சம், முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சைக்கு ரூ.1.50 லட்சம், பிற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த தொபை உச்சவரம்புக்கு உட்பட்டு, நேரடியாக மருத்துவமனைக்குச் செலுத்தப்படும்.  அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். விண்ணப்பத்துடன் வருமானச் சான்று, சாதிச் சான்று, குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை, புகைப்படம், மருத்துவமனை வழங்கும் சிகிச்சைச் செலவு மதிப்பீட்டுச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சிகிச்சை தொடங்குவதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்பாக, டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை இயக்குநர், 15, ஜன்பத், புதுதில்லி – 110001 என்ற முகவரிக்குச் சென்றடைய வேண்டும். ஏற்கெனவே செய்துகொண்ட சிகிச்சைக்கான செலவுத் தொகையைத் திரும்பப் பொதுவாக அனுமதிக்கப்பட மாட்டாது.

விண்ணப்ப விவரங்கள், தகுதிகள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றை https://www.dosje.gov.in/schemes-and-services/dr-ambedkar-medical-aid-scheme என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343084&reg=3&lang=1

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343192) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi